அவனாய் நான்

சலனமே!
அவனின்
இரத்ததை
உறிஞ்சி உடலை
சல்லடையாக்கும்!!

மெளனமே
அவன் மனதில்
மரண பீதியை
பீச்சியடிக்கும்!!

ஓசோன் அவன்
தலைமீதுதான்
ஒடிந்து விழ‌
காத்திருக்கும்!

தென்றலொன்ற‌
ஒன்றை தேடி
சுவசாக்குழாய்
கந்தகங்களால்
நிரம்பி வழியும்!

அவனுக்கு
நரகமோ
சொர்க்கமோ
அவசியப்படாது!

பறவைகளின்
இறக்கைளை
புனைந்து கொண்டு
பறக்க முனைந்து
மீண்டும் விழுவான்!

கனவுகளெல்லாம்
கால்தெறித்து
ஓட்டம் பிடிக்க‌
தூக்கமென்பது
தூர நின்று அவனை
வேடிக்கை பார்க்கும்!!

எந்த தேசத்தில்
வாழ்கிறேன் நான்!
என சிந்தித்து
அறிவதற்க்கே
அவனிடம் அவகாசம்
இல்லாமலிருக்கும்!

கொப்பளிக்கும்
எரிமலையொன்றை
எடுத்து விழுங்கும்
வெறுமை அவனிடம்
மீதமிருக்கும்!!

எஞ்சியிருக்கும்
நிலத்துன்றில்
அமீபாக்களை
அலசுவான்!!
அங்கிருந்தாவது
அடுத்த ஜீவன்
உருக்கொள்ளும்
எனும் உத்தேசத்தில்!

பூக்களையோ!
மிருகத்தையோ!
எதையெதையோ
தீப்பாறைகளில்
நகங்களால்
கீறி மகிழ்வான்!!

இலைகளே
அற்ற
விருட்சங்கள்
சிலதில்
பட்டைகளை
உரித்து தின்பான்!!

உதிர்ந்து விழும்
தன் கண்ணீர்
துளிகளை கூட
கையிலேந்தி
குடித்து கொள்வான்!

கடல் நீரில்
தன் விம்பத்தை
கண்டே
கால்தெறிக்க‌
ஓடுவான்!

இன்னோர்
கிரகம் எங்கிருக்கும்
என்று மூளை
சலவை செய்யும்!

மீதமிருக்கும்
நினைவுகளை
அறுத்து
அமைதி செய்வான்!

இன்னும்
ஜனனிக்காத‌
அவனை ஆயிரம்
கவிதைகளில்
எழுதலாம்!

ஒருவேளை
அவன் மட்டுமே
அடுத்த ஆதாமாய்
இருக்கலாம்!!

நீரிலோ!
நெருப்பிலோ!
காற்றிலோ!
அணு வெடிப்பிலோ!!

அழிந்து போகும்
உலகத்தின்
இறுதி மனிதன்!!
வாழ்ந்து விட்டு
போகிறான்
இந்த கவிதையில்...

எழுதுகோல்
நிறுத்தப்படும்
இந்த கணத்தில்
எனக்குள் அவன்
மட்டுமே
லயித்திருகிறான்!!

அதோ ஓர்
மூலையில்
பூமி பற்றி
எரிய‌...
சமுத்திரம்
கொந்தளிக்க‌
ஆரம்பித்துவிட்டது!!

எழுதியவர் : புலவூரான் ரிஷி (2-Mar-15, 9:39 pm)
பார்வை : 131

மேலே