எதையும் சாதிக்க முடியும்
தான் செல்லும் சாலை வழியே யானைக்கூட்டம் ஒன்றை பார்க்கிறான் ஒருவன். யானைகளை பார்த்து அச்சப்பட்ட வேளையில், அவற்றின் கால்கள் மிக மெல்லிய ஒரு சங்கிலியால் கட்டப்பட்டிருந்ததை கவனிக்கிறான்.
எந்நேரமும் அவை அந்த சங்கிலியை சுலபமாக அறுத்துக்கொண்டு ஓடமுடியும் என்று அவனுக்கு தோன்றியது. அருகே அதன் பாகனும் நின்று கொண்டிருப்பதை பார்த்ததும் அவன் அச்சம் ஓரளவு நீங்கியது. பாகனிடம்,
“இப்படி ஒரு மெலிசான சங்கிலியில் யானைகளை காட்டியிருக்கீங்களே… அதுக திடீர்னு அறுத்துகிட்டு ஓடினா என்னாகிறது?” என்று கவலையுடன் கேட்கிறான்.
“அவை குட்டிகளாக இருந்தபோது இதே மெல்லிய சங்கிலியால் தான் அவைகளை கட்டுவோம். அப்போது அவற்றுக்கு அந்த சங்கிலியே போதுமானதாக இருந்தது. ஆனால் அவைகள் வளரும்போது, அந்த சங்கிலியை தங்களால் அறுக்கவே முடியாது என்கிற மனோபாவத்தில் தான் வளர்ந்தன.
எனவே தற்போது பன்மடங்கு பலத்துடன் அவை வளர்ந்து விட்டபோதும் சங்கிலி பிணைப்பிலிருந்து விடுபட அவை முயற்சிக்கவேயில்லை. எனக்கும் வேறு சங்கிலி வாங்கும் அவசியமே இல்லாமல் போய்விட்டது!” என்றான்.
இந்த பதிலை கேட்டு அவன் ஆச்சரியப்பட்டான்.
எந்நேரமும் அவற்றால் தாங்கள் கட்டப்பட்டுள்ள தளைகளை அறுக்க முடியும் என்றாலும், தங்களால் முடியாது என்று நினைக்கும் ஒரே காரணத்தால் அவை அடிமை வாழ்வை வாழ்கின்றன என்று அவன் புரிந்துகொண்டான்.
இந்த யானைகளை போலத் தான் பலர் தங்கள் பலமும் தகுதியும் தங்களுக்கு தெரியாமலே வாழ்ந்து வருகிறார்கள்.
முன்பு ஒரு முறை முயற்சித்து தோற்ற காரணத்தால் தம்மால் செய்யக்கூடிய எத்தனையோ மகத்தான விஷயங்களை செய்ய முடியாதவர்களாக இருக்கிறார்கள்.
சூழ்நிலைகள் அடிமையாக்கியிருக்கும் ஒரு வாழ்வை வாழ்ந்து வருகிறார்கள்.எப்பொழுதே கிடைத்த தோல்வியை மனதில் வைத்து ஏன் மகத்தான வெற்றிகளை தவற விடவேண்டும்?
தோல்வி என்பது வெற்றிக்கான படிகளில் ஒரு அங்கம்.
அதன் மீது காலை வைக்காது எவரும் வெற்றி என்னும்
சிகரத்தின் மீது ஏறவே முடியாது..,
ஆம்,இனிய நண்பர்களே.,
மனித மனம் அளப்பரிய சக்தி கொண்டது.
ஒன்றை நினைத்தால் அதை நிச்சயம் அடையக்கூடிய சக்தியை தரவல்லது.
எழுந்திருங்கள். துணிவோடு நில்லுங்கள்.
உங்களை சுற்றி பிணைக்கப்பட்டுள்ள
தளைகளை அறுத்தெறியுங்கள்.
உங்களால் நிச்சயம் எதையும் சாதிக்க முடியும்.