சில கிறுக்கல்கள் கவிதையானது - ஒரு கவிதை வெண்பா ஆனது

சில கிறுக்கல்கள் கவிதையானது..... ஒரு கவிதை வெண்பா ஆனது

முதலில் ஒத்துக் கொள்ள வேண்டியது நான் ஒரு கவிஞன் அல்ல என்று... அறுபத்து மூன்று வயதுவரைக் கவிதைகள் ஒன்றும் யாத்திலன் (அட.!). தமிழ் தாய் மொழி என்றாலும் தீராக் காதல் / பற்று எல்லாம் கிடையாது. படித்தது முழுவதும் ஆங்கில வழிக் கல்வி... இரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது அப்பாவுக்கு வேலை நிமித்தம் கேரளாவுக்கு மாற்றல்... அங்கே எனக்கு ஒரு தமிழாசிரியர் நன்கு(?) தமிழ் கற்பித்து உயர் வகுப்பில் சேர்த்து விடுவதாக கூறி தனிவகுப்பு (private tution) நடத்தினார். அவர் வசிக்கும் இடம் முதல் தளத்தில் ஒரு பெரிய காம்பௌண்டுக்குள் இருக்கும். மரத்தாலான படியில் இரு படிகளுக்கு இடையே இடைவெளி இருக்கும்... எனக்கு உயரம் என்றால் பயம்... இந்தப் படிகளை தவழ்ந்து தவழ்ந்துதான் ஏறுவேன்... ஏதோ பேய் பங்களாவுக்குள் செல்வது போல் இருக்கும்.... பல நாட்கள் டூசனுக்கு டிமிக்கி. அம்மாவிடம் திட்டு, அடி... கடைசியில் ஒரு நாள் ஆசிரியரைக் காணவில்லை...(எனக்கு ஒரே மகிழ்ச்சி) நிகர நஷ்ட்டம் தமிழால் எனக்கு ஒரு வருடப் படிப்பு...

அடுத்த வருடம் மூன்றாம் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வி, மொழிப் பாடம் மலையாளம்., அது ஒரு பெண்கள் பள்ளி - எப்படி சேர்த்துக் கொண்டார்கள் என்று தெரியவில்லை... நாற்பது பேர் கொண்ட வகுப்பில் இரண்டே ஆண் பிள்ளைகள்... மூன்று, நான்காம் வகுப்புகளில் 'கோகுலத்தில் கண்ணன்' ஐந்தாம் வகுப்பு வேறு பள்ளி கூடுதலாக சமஸ்கிருதம் படிக்க வேண்டும்.....

ஆறாம் வகுப்பு படிக்க வேண்டிய பொழுது அப்பாவுக்கு மீண்டும் வேலை மாற்றம் மீண்டும் சென்னைக்கு.... தேடிப் பிடித்து மலையாளம் ஒரு மொழியாகவும் ஆங்கிலம் பயிற்று மொழியாகவும் உள்ள ஒரே பள்ளியில் ஆறாம் வகுப்புக்கான நுழைவுத் தேர்வு எழுதி வெற்றி யடைய வில்லை (பெயில் என்பதை நாசூக்காக சொல்கிறாராம்....) வேறு வழி இல்லை தமிழை ஒரு மொழியாக பயின்றே ஆகவேண்டிய நிர்பந்தம்... இன்னும் இரண்டே வாரத்தில் இன்னுமொறு நுழைவுத் தேர்வு, அதில் தமிழில் வேறு எழுத வேண்டும்... கையில் ஒரு படம் போட்ட அட்டையை கொடுத்தார்கள்... ஒரு பக்கம் அ முதல் ஃ வரை பெரிய கட்டத்தில் அம்மா,ஆடு, இலை, ஈச்சை படங்களுடன்,.. மறு பக்கம் சின்னச் சின்ன கட்டத்தில் க்.ங்,ச்.. க. கா, கி,கீ,. 12×18 எழுத்துக்கள்,. அப்புறம் 'மகனே உன் சமத்து... இன்னும் இரண்டு வாரத்தில் தமிழில் எழுதப் பழகடா, பரீட்ச்சைக்குப் போகணும்,. உன் எதிர் காலம் உன் கையில்...'

