தோண்டிப் பார்த்திட கிடைக்கும்

குரங்குப் பெடல் போட்டேனும்
குதூகலமாய் சைக்கிள் ஓட்டக் கற்ற
சிறுவயது ஊக்கமதை
இன்றும் நினைவினிலே கொணர்ந்திட
முடியாதெனும் எண்ணம் விலகி
முயற்சிக்கும் வண்ணம் வாழலாம் இன்றும்!
கோயிலுக்கு சுண்டல் வாங்க மட்டும்
கூட வந்த நண்பனின் கொள்கை தள்ளி
விளையாடக் கூவி அழைத்து சென்ற
நாட்களை கொணர்ந்திட
நாத்திகம் பேசுவோரின் நல்ல குணம்
மட்டும் கொள்ளும் பக்குவமும் வரும்!
வேடிக்கையாய்ப் பேசி
வில்லங்க வார்த்தை வீசும்
விந்தை மனிதரைக் கண்டு
விலகி ஓடிய காலமதைக்
நினைவதனில் கொணர்ந்திட
வீண்விவாதம் செய்வோரை விட்டு
விலகி இருத்தலின் பயன் புரியும் !
அம்மா பிச்சை கொடு தாயே
என்று வரும் வறியோர்க்கு
பிடி சாதமிட்ட பிள்ளை மனது
நெஞ்சில் வர..
எளியோர்க்கு இரங்கும்
அறிய குணம் மேலோங்கும்!
கேள்விகளால் துளைத்தெடுத்து
பல தகவல் கேட்டு வளர்ந்த
பிள்ளை பிராயமதை
தொடர்ந்து கடைப்பிடிக்க
தேர்ந்து பல் புத்தகங்கள்
படிக்கின்ற பழக்கம் வரும்..!
சண்டைகள் இட்டாலும்
சாயங்கால வேளைகளில்
சமர் மறந்து நண்பர்களைதேடியோடும்
களங்கமிலா மனம் கொண்டர்ந்திடவே
சாதி மத பேதம் நீங்கி ..வாழுமுறையில்
மனித நேயம் தான் மலரும்..வளரும்!
எல்லாம் உள்ளது நம்மிடமே..
கொஞ்சம் திரும்பிப் பார்த்து ..தேடி..
தோண்டிப் பார்த்திடக் கிடைக்கும்
ஒவ்வொரு நாளும் !
அறிவுரை இல்லை இது ..
அகவுரை தானிது !