ஒரு நதியைப் போல
மானென்றும் மயிலென்றும்
மஞ்சள் நிலவென்றும்
சித்திரமே என்றும்
சிங்காரச் சிலையென்றும்
அவளை நீங்கள்
அழைக்க வேண்டாம்
அவள்
தன்னைத்தானே
அறிமுகப்படுத்திக் கொள்ளட்டும்
ஒரு
பூவைப் போல...!
*
சலுகையும் உரிமையும்
நீங்களென்ன வழங்குவது?
தன் தாகக் கரைகளை
அவளே தழுவிக் கொள்வாள்
ஒரு
நதியைப் போல...!
*
அவள்
எல்லாம் தெரிந்தவள்
அவளுக்கு
நடிக்கவும் தெரியும்
கண்ணீர் நதி
வடிக்கவும் தெரியும்
காற்சிலம்பை
உடைக்கவும் தெரியும்
எரிமலையாய்
வெடிக்கவும் தெரியும்..!(1992)
(எமது "ஒரு வித்தகனும் ஆயிரம் வீணைகளும்" நூலிலிருந்து)
எழுத்தில் மறு பதிவு