புதையலைத் தேடி

அயலூருக்கு தன்னை
அடகு வைத்தாலும்
அவ்வப்போது
தன் பிறந்த வீடு
அமைந்திருந்த
வீதிக்கு போய் வருதல் நலம்..

அங்கே ..
ஆட்டமும் பாட்டமுமாய்
அந்திகளை சொந்தமாக்கி
தோழர்கள்..தோழியர்கள் ..
ஓடி விளையாடிய
பல வீட்டு திண்ணைகள்..
நினைவு தூண்டுதல் கிடைக்காத வரம்!..

மாறித்தான் போயிருக்கும்
வீதி இப்போது..
மறைந்து போயிருக்கும்
திண்ணைகள்..
காணாமல் போன ஓட்டு வீடுகள்..
காற்று வீசும் அரச மரம் ..
நினைத்து லயித்திருப்பது சுகம்..

குழந்தை மனதோடு
கூடி வாழ்ந்த நாட்களை
கொஞ்சமேனும் எண்ணியே
மீண்டும் பழக்கத்தில் கொண்டுவர
மறைந்திடலாம் பல சினம்..

உருத்தெரியாமல் போயிருந்தாலும்..
உயிரோடு வீசி நிற்கும்
அந்த வீதிகளில் நம் நட்பின் மணம்..
கொஞ்சமேனும்
நிம்மதியை அவை தரும்!


புழுதிகிளப்பி ஓடிய
போலீஸ் திருடன் ஆட்டம்
தந்த பொழுதுபோக்கும்
வீதியோர புல்லின் மீது
கால்விரல் தடவி
விரும்பிய தோழமையின் வரவு நோக்கி
காத்திருந்த நேரங்கள் நினைவில் வரும்!

காக்கா கடி கடித்து தோழியுடன்
உண்டு களித்த மாங்காயின் சுவை
எட்டாம் சுவை..கேட்டாலும் இன்று
கிட்டாத சுவை..!
போய்ப் பாருங்கள்..
உங்களது பழைய வீடுகள்
இருந்த இடங்களுக்கு..
ஒவ்வொரு முறையும் ஒரு
புதையல் நிச்சயம் கிடைக்கும்!
உங்களை புதுப்பிக்க அவை உதவும்!

எழுதியவர் : கருணா (9-Mar-15, 10:15 am)
பார்வை : 68

மேலே