பெண்களுக்காக பெண்ணால்

தமிழ் குஷி இணைய வானொலிக்கு நான் ஆற்றிய உரை உங்கள் பார்வைக்கு.....
பெண்கள் அனைவருக்கும் இனிய மங்கையர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகமும் அதில் வாழும் உயிர்களும் உருவானதா உருவாக்கப் பட்டதா என்ற கேள்விகளும் விவாதங்களும் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க உலகம் உருவாக்கப் பட்டது என்பது ஒரு சாரரின் நம்பிக்கை. அப்படி உலகமும் அதில் வாழும் உயிர்களும் உருவாக்கப்பட்டபோழுது கடைசியாகப் படைக்கப் பட்ட உயிர் பெண். எப்படி ஒரு வீட்டின் கடைசிக் குழந்தை செள்ளக்குழந்தையோ அப்படியே கடைசியாகப் படைக்கப் பட்ட பெண்ணும் செல்லக் குழந்தையாகிறாள்.
கவிஞர் எல்லோருமே பெண்ணை இயற்கையோடு ஒப்பிட்டுக் கூறுவார்கள். இயற்கை எப்பொழுது என்ன செய்யுமென்று யாராலும் கணிக்க இயலாது அதுபோல ஒரு பெண்ணின் மனதை யாராலும் முழுதும் புரிந்து கொள்ளமுடியாது.
பெண்மை மென்மையானதும் மேன்மையானதும் கூட. இப்பொழுதெல்லாம் பெண்கள் பாரதிகண்ட புதுமைப் பெண்களாகவே உள்ளனர். நமது பாராத பண்பாடு முழுக்க முழுக்க பெண்களையே சார்ந்திருக்கிறது. பெண்கள் பண்டைய நாட்களில் மிகுந்த சுதந்திரம் மிக்கவர்களாகத்தான் திகழ்ந்தார்கள். காலப்போக்கில் அவளின் ஆசைகளும் தேவைகளும் அதிகரிக்க ஆதிக்கம் என்ற அடிமைத்தன வாழ்விற்குள் அவளாகவே மாட்டிக்கொண்டாள்.
தற்போது பெண்கள் எல்லாத்துறைகளிலும் ஆண்களுக்கு மேலாக முன்னேறிக்கொண்டிருக்கிரார்கள். ஆனால் ஒருசில பெண்கள் தங்கள் குடும்பத்தினருக்குச் செய்யும் அன்றாடக் கடமைகளைக் கூட அடிமைத்தன வாழ்வு என்றும் ஆணாதிக்கம் என்றுமே கூறுகின்றனர். பல பெண்கள் தனக்கென்று ஒரு சுய அடையாளத்தை உருவாக்கிக் கொண்டபின் குடும்பம் என்பது அவர்கள் கைகளுக்கு இடப்பட்ட விலங்காகவே நினைக்கிறார்கள்.
ஆனால் எந்த ஒரு பெண் நல்ல குடும்ப பின்னணியில் வாழ்கிறாளோ அவளால் மட்டுமே நல்ல சமுதாயத்தையும் எதிர்கால தலைமுறையினரையும் உருவாக்க முடியும். எப்பொழுது குடும்ப சூழ்நிலைக்கு ஒத்துப் போகாமல் தனக்கென்று ஒரு வழியைத் தேடுகிறாளோ அப்பொழுதே எங்கேயோ ஓரிடத்தில் அவளாகவே அவளுக்கொரு அப்டிமைத்தன வாழ்வைத் தேடிக்கொள்கிறாள்.
ஒரு பெண் எப்பொழுது தன்னையும் தன் சக்தியையும் புரிந்து கொள்கிறாளோ அக்கணமே அவளுக்கு விடிவுகாலம் தான். தன்னுடைய சக்தியையும் திறமைகளையும் வெளிக்கொணர அவளுக்கு ஒரு குடும்பம் நிச்சயம் தேவை. அப்படியொரு நல்ல குடும்பத்தை உருவாக்கும் கடமை ஒவ்வொரு பெண்ணையும் சார்ந்தது. ஏனெனில் அவளால் தான் இவ்வுலகில் உயிர்களை உருவாக்கவும் பாதுகாக்கவும் முடியும்.