ஒலி வடிவமாக அறிந்த தாய் மொழியை எழுத்து வடிவமாக இரண்டு வாரம் பயில நுழைவுப் பரீட்சையில் தென்னை மரத்தைப் பற்றி கட்டுரை எழுதச் சொன்னார்கள். மலபாரிலிருந்து வருபவனுக்கு தென்னை மரம் வெறும் கால் தூசு. நான் பார்க்காத தென்னை மரங்களா..... மலையாளத்தில் பார்த்த தென்னையை தமிழில் ஒலி வடிவமாக்கி, மானசீகமாக என் 'தமிழட்டையை' கண் முன் கொணர்ந்து மாற்றிவிட்டேன் தமிழ் கட்டுரையாக ,. தேர்விலும் வெற்றி. ஆங்கில வழிப் பயிற்சியில் தமிழ் ஒரு பாடமாக இனிதே சென்னையில் கல்வி ஆறாம் வகுப்பில் தொடக்கம்.. இந்த 'அட்டைத் தமிழனுக்கு' தமிழ் மேல் 'அட்டை போல்' ஒன்றும் பற்று ஏற்படவில்லை., பள்ளியில் நானூறு பேர் படித்த ஆறாம் வகுப்பில் ஐம்பது பேரே ஆங்கில வழியில் பயின்றனர்., (எல்லா பள்ளியிலும் இதே நிலை தான்) எட்டாம் வகுப்பிலிருந்து கூடுதலாக இந்தி அல்லது சமஸ்கிருதம்.

இந்த கால கட்டத்தில்தான் அரசியலும் மொழியும் இரண்டறக் கலக்க தமிழுக்கே முன்னுரிமை என்ற குரல் ஓங்கி ஒலிக்க, இந்தித் திணிப்பு வன்மையாக எதிர்க்கப்பட்டது,. ஆங்கில வழியில் படித்துக் கொண்டிருந்த என்னைப் போன்றவர்களுக்கு எதிர்காலம் பற்றி கலக்கமாக இருந்தது,. மொழிப் போராட்டம் வெற்றியடைய ஆட்சி மாறிய கையோடு கூடுதல் மொழியான இந்தி / சமஸ்கிருதம் ஒழிக்கப் பட்டது. (ஹையா ஜாலி! ஒரு மொழி படிக்க வேண்டாம்) ஐயம் பெருமாள் கோனார் துணையுடன் தவ்வித் தவ்வி SSLC முடிக்க, கல்லூரியிலும் இரண்டு வருடம் தமிழ் தொடர்ந்தது... தமிழாசிரியர்களின் திறமையால் தமிழ் போரடிக்கவில்லை., ஆனாலும் தமிழில் பாஸ் மார்க் வாங்குவதற்கு மேல் பற்று ஒன்றும் ஏற்படவில்லை...

அப்பொழுது நடந்த ஒரு விஷயம் தமிழ் மேல் ஒரு வெறுப்பையே தோற்றுவித்தது,. தமிழ் காவலர்கள் என போற்றப் பட்ட ஆட்சியாளர்கள் அரசவையில் "தமிழில் பயிலாதவர்களை வங்காள விரிகுடாவில் தூக்கி ஏறிவோம்" என அறிவித்தார்கள்... பத்திரிகைச் செய்தி பார்த்த ஆங்கிலத்தில் பயிலும் எங்கள் கல்லூரி மாணவர்கள் (அப்பொழுது 90% கல்லூரியில் ஆங்கில வழிதான் கல்வி, இப்பொழுது கொஞ்சம் முன்னேறி 99% ஆகியிருக்கும் என நினைக்கிறேன்!)

அப்பொழுது அதிகமாக பள்ளி இறுதி ஆண்டுவரை 95% தமிழ் வழிதான் படித்தார்கள்.. தமிழால் ஆட்சிக்கு வந்தபின் நிறைய ஆங்கில வழிப் பள்ளிகள் (Matriculation) தொடங்கப் பட்டு 90% மேல் இப்பொழுது ஆங்கில வழியேதான் பயிலுகிறார்கள்... வால்க டாமில்!

