அரைநொடியும்

நெடுஞ்சாலை நெரிசலிலே நீண்டு நெருங்கி
..........நின்றிருந்த வண்டிகளின் இடையில் ஒன்றாய்
.....நெடுநேரம் நிற்கவைக்கும் விதியை நொந்து
..........போக்குவரத்துத் துறையதையும் சேர்த்துத் திட்டிக்

கடுகடுத்துக் காத்திருந்து கிடைத்த வாய்ப்பில்
..........கடுகளவாய்த் தினையளவாய்ச் சிறுகச் சிறுகக்
.....கடலாமை போல்வண்டி முன்னே செல்ல,
..........காலையதன் புதுமையெலாம் கரைந்து கொள்ள,

“படுபாவி! பொறம்போக்கு! எவனோ ஒருவன்
..........பொறுப்பின்றி வண்டியோட்டி கவிழ்ந்தி ருப்பான்!
.....பாவிஅவ னால்இங்குப் பலரும் இன்று
..........பணிகளுக்குத் தாமதமாய்ப் போறோம்!” என்றே

அடுக்கடுக்காய் மனத்திற்குள் திட்டிக் கொண்டே
..........அவ்விபத்தைக் கடக்கையிலே மனத்தில் மின்னல்:
.....’அரைநொடியும் அவ்வுயிர்க்காய் இரங்கல் இன்றி
..........அவசரமாய்ப் போய்எதைத்தான் சாதித் தோமோ?!’


[பதினாறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்]

எழுதியவர் : விஜயநரசிம்மன் (21-Feb-15, 8:42 am)
பார்வை : 311

மேலே