யாப்பு 01 - திரு எசேக்கியல் காளியப்பன்

யாப்பின் உறுப்புகள்
-----------------------------------

யாப்பிலக்கணத்துக்கு ஒன்பது(9) உறுப்புகள் உள்ளன; அவை: எழுத்து, அசை, சீர்,தளை, பிணை, அடி,தொடை,பா, பாவினம் என்பன;

செய்யுள் உறுப்புகள் இவற்றில் எழுத்து, அசை, சீர்,தளை,அடி,தொடைஎன்று ஆறு வகைப்படும்.

உறுப்புகள் என்பதைக் கவனிக்க உறுப்புக்கள் அல்ல;

எழுத்துகள் மொத்தம் முப்பத்தோர்எழுத்துகள்!

தனித்து இயங்கும் ஆற்றல் உடைய உயிரெழுத்து பன்னிரண்டு
உயிரினது உதவியின்றித் தனித்து இயங்காத மெய்யெழுத்துகள் பதினெட்டு
ஆய்தம் ஒன்று
ஆக மொத்தம் (31)முப்பத்தோர் எழுத்துகள்;

மெய்யெழுத்தை வாயால் உச்சரிக்கக் கூட ஓர் உயிரெழுத்தைச் சேர்த்தால்தான் உச்சரிக்க முடியும்; (எ.டு) “இக்”

எழுத்துகள் என்பதைக் கவனிக்க, எழுத்துக்கள் அல்ல.

குறில்:-
குறுகிய ஒலியினை உடைய உயிரெழுத்துகள் குறிலெழுத்துகள்-மொத்தம் 5;
நெடில் :-
நீண்டு ஒலிக்கின்ற ஒலியினையுடைய எழுத்துகள் நெடிலெழுத்துகள்-மொத்தம் 7

குறிலே நெடிலாகும்; ஆனால் ஐ-க்கும் ஔ-க்கும் குறில்கள் இல்லை;

அவை இரண்டு எழுத்துகள் சேர்ந்த ஓர் எழுத்தாக உருவாகியுள்ளன-அதாவது- அ+இ=அய்=ஐ;
அ+உ=அவ்=ஔ; ஐ என்று நெடிலெழுத்தாகவும், அய் என்ற கூட்டெழுத்தாகவும் பயன்படுத்தலாம்; அதுபோலவே ஔ என்று நெடிலாகவும், அவ் என்று கூட்டெழுத்தாகவும் பயன்படுத்தலாம்;
ஆய்தம்:-
ஆய்தம் உயிரெழுத்துடனும் சேரும்; மெய்யெழுத்துடனும் சேரும் அதனால் அது தனி நிலை எனப் பெயர் பெற்றது. இவ்வெழுத்தை
அய்ம்பத்தைந்து குறள்களில் பயன்படுத்திய திருவள்ளுவர், 46-நாற்பத்தாறு இடங்களில் மெய்யெழுத்தாகவும், ஒன்பது இடங்களில் உயிர்மெய்யெழுத்தாகவும் பயன்படுத்தியுள்ளார்.

அற்றா ரழிபசி தீர்த்த லஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி....
என்பதில் அகுதொருவன் எனக்கொள்ளுதல் வேண்டும்;ஆக, ஃ என்ற ஆய்தம் இங்கு உயிர்மெய்யாக கு என்று வருகின்றது.

மாத்திரை:-
எழுத்துக்களை உச்சரிக்கும் கால அளவுக்கு மாத்திரை என்று பெயர்;
நாம் இயல்பாகக் கண்ணை இமைக்கின்ற நேரம், அல்லது கைந்நொடிக்கின்ற நேரமும் ஒரு மாத்திரை(அளவு) ஆகும்;

மாத்திரை அளவுகள்:-
நெடிலுக்கு மாத்திரை இரண்டு;குறிலுக்கு ஒன்று;
மெய்யெழுத்துக்களுக்கும்,ஆய்தம், குற்றியலுகரம், குற்றியலிகரம் ஆகியவற்றுக்கு மாத்திரை அரை.
உயிரளபெடைக்கு (ஆஅ) மாத்திரை மூன்று;

குற்றியலுகரம்:-
தனிக் குற்றெழுத்து அல்லாத மற்ற எழுத்துகளுக்குப் பின்,
சொல்லுக்கு இறுதியில்,
வல்லின மெய்யின் மேல் ஏறிவரும் உகரம்.

உகரம் ஒரு மாத்திரைக்குரியது; குற்றியலுகரம் அரை மாத்திரை அளவுடையது; கு,சு,டு,து,பு,று ஆகிய ஆறு எழுத்துகள்;

குற்றியலுகர வகைகள் ஆறுவகைப்படும்;

நெடிற்றொடர் குற்றியலுகரம்: பாகு-என்பதிலுள்ள கு என்ற குற்றியலுகர எழுத்து முன்னுள்ள நெடிலான பா-வைத் தொடர்ந்து வந்துள்ளது

ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்: அஃது; இஃது,எஃகு..போன்றவை;

உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்: அரசு; மதகு,பகடு;வயிறு போன்றவை- உயிரெழுத்தை,அதாவது உயிர்மெய்யெழுத்ததைத் தொடர்ந்து வந்துள்ளது;

வன்தொடர்க் குற்றியலுகரம் : நாக்கு; மூச்சு; கூற்று; வல்லின மெய்யை முன்னதாகக் கொண்டு தொடர்ந்து வருகின்ற குற்றியலுகரம்;

மென்றொடர்க் குற்றியலுகரம் : சங்கு; மஞ்சு; நன்று; கம்பு போன்ற சொற்களில் மெல்லின மெய்களைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம்;

இடைத்தொடர்க் குற்றியலுகரம்: இடையின எழுத்துக்களைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம்- பல்கு; மார்பு; ஆய்சு; கொய்து;

குற்றியலிகரம்:- இகரம் தனது ஒரு மாத்திர அளவினின்றும் குறுகி அரையாக ஒலிப்பது; நின்ற சொல்லின் இறுதியில் உள்ள ஏதேனும் ஒரு குற்றியலுகரம், வரும் சொல்லின் முதலில் யா- என்ற எழுத்து வரும்பொழுது இகரமாகத் திரியும்-அப்பொழுது அது குற்றியலிகரமெனப்படும்;

பாகு+யாது= பாகியாது?; காசு+யாது= காசியாது?; ஆறு+யாது =ஆறியாது?
கேள்+மியா =கேண்மியா; செல்+மியா = சென்மியா;
---------------தொடரும் -------
[ஆதாரம் யாப்பரங்கம், ஆசிரியர் புலவர் வெற்றியழகன்]

--------- கட்டுரை ஆக்கம்: திரு எசேக்கியல் காளியப்பன்

பின் குறிப்பு: இது திரு எசேக்கியல் காளியப்பன் அவர்கள் படைப்பு. கருத்து கூற விரும்புபவர்கள் அவர் படைப்பு kavithai/165371 -ல் கருத்திடவும்.

(இங்கு கருத்திட இயலாது )

எழுதியவர் : திரு எசேக்கியல் காளியப்ப (9-Mar-15, 2:02 pm)
பார்வை : 204

மேலே