காக்கை வயிறு -ரகு
எவ்வித உணவையும்
செறித்தெரிக்குந் திறன் கொண்ட
வயிறு
உலவி வருகிறது
குப்பை கிளறுங் காக்கையென
உலகின்
பிரம்மப்பிரயத்தனம்
சுகாதாரம்
வகைவகையானது போதும்
வயிற்றுக்கு
கடைசி மாத்திரை
எப்படி இல்லையோ
அதைப்போலவே
இல்லை
இனிப்பு வகையறாக்களும்
கடைசியென
முப்பொழுதும் சுவைதேடும்
ஜீவராசிகளில்
முதன்மை இடம்
மனிதனுக்கு மன்னிக்கவும்
மனித வயிற்றுக்கு
வயிறு நிறைந்துவிட்டால்
உணவுப்பட்சிகள் கூட
சிநேகமாகிவிடுமாம்
விலங்குகளுக்கு
முன்பொருகாலத்திலிருந்த
விரதம் பற்றி
நூற்றாண்டுகள் கடந்துவிட்ட
வயிறுகள் அறிந்திருத்தல்
குதிரைக்கொம்பு
நிறைத்த வயிறுகள்
கொடுத்த வியாதிகள்
தொடர்கதையாகிவிட
தற்காலக் குழந்தைகள்
மருத்துவமனை முன்பு
களைகட்டுகிறது
பலூன் வியாபாரம்
எங்கோ நிறைந்துவிட்ட
ஒரு வயிற்றின் ஏப்பத்தில்
கசக்கிறது காற்று
இப்போதும்