சரி விஷயத்தியத்திற்கு வருவோம். எங்கே வங்காள விரிகுடாவில் தூக்கி எறிந்து விடுவார்களோ என்று அஞ்சி (பொங்கி?) மாணவர்கள் புறப்பட்டோம் கோட்டையை நோக்கி (எந்த அரசியலும் கிடையாது... அது எப்படி எங்களை வங்காள விரிகுடாவில் தூக்கி எறிவோம் என்று கூறலாம் என்ற ஒரே கேள்வி... கோட்டைமுன் மாணவர் பேரணி "மன்னிப்புக் கேள்.," கோஷம்... மதியம் மணி ஒன்றைத் தாண்ட யாரும் நகரவில்லை,.. ஒருசிலர் நைசாக பிற்பகல் காட்சிக்கு நழுவிச் சென்றனர்.... ஒரு மூன்று மணி அளவில் காவல் துறையினர் எங்களைப் பார்த்து "வா" வென்று அழைக்க, பேச்சு வார்த்தைக்கு அழைக்கிறார்கள் என்று நினைத்து (ஏமாந்து) முன்னே செல்ல தடியடிப் பிரயோகம் தொடங்கினர். மாணவர்களை ஓட ஓட விரட்டி அடிக்க அந்த இடம் இப்போழுததான் கலவரம் நடந்த பூமி போல் ஆனது., எங்கு பார்த்தாலும் ஒற்றைச் செறுப்புகள்...சிதறிய சாப்பாட்டு பெட்டிகள், புத்தகங்கள்... ஒரு இருபது பேர் (என்னையும் சேர்த்து) நகரக் கூட முடியாத படி தரையில் கிடந்தனர்.. விஸ்வநாதனுக்கு மண்டையில் அடிபட்டு ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.... விஸ்வநாதன் 'பூஞ்சியம்' என்றால் நான் ஒன்று... அவன் என்மேல் சாய எண் பத்து (10) போல் இருந்தோம்.. அவன் ரத்தம் என் சட்டையில்.... காவல் துறையினர் தடியால் என் முதுகை நன்கு பதம் பார்த்திருந்தனனர் (ஐயகோ "அட்டைத் தமிழனை" புறமுதுகிட வைத்து விட்டனரே! என் தாய் கேட்டால் 'ஏனடா அங்கே சென்றாய்?' என்று தொடையை நிமிண்டி சிவக்க வைத்து விடுவாளே! )

தடியடிப் பிரயோகம் முடிந்தபின் அடிபட்டு தரையில் சிதறிக் கிடந்த இருபது பேரைக் கொத்தாக அள்ளி காவல்துறை வண்டியில் ஏற்றி சென்னை பொது மருத்துவ மனை வளாகத்தில் இறக்கி விட்டுச் சென்று விட்டனர்... அடுத்த நாள் கல்லூரிக்கு முன் காவல் துறையுடன் கல் வீச்சு, கண்ணீர் புகை வீச்சு சண்டை நடந்ததாகவும், கல்லூரிக்குப் பத்து நாள் விடுமுறையும், கல்லூரி மாணவர் தங்கும் விடுதி மூடப்படுவதாகவும் அறிவிக்கப் பட்டது...

முக்கியமாக ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் இந்த போராட்டத்தைப் பற்றியோ , பல மாணவர்கள் அடி வாங்கி இரதத காயம் அடைந்தததைப் பற்றியோ எந்த ஊடகத்திலும் செய்தி வரவில்லை... எந்தக் கட்சியும் வக்காலத்து வாங்கவில்லை (யார் வங்காள விரிகுடாவில் தூக்கி எறியப் பட்டால் அவர்களுக்கு என்ன) ஆளும் கட்சியின் ஆதிக்க பலத்தால் முழுமையாக இருட்டடிப்பு செய்யப் பட்டது... எங்கள் கல்லூரி முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்கி நாங்களும் அமைதியாகி விட்டோம் . எப்போதோ தலை தூக்கும் முதுகு வலி மட்டும் தமிழால் பட்ட அடியை நினைவுறுத்தும்...

