ப்ரியமான தோழிக்கு வாழ்த்து

மாதவச் செல்வியே மாண்புறு மங்கையே
மேதக மிக்கநல் மித்திரையே !- பூதலத்தில்
சாதனைகள் செய்யும் சகலகலா வல்லியே
கோதகற்றும் உந்தன் பணி .
தெள்ளியநின் சொற்பொழிவு தேனருவி யாய்ப்பாயும்
கொள்ளையின்பம் உன்பேச்சில் கூடிவரும் - உள்ளத்தில்
வஞ்சமின்றி யாவரையும் வாஞ்சையுடன் பேணுமுனை
மிஞ்சிடவே யாருளர் சொல் ?
தொண்டுள்ளத் தோடுபிறர் துன்பந் துடைத்தாய்ப்பூச்
செண்டுதந்து வாழ்த்துவேன் செம்மொழியால் ! - வெண்பாவில்
போற்றியுனைப் பாடிடப் பொன்மகளே, உற்சாகம்
ஊற்றெடுக்கும் என்னுள் சிறந்து .
பன்முக வித்தகியே பைந்தமிழ்ச் சாரலே
கன்னல் குரலால் கவர்ந்திழுத்தாய் -இன்பக்
கவின்கலையாம் நாடகத்தைக் கண்போல் கருதும்
பவித்திரையே! பேறுடன்வாழ் வாய்
விருதுகளால் கௌரவித்தாய் வேண்டுவன செய்தாய்
பெருமைகள் சேர்த்தாயேப் பெண்ணே ! - அரும்பாய்
அகத்தில் மலர்ந்திட்ட அன்புடன் சொல்வேன்
மகளிர் தினவாழ்த் துனக்கு .