இமயம்

எங்களது குற்றாலம் ரோட்டரி க்ளப் கூட்டத்திற்கு திரு .பாரதிராஜா அவர்கள் வருகை புரிந்த போது நான் வாசித்த கவிதை.

" இமயம் ஓன்று
இடம் பெயந்து
இங்கு வந்திருக்கிறதாமே ?
பெருமையுடன் கேட்டது
பொதிகை மலை -
எப்படிக் கண்டுபிடித்தாய் என்றேன் ?

எழுபதுகளின் இறுதியில்
ஒரு பதினாறு வயது மயிலின்
புது வரவால்
தமிழர்களின் புலன்களெல்லாம்
எப்படி
பூப் பூத்துக் கிடந்ததோ
அதே போன்று
இன்று என் மலைமேனியின் மலர்களிலெல்லாம்
ஒரு பரவசம் பரவிக்கிடக்கிறதே
என்றது பொதிகை ....
உண்மை தான்
இன்று ஒரு நாள்
இங்கு
அல்லி நகரத்துத் தேனிச் சாரல்
நனைந்து கொள்ளுங்கள் மலர்களே ...
உங்களிடம் வண்டுகள் தேனெடுப்பது தானே வழக்கம்
இன்று நீங்கள்
எங்கள் தேனிச் சாரலிடம் தேனெடுத்துக் கொள்ளுங்கள் !

அரிதாரம் மட்டுமே
ஆட்சி செய்து கொண்டிருந்த
செல்லுலாயிட் பிம்பங்களில்
முதல்முறையாய் கிராமத்துச் சூரியனை
சுள்ளென்று அடிக்க வைத்து
எங்கள் அன்னை பூமியின்
அருமை சொன்னவன் வந்திருக்கிறான்
பெருகிப் பாய்க அருவிகளே ...

நகரத்துப் பவுடர் நெடிகளுக்கு
மத்தியில்
மூச்சுத் திணறிக் கொண்டிருந்த
தமிழ்சினிமாவில் ...
எங்கள் புழுதிக் கலாச்சாரத்தின்
புனிதம் சொன்னவன் வந்திருக்கிறான்
மணம் வீசுங்கள் மூலிகைகளே !

நீச்சல் தெரியாதவர்களைக் கூட
உள்ளிளுத்துக்கொள்கிற
ஆற்றின் அபாயச் சுழி மாதிரி -
வெறும் சினிமா தானே என்று
வந்தவர்களைக் கூட
வசியம் செய்து வசப்படுத்திக் கொள்ளும்
பாத்திரங்களைப் படைத்தவன்
வந்திருக்கிறான்
மகிழ்ந்து கொள்ளுங்கள் மலைகளே !

தாஜ்மகாலைப் போன்ற ராஜமாடங்களில்
மட்டுமே
கூடு கட்டிக் கொண்டிருந்த
தென்னிந்தியச் சினிமா
இவன் வருகைக்குப் பின்னர்
குடிசைகளின் இரப்புகளில்
அடைகாக்கத் தொடங்கியது
குஞ்சுகள் பொரிந்தன -
மயில் , சப்பாணி , பரட்டை , குருவம்மா
முத்துப்பேச்சி , பாலுத்தேவர் , குயில் , கருத்தம்மாவென
ராஜப் பிரவாகமாய் கரை புரண்டு ஓடி
வறண்டு கிடந்த தமிழ்சினிமாவின்
வெள்ளித்திரையில்
கிராமங்களை விளையச் செய்த
எங்கள் தெற்கத்திச் ஜீவநதி வந்திருக்கிறது
வணங்கிக் கொள் தாமிரபரணியே !

தன் கலாச்சாரத் தறியில்
கண்டாங்கிச் சேலைகளை
நெய்து
அவைகளை காஞ்சிப்பட்டென
பள பளக்க வைத்த
ஜரிகை கனவுத்தொழிற்ச்சாலையின்
காவிய நாயகன் வந்திருக்கிறான்
கர்வப் பட்டுக்கொள்ளுங்கள் கார்முகில்களே !

சத்யஜித்ரே , மிருணாள்சென் . ஷியாம்பெனகல்
போன்ற யதார்த்தச் சிற்ப்பிகளுக்கிச்
சிறிதும் குறைவின்றி
கிராமத்து மண் பிசைந்து
நீ வனைந்த ஜீவசிற்பங்களெல்லாம்
உயிர் கொண்டு உலவின
எங்களோடு !

தண்டவாளத்தில் மயிலோடு சேர்ந்து
தமிழ் ரசிகர்களும் தவம் கிடந்தனர்
சப்பாணிக்காக ....
மின்னிடும் அந்தக் கரும்பூனையின்
கண்களிரண்டும் தொலை தூர
நகம் வளர்த்து
மனப் பிராந்தியமெங்கும்
பிராண்டத்தான் செய்கிறது
இன்று வரை சிகப்பு ரோஜாவாய் !

கடலோரத்தில் நீ கவிதை பாடினாய்
தமிழகமே முத்துக் குளித்தது ...

வேதம் புதிதில் நீ கொடுத்த அறை
திரைவிட்டு அகன்ற பின்பும்
விழுந்து கொண்டேயிருந்தது ...

பெண்சிசுக் கொலையாளிகளின்
மனசாட்சியை
கள்ளிப்பாலும் , நெல்மணியும்
திணித்து உலுக்கினாள் உன் கருத்தம்மா ...

உலக மகா பிறவிக் கலைஞனின்
மணிமுடியின் தூசிதுடைத்து
நீ பதித்த
வைரக்கல்லாய் முதல்மரியாதை ..
தமிழகத்தில் முதல்மரியாதையில்
மயங்காதவர்கள் இரண்டே இரண்டு பேர் தான்
ஒன்று அவன் பார்வையற்றவனாயிருக்க வேண்டும்
அல்லது
மனநிலை பாதிக்கப் பட்டவனாயிருக்க வேண்டும் ...

இதோ இன்னமும்
நீ அமர்ந்து
வேறு யாருமே அமரமுடியா
இமயச் சிம்மாசனம்
அப்படியே உள்ளது
உன் கூப்பிய கைகளையும்
கம்பீரக் குரலையும் கேட்டு
செங்காத்து பூமியில் கரையக்
காத்திருக்கும் கோடான கோடி
தமிழர்களின் கண்ணுக்கும் கருத்துக்கும்
விருந்தளிக்க
மீண்டு வா...மீண்டும் வா ....

எழுதியவர் : பாலா (21-Feb-15, 6:11 pm)
Tanglish : imayam
பார்வை : 153

மேலே