தமிழோடு இப்படி முரணாக பிணைந்தவன் கவிதைகள்(?) எழுதியது எப்படி..?

பள்ளிப் படிப்பு முடித்து 43 ஆண்டுகளுக்குப் பின், சென்னையில் எப்பொழுதும் போல் கொளுத்தும் ஒரு முற்பகல் வெய்யிலில், நல்ல வசதியானவர்களையும் ஆவலுடன் பிச்சைக்காரர்கள் போல் தெருவோரம் தவமிருக்க வைக்கும் அந்த வெளிநாட்டு தூதரக வாயிலில் என் வகுப்பு நண்பனைச் சந்திக்க நேர்ந்தது. அவர் மூலம் சக மாணவர்கள் ஒன்று சேரும் முயற்சி நடக்கிறது என்றும் இணையதளம் மூலம் தொடர்பில் இருக்கலாம் என அழைக்க நண்பர்களுடன் இணைந்தேன். நிதமும் பல கருத்துப் பறிமாற்றங்களுக்கு இடையே நண்பர் ஒருவர் நல்ல கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தார்., நல்ல சிந்தனையுடன், வளமான தமிழில் அடிக்கடி எங்கள் நண்பர் வட்டத்திற்கு கவிதைகளை வழங்கிக் கொண்டிருந்தார் அதில் ஒன்று 'சாளரம் திற.... சுவாசி' உலகத்தைப் பார் அதில் உள்ள நல்லன வற்றை ஏற்றுக் கொள் என்ற கருத்தில் இருந்தது... எனக்கு எதார்த்த உலகில் சாளரம் திறந்தால் என்ன இருக்கும் என்ற எண்ணம் வர அதை கவிதை போல் எழுதிப் பகிர்ந்தேன்..(கவிதை எண்: 209807).

சாளரம் திற, சுவாசி என்றான் நண்பன்,
முயற்சிப்போம்:

சன்னல் திறந்தேன் சாகா சூரியன் சிரித்தான்
ஏளனப் பார்வையால் எனை சுட்டு எரித்தான்

தென்றல் காற்றில் சாக்கடை துற் நாற்றம்
கடகட என கழிவு நீர்ஊர்தி பேரொலி
கனரக வாகன புகை புழுதி காற்று
சுற்று முற்றும் பசுமையில்லா பல்லடுக்கு அகங்கள்
மூடிய சன்னல்கள் முகம் காட்ட மறுக்க

எதற்காக சன்னல் திற என்றாய் நணபா?
ஓ! மனக் கதவை திறக்கச் சொன்னாயோ?
முயற்சிப்போம்

பார்க்கும் இட மெல்லாம் பாரா முகங்கள்
செல்லில் முகம் புதைத்து துலைத்த அகங்கள்
கண்பேசா வாய் பேசி நகரும் சனங்கள
கவிதைகள் மூலம் கடக்குமோ இக்கணங்கள்

பள்ளிப் பிள்ளைக்கும் பரவசம் மிக அவசரம்
பாரம் சுமந்து முதுகோ கூன் நிலவரம்
பாடம், special class, டூசன், கோச்சிங்
எல்லாம் முடித்தபின ஏது ரிலாக்சிங்?

நண்பா இங்கே நான் எதை தேடுவது?

பாதையில் சென்றால் பலவித மனிதர்கள்
போதையில் சிலர் மன உபாதையில் பலர்
பாரா முகங்களில் யார் மனம் நாட
கூறாய் நண்பா என் சன்னல் திறந்திருக்கு!

அன்புடன்
முரளி
===================================
நண்பர் Ramani Loganathan இதே தலைப்பில் எழுதிய கவிதைக்கு பதில் கவிதை இது.

