மனமென்னுமோர் மர்மக்குகை

மனமென்னுமோர் மர்மக்குகை!!
கானல் நீரும் இங்கு கனமழை
தூறும்,,
விருட்சங்கள் கூட வாழையாகி
சரியும்,,
விழுதுகளெல்லாம் விடம் புடைக்க
படமெடுத்து பயமுறுத்தும்!!
வெடித்தும் சிதறும் எரிமலைக் குழம்பை
பூவாளி அள்ளி ஊற்ற,,
பூத்துக்குலுங்கிடும்,,
ஏதேன் தோட்டத்தில்
ஆதாமின் ஆப்பிள்கள்!!
விரட்டும்
வண்ணத்துப்பூச்சிகளுக்கு அஞ்சி
அரிமாக்களும் பஞ்சாய் பறக்கும்!!
பூக்களெல்லாம் போர்க்களத்தில்
காம்புகளை கணையாக்கி
துளைத்திடும்
எஃகு தளவாடங்களையும்!!
உதடுகள் ஒலியின்றி மௌனம் பேசையிலும்
பேரிரைச்சலோடு
மடை உடைந்து கசியும்
ஒரு துளி வெள்ளத்தில்
மூழ்கிப் போகும் நிலத்தடி பாயும் கோடி நதிமூலங்களும்!!
ஆரிக்கிள்களும் வெண்டிரிக்கள்களும்
பூட்டிய அறைகளுக்குள்
ஓயாது விதண்டா வாதம் செய்ய ,,
நீயூரான்களை பிடித்தாட்டும்
ஹார்மோன் சாத்தனோ
நாசுக்காய்
வேதம் ஓதும்!!
தமனிகளோ ஆக்சிஜனை சிரைக்குள்
ஒளித்து
விக்கலை காட்டிக்கொடுக்கும்,,
அதுவே அனிச்சையாய்
தலையிலும் தட்டும்!!
இமைகள் மூடும் போதெல்லாம்
பொழுதோடு,
விழிகளில் பெருக்கிடும் உவர்நீரில்
முப்போகும் காணும்
கன்னங்களின்
சகாராக்களில் கரைபுரளும் சமுத்திரத்திர சுனாமிகளிடம்
கெஞ்சி கொஞ்சமாய் குடித்து,,
சிரபுஞ்சி மேகங்கள்
தாகம் தீர்க்க,,
வரளும் உள்நாக்கோடு
மழை நீர் சேகரிக்க
உபதேசம் அளிக்கும்
ஊமை பூகோளத்தின்
தோரணவாயிலாய்,,
இந்த
மனமென்னுமோர் மர்மக்குகை!!

எழுதியவர் : (25-Feb-15, 2:10 pm)
பார்வை : 63

மேலே