தேடுகிறேன்
வெள்ளை பனி முழுதாய் மூடிய மலை உச்சியில் 'உஸ்ஸ்ஸ்' என் வீசும் காற்றைத் தவிர
வேறு எந்த சத்தமும் இல்லை. அந்தப் பனியின் நடுவிலே வெள்ளை நிற ஆடை அணிந்து
சம்மணம் கொட்டி, கைகளை உடலுக்கு இணையாக வைத்து கால் நடுவினிலே
உள்ளங்கைகளை இணைத்து, கண்களை மூடிய நிலையில் ஒரு ஜீவன். வயது
இருபத்தியேழு, இருபத்தெட்டு இருக்கும். சுருக்கங்கள் இல்லாத இறுக்கமான முகம். நேற்று
நட்ட நாற்று போன்ற தலைமயிர்.
ஒரு மந்தை நிறைய செம்மறியாடுகளை ஓட்டிக் கொண்டு துடிப்பான வயோதிகன் ஒருவன்,
கைகம்போடு அவ்வழியே சென்றான். ஆடுகளின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த மணி
'கலங்முலங்' எனச் சத்தம் போட்டது. ஆனால் இவை யாவும் வேறு ஒரு இணையான
பிரபஞ்சத்தில் நடப்பது போல், அவன் எந்த அசைவும் காட்டவில்லை.
"தம்பீ... தம்பீ..." என அந்த வயோதிகன் அவன் தோள்களில் தட்டினான். அவனுக்கோ
நெற்றிக்கண்ணைத் திறந்து எரித்து விடும் அளவுக்குக் கோபம். இருந்தாலும், தன்னுடைய
நெற்றிக்குக் கீழிருந்த கண்களையே திறந்து எரிச்சலுடன் 'என்னய்யா?" என்றான்.
"பாத மாறி வந்துட்டீகளா? அதுவும் செளகர்யமா தான் போச்சு. என் மந்தையில இருந்து
கருப்பாடு ஒன்னு பிரிச்சு போயிடுச்சு தம்பி. அத பாத்தீங்களா?"
"அதான் இவ்வளவு ஆடு இருக்குல்லயா. ஒரு ஆடு தொலைஞ்சு போனா இப்ப என்னவாம்?"
"ஐயோ! என்ன தம்பி இப்படி சொல்லிட்டீங்க?! அத என் புள்ள மாறி வளர்த்தேன், தம்பி"- "சரி
தம்பி. நீங்க உங்க வேலைய பாருங்க. எங்க போயிட போது கழுத! இங்கதான் எங்கயாவது
கெடக்கும். இன்னும் கொஞ்சம் கிட்ட போய் சத்தம் போட்டா ஓடி வந்திடும்", எனச் சொல்லி
ஆடுகளை ஓட்டி நகர்ந்தான்.
அவன் அந்த வயோதிகன் செல்லும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென,
"யோவ்.. நில்லு. நானும் வரேன்", என வயோதிகனை நோக்கி ஓடினான்.
"தம்பி, நான் மேல போறேன். கிராமத்துக்குப் போகனும்னா அந்தப் பக்கம் போகனும்"
என்றான்.
"அது இல்லய்யா. நானும் உன்கூட வந்து உன் ஆட்ட தேடி கொடுக்கிறேன்".
"நீங்களா?" எனக் கூறி நகைத்தான். "சரி, வாங்க... வாங்க"
இருவரும் பேசிக் கொண்டே நடக்க ஆரம்பித்தனர்.
"ஏன்யா? என்ன பாத்தா ஆடு தேடுறவன் மாறி தெரியலையா?"
"உங்கள பாத்தா நிறையாவே தேடுற மாறி தெரியுது தம்பி"
"உனக்குக் குசும்புதாயா. இப்பவும் துறுதுறு-னு இருக்க. என்ன வயசாகுது உனக்கு?"
"கணக்கு வச்சிக்கல தம்பி. எப்பயோ ஒருநாள் திடீர்னு கண்ணு முழிச்ச மாறி நியாபகம்.
அப்பயில இருந்து இப்ப வரைக்கும் ஓடிகிட்டு இருக்கேன். உடம்புல இருக்கிற சூடு
தணியிற வரைக்கும் ஓட வேண்டியதுதான்"
"சரி. இந்த ஆடெல்லாம் வச்சி கம்பளி எடுப்பியா?"
"இல்ல தம்பி"
"அப்புறம், பால் கறப்பியா இல்ல கசாப்பு கடைக்கா?"
"அதெல்லாம் நான் பண்றதில்ல தம்பி"
"அப்புறம் ஏன்யா இதெல்லாம் மேய்ச்சிகிட்டு இருக்க?"
"சும்மா பொழுதுபோக்கு தம்பி" - "உங்களுக்கு பொழுதுபோக்கு மலை உச்சியில தவம்
பண்றதா தம்பி" நக்கலாக கேட்டான். அவன் முறைத்தான்.
"எப்படி தம்பி மலை உச்சிக்கு வந்தீங்க?"
அவன் எதுவும் பேசவில்லை. அதன் பிறகு இவனும் எதுவும் கேட்கவில்லை. மறுபடியும்
அந்த 'உஸ்ஸ்ஸ்' என்ற சத்தம் மட்டும்.
அந்த வயோதிகன் தன் ஆடுகளை ஓரம் தள்ளிக் கொண்டே பாட ஆரம்பித்தான்.
"கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனிதன், போன பாதையை மறந்து போகலாமா?
...."
அவன் ஏதோ கேட்க வந்து தயங்கி நின்றான். அந்த வயோதிகன் பாட்டை நிறுத்தி அவனைப்
பார்த்தான். அவன் தன் குரலைத் தாழ்த்தி "உங்க முகத்துல ஒரு தெய்வீகக் களை தெரியுது.
நீங்க ஏதாவது மலை சித்தர் பரம்பரைய சேர்ந்தவங்களா?"
அந்த வயோதிகன் சிரித்தான்.
"உண்மைய சொல்லுங்க நீங்க கடவுள் தான?"
வயோதிகன் வாய் விட்டு சத்தமாக சிரித்தான். "மனம் போன போக்கிலே மனிதன்
போகலாமா?" என்று தனது பாடல்வரியை திரும்பவும் பாடினான்.
அவன் புன்னகைத்தான். "என் வீட்டுல ஏதோ ஒரு மூலைல உட்காந்து கிட்டு எனக்கு
நானே பேசிகிட்டு இருக்கேன்ல? ஆமா தான?"
வயோதிகன் திரும்பவும் வாய்விட்டு சிரித்துக் கொண்டே, "அந்த கேள்விக்கு நீதான் பதில்
சொல்லனும்" என்று சொல்லி இன்னும் சிரித்தான்.
அவனும் சிரித்தான்.
அவர்களின் சிரிப்பு சத்தம் அந்த மலையெங்கும் எதிரொலித்தது.