நண்பர்கள் 'ஆஹா' 'ஓஹோ' என்று பாராட்ட எனக்கு என்னவோ "வடிவேலுவை குத்துச் சண்டை களத்துக்குள் தூக்கிப் போட்டு 'சிங்கம் புறப்ப்ப்பட்ட்ட்டிருச்ச்ச்சுசு....' என்று குரல் கொடுப்பாரே" அதுதான் நினைவுக்கு வந்தது,.. இருந்தாலும் உள்ளுக்குள் சொல்ல வொண்ணா இன்பம் இருந்தது... உற்சாகத்தில் மனதில் தோன்றிய தெல்லாம் கவிதையென எழுத ஆரம்பித்தேன்.. தாங்க முடியாத நண்பர் 'இவனை திசை திருப்பவில்லை என்றால் நம்மை மூழ்கடித்து விடுவான்' எனறு என்னை 'எழுது தளம்' பக்கம் திருப்பி விட்டார்...(கவுண்டமணி செந்திலிடம் சொல்வாரே "நீ சொல்றதெல்லாம் கல்வெட்டில் பதிந்து தஞ்சாவூர் கோயில் முன்னால் போய் உட்கார்ந்து கொள்.. வருங்கால சந்ததிகள் பயனடையும்.... " கிட்ட தட்ட அதேதான்)

எழது தளத்தில் தோழமைகள் 'நன்று' 'அருமை' 'சிறப்பு' 'தொடருங்கள்' என்று சிங்கத்தை சீண்டிக் கொண்டே இருந்தார்கள்... நானும் தோன்றுவதை எல்லாம் எழுதி உடனுக்குடன் பதிந்து கொண்டிருந்தேன்.... அந்த உண்மையான கருத்து வரும்வரை.., நான் நகைச் சுவைக்காக பதிந்த "நானும் கவிஞன்" இதோ:

நானும் கவிஞன்

எண்ணங்கள் கோர்த்து எழத்தில் வடித்தால்
நீங்களும் இன்று புது கவிஞன்
ஓரடியில் நான்கு சொற்களில் புனைந்தால்
ஒண்ணே முக்கால் அடியில் வள்ளுவன்
மூணே முக்கால் அடியில் கம்பநாடன்
வீறு கொண்டு எழுந்தால் பாரதி
கனிரசம் சொட்ட வடித்தால் பாரதிதாசன்
அடி சீர் விட்டால் விடுதலை கவிதை
குற்றம் குறை கூற கூட்டமைப்பு இல்லை
சுட்டெரிக்கவும் இன்று நக்கீரனும் இல்லை
இஷ்ட்டப்படி நான் எழுதும் போதெல்லாம்
கஷ்ட்டப்படாமல் போற்றி எனை கவிஞனாக்குவீர்
எதுகையும் மோனையம் துணை நின்று
கருத்தும் வடிவமும் ஒருங்கே இணைந்து
நால்வர் பாராட்டும் பெற்றால் இங்கே
நானும் கவிஞன்! நானும் கவிஞன்!
=======================================
விடுதலை கவிதை = Free verse

இந்தக் கவிதைக்கு அன்பர்:

"கொஞ்சமாவது யாப்பு அறிந்து எழுதினால் அழகு கூடும்..ஆனந்தமுந்தான்"
அதற்கு நான்:
"கருத்துக்கு நன்றி"
அதற்கு அவர்:
"நல்ல வேளை, நான் கவிஞன் அல்ல."

என் கவிதையால் எவ்வளவு மனம் நொந்திருக்கிறார்... இனிமேல் யாரையும் இதுபோல் மனம் நோகச் செய்யக் கூடாது... உடனே நண்பனை அணுகி "யாப்பு என்றால் என்ன...? " என்று வினவ அதற்கு கவிதை கட்டமைப்பு இலக்கணம் என்றும் அதன்படி எழுதுவது கஷ்ட்டம் என்றும் அறிந்தேன்... ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது., இனிமேல் எழதுவதில் வார்த்தைகள் ஜாக்கிரதையாகத் தேர்வு செய்ய வேண்டும் என்றும்.,. ஒரு ஒழுங்குமுறை வேண்டும் என்று உணர்ந்தேன்... எழுதியதைப் பலமுறை படித்து செதுக்கிய பின்னே பதிவிடுவது.... தினம் ஒன்றிலிருந்து வாரம் ஒன்றிரண்டு ஆனது... நல்லவிதமான கருத்துக்களும் வந்தன (ஆனாலும் அன்று என்னைத் திருத்த முற்பட்டவர் இன்னும் என் பக்கம் திரும்ப வில்லை)

நல்லா ஒரு ஃப்ளோலதான போயிட்டிருக்கு... எங்கிறீற்களா.....விதி யாரை விட்டது ,...

