திருமாளுக்கு என்னவாயிற்று
விசித்திர வனம்
விம்மியழும் குழந்தை
ஆடாத் தொட்டில்
சுற்றியாருமில்லை.
யாரெழுப்பிய சுவரது?
வண்ணக் குழம்பு
வடிந்தோடுகிறது.
மின்னல் பிடித்தாடும்
மாப்பெரிய கை.
டங்க்ஸ்டன் அறுந்த
குண்டு விளக்கொன்று
அந்தரத்தில் அசைகிறது.
புரவியேறி வரும்
கழுதையொன்று
துண்டான என் சிரத்தை
ஒட்டி உயிரூட்டுது.
திடீரென்று சூரியன் விழுந்து
போதும் அலுப்பென்கிறது.
பகலில் கண்தெரிய
ஆந்தையொன்று
ஆலோசிக்கிறது
முன்பற்கள் மூன்றில்லா
மருத்துவரோடு.
நிர்வாணப் பெண்ணொருத்தியை
காலில் விழுந்து வணங்கும்
கையில்லா இளைஞன்
எழுந்து ஏதோ பேசுகிறான்
ஒன்றுமே கேட்கவில்லை
கோவில்பட்டி கடலைமிட்டாய்
இப்போதே வேண்டுமாம்
என்னவாயிற்று திருமாளுக்கு?
சரியாய் தான் நீந்துகிறேன்
ஓரடியும் அசையவில்லை.
ஆஸ்கார் வாங்கவேண்டிய
வரைகலை ஒவ்வொன்றும்
கனவோடு கலைகிறது.
--கனா காண்பவன்