புரட்சி வேண்டும்
பாரதி சொன்னான் புரட்சிப்பெண்கள் வேண்டும் என்று
மறுக்கிறேன் அவனை இன்று நான்
ஆணின் மனதில் தான் புரட்சி வேண்டும்
பெண்ணை சமமாய் மதிக்கும் மனம் வேண்டும்
நிராயுதபாணியாய் ஒருவன் நின்றால் அவனிடம்
போர் செய்யமாண்டான் ஓர் ஆண்மகன்
ஆனால் இன்றோ பெண்ணை நிராயுதபாணியாக்கி
அவளை சூறையாடுகிறாய்... கசப்பான உண்மை
கள்ளிப்பால் ஊற்றினார்கள் அன்று சாபம்
என எண்ணி பெண்ணிற்கு கட்டாயமாக
கற்பைச்சூறையாடியவன் என்று தெரிந்தும் அவனுக்கு
சட்டம் ஏன் கொடுக்கவில்லை கள்ளிப்பாலை?
படித்தவன் பண்பு உடையவன் அக்கால கருத்து
இக்காலத்தில் படித்தவன் தான் அதிகத் தவறு செய்கிறான்
கட்டணம் வாங்கிய கல்வித்துறை ஒழுக்கத்தை
விற்கவில்லை போலும் பள்ளியில் பாடத்துடன்...
மன்னன் நாட்டை ஆண்டான்
கள்வன் சிறையில் இருந்தான் – அன்று
கள்வன் நாட்டை ஆள்கிறான் - இன்று
ஆளுநரிடம் மனுவா கொடுக்க முடியும்? இதைப்பற்றி
பொறியியல் பயின்றவன் அணு ஆயுதங்களை
தயார் செய்கிறான் – பெண்ணே நீ மட்டும் ஏன்
இன்னும் பொரியல் செய்து கொண்டே இருக்கிறாய்?
புரட்சிக்கான அணுஉலையாய் ஏன் மாறவில்லை நீ?
நீதிபதி நீதியை வழங்குவது இல்லை
வழக்கறிஞர் வாதத்தில் உண்மைகள் இல்லை
கெட்டவன் நியாயத்தை கற்பழிக்கிறான்
இந்தியத்தாய் அங்கே அழுகிறாள் – காப்பார் அற்று
ஆண் வர்க்கத்தை பார்த்து கேட்க விழைகிறேன் ஒரு கேள்வி
உங்களுக்கு கற்பு என்றே ஒன்று இல்லையா?
இல்லை... உங்கள் தாய் அதை சொல்லவில்லையா?
சதை வெறியில் பிணத்தையும் தோண்டுகிறாயே... கேவலமாக இல்லை?
பெண்ணின் தோலைப் பார்க்கும் ஆணே அவளை
தோழமையாய் ஏன் பார்க்க முடியவில்லை உன்னால்?
கண்ணகி எரித்தாள் மதுரையை – எரிக்க வேண்டும்
பெண்ணின் உணர்வுகளை எரிக்கும் ஒவ்வொரு ஆணையும்...