எழுத்து நண்பர் ஒருவர் என் கீழ்கண்ட கவிதை ஒன்றில் (கவிதை எண்: 231336)

கொஞ்சிக் கொஞ்சி பேசி
----------------------------------
உள்ளத்து உவகை உயிர் மூச்சில்
எள்ளளவும் இல்லை மனதில் கல்மிஷம்
பிள்ளைக் கனி வாய் மலர்தல்
தெள்ளத் தெளி தேன் அமுது

முல்லை முகிழ் வாய் அலர்ந்து
சொல்லை தன் நா வளைத்து
சிந்தும் இதழ் சில்லரைகள்
இல்லை இதற்கு ஈடு இனிது

காலை முதல் மாலை வரை
வேலை பளு தான் அழுத்த
சோலை மலை சூழ் தென்றல்
சொக்க வைக்க காத்திருக்கும்

உங்கள் பல மன சுமையால்
திங்கள் போல் சுடர் வீசும்
தங்கத்தை தவிர்த் திடாதீர்
தரணியில் அதுவே கற்பகதரு
---------------------------------------
வெண்பாவின் சாயல் இருக்கிறது.... யாப்பு கற்று எழுதினால் மரபுக் கவிதை நன்றாக இருக்கும் என கருத்திட.... மீண்டும் என் கவிதை வாழ்வில் 'யாப்பு' ஒரு கலக்கத்தை ஏற்படுத்த, விடுவதில்லை இனி, எப்பாடு பட்டாவது உனை அறிந்தே தீருவது என கூகுள் ஆசானிடம் சரணடைய ஓரிரண்டு தளத்தில் அருமையாக பாடம் படித்து எற்கனவே வெண்பா போல் இருந்த கவிதையை இலக்கணப் படி வெண்பாவாக மாற்றிப் பதிந்த பொது சில நல்ல உள்ளங்கள் தனி விடுகையில் பிழை திருத்தி இலக்கணவடிவில் நேரிசை வெண்பா என அறியப்பட்டு ஒரிரு பாராட்டுக்களும் பெற, மேலும் உற்று நோக்குகையில் எதுகையும் மோனையும் ஏகத்துக்கு குறைபட பதிவை நிக்கி விட்டேன். அந்த பா செப்பனிடப் படுகிறது... அதுவரை அந்த எதுகையும் மோனையும் குறைந்த பா கீழே:

கொஞ்சிக் கொஞ்சி பேசி - வெண்பா
------------------------------------------------------

உள்ளத்தே உற்சாகப் பேருவகைத் துள்ளலும்
எள்ளத் தளவேனும் கல்மிஷம் உள்ளில்லா
பிள்ளைக் கனிவாய் மலர்ந்தால் பருகிட
தெள்ளத் தெளிதேன் அமுது

கிள்ளை முகிழ்வா யலர்ந்திட பூஞ்சிரிப்பில்
சொல்லை இனிதாய் குழைத்திட சிந்துமிதழ்
சில்லரை நெஞ்சத்தில் கொஞ்ச அவனியில்
மிஞ்சிட, உண்டோ இணை !

காலை முதல்மாலை வேளையில் கூடுமந்த
வேலை பளுதான் அழுத்த துயர்நீக்கும்
சோலை மலைசூழ் இதம்தென் றலைப்போலே
சொக்கத் தருமே சுகம்

உங்கள் பலமனச்சு மையால் அனுதினமும்
திங்கள் தளிராய் குளிர்க்காற்று வீசுமந்த
தங்கத்தை என்றும் தவிர்த்திடா தீர்கள்
தரணியில் அஃதன்றோ காப்பு


அம்புட்டுதேன்.....!

-----------------------------------------முரளி

எழுதியவர் : முரளி (16-Feb-15, 10:28 am)
பார்வை : 619

சிறந்த கட்டுரைகள்

மேலே