ஒரு பெண்ணிற்கு அன்பு, அமைதி, அறிவு எனும் கல்வி இவைமூன்றும் கண்டிப்பாகத் தேவை. இவை மூன்றையும் எந்தப் பெண் தன்வாழ்வில் சொந்தமாகக் கொண்டிருக்கிறாளோ அவள் நிச்சயம் சமுதாயத்தில் தனித் திறமை வாய்ந்தவளாகத்தான் இருப்பாள்.
இன்றைய சூழ்நிலையில் பல குடும்பங்களின் சீரழிவிற்கு பெண்கள் மட்டுமே காரணமென்று கூறமுடியாது. ஆனால் பெண்களும் காரணமென நினைக்கையில் வேதனைதான் மிஞ்சுகிறது.எப்பெண் தன்னுடைய கடமையை சரியாகச் செய்யவில்லையோ அங்கே தான் பிரச்சனைகளும் உருவாகின்றன. பல பெண்கள் தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே ஒரு பிரச்சனையிலிருந்து விடுபட இன்னொரு பிரச்ச்னையில் மாட்டிக்கொள்கிறார்கள். அப்பிரச்சனையிளிருந்து வெளிவரத்தெரியாமல் தடுமாறுகிறார்கள். தடுமாறுகிறார்கள் என்பதைவிட தடம்மாறுகிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஒரு பெண் அவளுக்கான பிரச்சனைகளை குடும்ப உறுப்பினர்களுடன் பேசி தேர்வு காண்பதே மிகவும் சிறந்த வழி.
பொதுவாகப் பெண்கள் தனக்கொரு துன்பம் வரும்பொழுது அமைதியாகத்தான் இருப்பார்கள் அதே துன்பம் மற்றொரு பெண்ணுக்கெனில் அவளுக்குள் உறங்கும் ஆண்மை மிளிர்ந்து வீரம் கொண்டு எதிர்த்துப் போராடத் துணிகிறாள்.
நாணல் செடியானது எவ்வாறு காற்றின் தன்மைக்கேற்ப அசைந்து கொடுக்கிறதோ அதுபோல வளையும் தன்மையும் எப்பாத்திரத்தில் ஊற்றினாலும் அப்பாத்திரமாகவே மாறும் தண்ணீரைப் போல தான் ஏற்றிருக்கும் கதாப்பாத்திரத்தின் தன்மைக்கேற்றபடி தன்னை மாற்றிக்கொள்ளும் பக்குவமும் ஒரு பெண்ணுக்கு கண்டிப்பாகத் தேவை .
பல பெண்கள் எனக்கே என்னைப் பிடிக்கவில்லைஎன்று சலித்துக் கொள்வார்கள் அப்படியில்லாமல் என்னை எனக்கு மிகவும் பிடிக்கும் என்னால் நிச்சயம் சாதிக்கமுடியும் என்ற உயர்வான எண்ணங்களைக் கொண்டிருந்தால் எவ்வளவு உயரம் என்றாலும் எளிதாக ஏறிவிட முடியும்.
என்னைக்கேட்டால் என்னை எனக்கு மிகவும் பிடிக்கும் என்பேன். ஒரு பெண்ணிற்கான நல்ல அடையாளங்களுடன் நான் நானாகவே வாழ ஆசைப்படுகிறேன். எனக்கே என்னைப் பிடிக்கவில்லைஎன்றால் வேறு யாருக்கு என்னைப் பிடிக்கும்? நமக்கான சுதந்திரத்தை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொண்டாலே வாழ்வில் என்றும் மகிழ்ச்சி தான் நன்றி! வாழ்க வளமுடன்!
..............................சஹானா தாஸ்