தமிழினமே புறப்படு
உணர்வுகளை மதித்தாள்
உணர்ச்சிகளை விதைத்தாள்
கண்மணிகளை நனைத்தாள்
கண்ணீரை வார்த்தாள்..!
தமிழெந்தன் சொந்தமென
தரணியெங்கும் பொங்கியெழ
அறுவடையை செய்தவளோ
அறம்காத்து நின்றாளே..!
உரிமைகளை யிழந்தோம்
உடைமைகளை யிழந்தோம்
உயிரிருக்கும் வரையிலும்
உறவுகளால் இணைவோம்..!
நெஞ்சமதில் வலிசுமந்து
நேர்மையதை மனம்சுமக்க
குருதியிலே வோடவிட்டாள்
குலம்காக்கும் வீரமகள்..!
தன்னினத்தை காப்பாற்ற
தமிழ்நாட்டில் குரலில்லை
தட்டிகேட்டுப் போனாளோ
தான்கொண்ட குரலாலே..!
இருக்கும்வரை சுருட்டிவிட
இடம்தேடும் கயவர்களை
ஈழமதில் விரட்டிவிடவே
இங்குவந்தாள் நமையழைக்க..!
வாய்கிழிய பேசுகின்றோம்..
வாழ்கதமிழ் சொல்கின்றோம்
தமிழ்நாடு யெனச்சொல்லி
தயங்கித்தான் வாழ்கின்றோம்..!
பொறுத்தவரை போதுமென்று
பொங்கியெழு தமிழினமே
நடக்குமென்ற வாய்மொழியை
நடத்திவிட இப்பொழுதே...!

