தேங்கிய துளிநீர் ஏனோ

கோபமா?

எனக்கா??
சாதம் சற்றுக் குழைந்தாலும்
காட்டுக் கத்தலாய் கத்த நானென்ன அவரா!!

எனில் வெறுப்பா?

அடுக்களை பாத்திரங்களின்
நெளிவுகளிடம் நாசுக்காய்
கேட்டுப்பார்,,
என் வெறுப்பு எப்படி இருக்குமென
கதை கதையாய் கூறும் அவை!!

பின் வருத்தமா?

ம்ம்,,
காலை முற்றம் போட்ட பூக்கோலத்தின் மத்தியில்
வைத்த பூசணிப்பூ
மதியத்திற்குள் வாடிவிட்டதே,,
அதற்காய் வேண்டுமானால்
முகத்தை தூக்கிவைத்து கொண்டு
வருத்தப்படுவோமா
இருவரும் ஒருசேர!!

உண்மையை சொல்,,
வெறும் வயிறோடு வெளியில்
செல்லவிடாது வம்படியாய்
ஊட்டிவிட்ட கைகளை
தட்டிவிட்டுப்போனே
மூத்தவனின்
அலட்சியம்
ஆழமாய் உனை வதைக்கிறது தானே?

யார் சொன்னது!!
மாலையில் பார்,,
என் மடி தவழ்ந்து
கெஞ்சிக் கூத்தாடுவான்
இரவுக்காட்சி சினிமா
செல்ல அப்பாவிடம் அனுமதி
வாங்கித்தர வேண்டி!!

அப்படி என்றால்
அடிக்கடி அலைபேசி அழைத்து
நலம் விசாரிக்கும் அக்கறையை
தொந்தரவாய் எண்ணும்
பருவமகள்
எடுத்தெறிந்து வீசும் எந்த வார்த்தையும் வாளாகி,,
உன் உள்ளத்தை துளைத்தெடுக்கவே
இல்லை,,
அப்படி தானே?

அடி பைத்தியமே,,
அவள் என் வயிற்றில் எட்டி உதைத்தபோதே உச்சி முதல்
பாதம் வரை மெய்சிலிர்த்து
நின்றவள் நான்!!
அவளே அழைத்து
அடைமழை பொழிகையில்
நீயும் அறிவாய்
அந்தப் பிள்ளைமணம்!!

பின் ஏன் தான்
தேம்பி நிற்கிறதாம்
விழியோரம் இந்த துளிநீர்,,

அதுவா,,
உயர்அதிகாரி பெண்ணொருத்தி
தாய்ப்பாலை ஓய்வறைக்குள்
தானம் செய்ய,,
புட்டிப்பால் ஒவ்வாமையில்
பச்சிளம் சிசு ஒன்று கதறும்
காட்சி விளக்கிய
காகித வரிகளோடு
மனம் ஒன்றிப்போய்விட்டதன்
அடையாளமடி கிளியே!!
பாலூட்டியாய் நீ இருந்தால்
புரிந்திருக்கும் உனக்கும் அந்த
தாயின் பரிதவிப்பு!!!

எழுதியவர் : புதுமை தமிழினி (4-Mar-15, 10:11 am)
பார்வை : 90

மேலே