இருள் விதானம்
நிச்சயமேதுமின்றி
நிச்சயிக்கப்பட்ட
நாட்களின்
மிகுந்து வழிகிற
துயரங்களின்
நடன பிம்பங்களில்
அறுந்து விழுந்து
தொங்கும் இறுமாப்பில் -
கயமையும் சுயநலமும்
இயல்பாகிப்போனயெனது
பாவனைகளின்
பெரும் புழுதி துடைத்து
எவர் பாதமும் பதியாத
எனது இருள் விதானங்களின்
பீடத்தில்
உத்தரவேதும் கோராது
நீயுனது
புன்னைகையின் ஓயாத
உராய்வுகளோடு
கூடிய
இதழ் ப்ரியா சிரிப்பினை
எங்ஙனம் ஸ்தாபித்தாய் ?
புறக்கணித்தலில்
உறைந்து
வெடிப்புகளுடன் கூடிய
வெறுப்பாகிப் போனயென்
பனிப் பாளங்களை
ஜீவித்துவம் நிரம்பியயுனது
கதிர்வீச்சுகளினாலுருக்கி
கோலோச்சுகிறாய் !
உனது கோலோச்சலில்
இச்சிறு வரியோனின்
குசேல அவல் நிறை
பிரியத்தினாலுனது
அட்சயம் -
நிரம்பி வழிகையில்
தொழுகையின் உப்பரிகையில்
வடியும்
எனதொரு துளிக் கண்ணீரினை
தீர்த்தமாயுனது
திருக் கோவிலின்
படிக்கட்டுகளில்
தெளித்து
தீட்சையடைவேன் .