எங்கள் ஊர் ராஜகுமாரி

எங்கள் ஊர் ராஜகுமாரி
இன்னும்
அவளாகத்தான்
இருக்கிறாள்....
அவளின் இறப்பில்
கலந்து கொள்ளதவர்கள்
அனைவருமே அவள் இரவைக்
கொன்றவர்கள்.....
முதல் சுடிதாரை
முதல் ஜீன்ஸ் பேண்ட்டை
அவள்தான் அறிமுகம்
செய்தாள்....
ஆனால்
பெரும்பாலும் அவளாடைகள்
கொடியில்தான்
தூங்கிக் கொண்டிருக்கும்....
எப்போதும் மூடியே
கிடக்கும் கதவின் பின்னால்
பவுடரின் தீரா தனிமையை
இப்போதும் உணரலாம்....
ஆர்வக் கோளாறில்
காசு சேர்த்து
கதவு தட்டிய அன்று,
அவள்
பார்த்த பார்வையில்
எங்கள் கடவுளுக்கு
பேய் பிடித்ததாக
நினைத்தேன்....
பின் ஒரு காலத்தில்
என்னை வரச் சொன்ன
அவள் கிழவி ஆக
இருந்தாள்.....
என் மடியில்
படுத்துக் கொண்டே
தூங்கிப் போனாள்.....
பேச்சுகளற்ற எங்களினிடையே
கதவு
திறந்து கிடந்தது....
அவளுக்காக நான்
சேர்த்திய காசு
இன்னும் என்
பழைய உண்டியலில்
புதைந்து கிடக்கிறது....
காலத்தைக் கடந்த அவள்
இன்னும்
ராஜகுமாரியாகவே இருக்கிறாள்...
கவிஜி