பிரிய பிரியப்படும் பிரிவு

வழியனுப்பும் வழிகளில்
வலிகளாய் வந்தே
விழிக்குளம் உடைக்கும்
கண்ணீர் நதிகள்.

ஒவ்வொரு
கையசைப்புக்களுக்குள்ளும்
சீக்கிரம் வந்துவிடு என்னும்
சித்தாந்தம் சிறகடிக்கும்

மௌனமாய் வழியனுப்பும்
காதல் உள்ளம்
உயிரை பிரிந்து வீட்டுக்குள்
திரும்பும் நடைப்பிணமாய்

பயணிக்கும்
பாச உள்ளங்களை
அனுப்பி கதவடைத்த பின்னும்
திறந்தே இருக்கின்றன
எதிர்பார்ப்புகளின் வாசல்படி.


வார்த்தைகளை விழுங்கிக் கொண்டு
விம்மல்களால்
விடைவழங்கும்
வேதனைதாரிகளிடமிருந்தான
விடுமுறை கழிவை எதிர்பார்த்துக்
காத்துக் கிடக்கும் கைப்பேசிகளின்
மீள்நிரப்பு அட்டைகள்.

அருகில் இருக்கும் காலம்
அவதானிக்கப்படாத தங்கங்கள்
தூரத்தில் விலகும் வேளைகளில்
புடம்போடப்படும் உண்மையை
படம்பிடித்துக் காட்டும்
பிரிவும்கூடப் பிரியவே
பிரியப்படுகிறது பிரிவை.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (26-Feb-15, 2:20 am)
பார்வை : 143

மேலே