எங்க ஊரு வாழக்கை -ரகு
வரப்புகளின் ஈரத்தில்
வெடிப்புற்ற கால்கள்
களையெடுத்தும் கதிரறுத்தும்
காய்த்துப்போனக் கைகள்
உழைத்துழைத்து இளகி இறுகி
இருட்டைக் குழைத்த தேகங்கள்
நிறம்மாறி வேர் பட்டு
மிச்சப்பட்ட கேசங்கள்
வறுமை வியாபித்த முகவரியின்
நிரந்தர வசிப்பாளிகள் என்று பல
அடையாளங் கூடிய
எங்குலப் பெண்டிர் பலர்
பாழ்பட்ட விவசாயத்தை விட்டுப்
பட்டணங் குடியேறினர்
வரையறுக்கப்பட்ட குறுகிய
வாசல் புதிது
அளந்தளந்து ஊற்றும்
தண்ணீர் புதிது
முகங்கொடுத்துப் பேசாத
மனிதர்கள் புதிது
காசுகொடுத்து வாங்கும்
பதப்படுத்தப்பட்ட காய்கறி புதிது
அதிகாலை எழுவதும்
தெருக்களையே மொழுகுவதும்
புதிதானோர் கண்டால்
புலங்காங்கிதமாவதும்-என்றே
பழகிப்போனவர்களை
விட்டேற்றியாய் நாள்கடத்திப்
படுத்தியது பட்டணம்
நிலா வெளிச்சத்தில்
வாசலில் கூடிக் களிப்பதும்
விடியும் முன் எழுந்து
வாழ்க்கையைப் படிப்பதும்
கோழி ஆடு மாடுகளுடனான
வேற்றின பரஸ்பரம் -என
நெஞ்சில் நிழலாடிக் கிளர்ந்த
ஞாபகங்கள்
விழிகளை ஈரப்படுத்தக்
காய்ந்துபோனத் தத்தம்
கழனிகளில் கால்பதித்திருந்தனர்
மீண்டும் அவர்கள்
அன்றிரவு
தானும் தொலையாமல் தன்னுள்
மனிதரையும் தொலைக்காமல்
ஒளிரும் பஞ்சாயத்துத்
தொலைக்காட்சியில் கிராமமே
கூடியிருந்தபோது
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் .......
முழங்கிக் கொண்டிருந்தது !