யுகங்கள் தாண்டும் சிறகுகள் - 3 - கிருத்திகா தாஸ்

இன்று


கருப்பு வெள்ளை யுகத்தின் கடைசி இருள்...



இரண்டு யுகங்களாய் இங்கேயே காத்திருக்கிறோம் யாம் , சூரிய உதயத்திற்காய்...


தேவர்கள் அல்ல யாம் ... வெறும் சதை உருவங்கள்....


மூன்றாவது நிலவு யுகத்தின் பின்னிரண்டு வருடங்களில் , மேகன வன மலைகளுக்கு மத்தியில் புதைந்தொளிந்து கொண்ட சூரியன் , இன்றும் எழவில்லை...


கருப்பு வெள்ளை யுகத்தில் சூரியோதயம் உண்டு என்று நம்பியிருந்தோம் யாம்...


இன்று முழு நிலவொளி ஏழாம் இருள்.... முழு நிலவு வெப்பத்தின் தீண்டல் பொறுக்காமல் எம் முகச் செதில்கள் சிதறிக் கொண்டிருக்கிறது... சிறிது சிறிதாய்...


எம் கோட்டைத் தளங்களிலிருந்து யாம் எம் தேசத்தைக் கண்டிருப்பது , இதுவே கடைசி இருள்...



எம் தேசம்... ஆம்... இது எமது தேசம்...


பிளவு நீர்த் தடாகத்தின் வழி , முந்தைய யுகத்தில் இருந்து எம் முன்னோர் இந்த யுகத்துக்குள் நுழைந்து உருவாக்கிய தேசம்... இது எமது தேசம்...


ஐந்து கால் மானினம் வாழ்ந்த காலங்களில் , யுகங்கள் திறந்து உட்புகும் சாவிகள் இருந்ததென்று எம் முன்னோர் கூற்று கேட்டதுண்டு யாம்...


தீஜா இன மக்கள் வாழ்ந்து வரும் எம் தேசத்தை ஆட்சி செய்த எந்தை அவர்களின் ஆவி , மலை நாடுகள் தோன்றும் முன்னரே நீங்கி விட்டது...


யாம் மழலையாய் இருந்த காலங்களில் சாம்பல் நிறப் பூவனம் ஒன்றை உருவாக்கிக் கொடுத்திருந்தார் எந்தை...யாம் விளையாட...


ஆவி பிரிந்த நான்கு கால் பிராணிகளைப் புசிக்கும் எம் தேசத்து மக்கள் , எம் தேசம் ஆண்ட எந்தை அவதரித்த இருளைக் கொண்டாட , சாம்பல் பூவனக் கனிகளைப் புசிப்பதுண்டு...


காற்று உருவான முந்தைய காலங்களில் மெல்ல அசையத் தொடங்கிய என் தேசத்துக் கருப்பு இலைகள் கண்டு பயந்து , யாமும் எம் மக்களும் எம் கோட்டைக் குகைகளுக்குள் பதுங்கியே இருந்தோம்...


ஓங்கி வளர்ந்த எம் தேசத்து கருப்பு மரங்களினூடே , காற்று உருவான காலங்களுக்குப் பிறகு அதிசய வெள்ளை மரங்கள் சில முளைக்கத் தொடங்கி விட்டன...


எம் தேசத்தில் புது மனிதக் குழந்தையொன்று அவதரிக்கும் இருளில் , அந்த அதிசய வெள்ளை மரங்களில் மின்னலொளிப் பூக்கள் பூப்பதுண்டு...


ஒவ்வொரு மூன்றாம் பிறைக் காலங்களிலும் , மலை நாடுகள் தாண்டி , பூமி பிளந்து உருவான நான்காம் கடலைக் கடந்து , மீண்டு வரும் எம் தேசத்து வீரன் ஒருவனுக்கு , ஆவி பிரிந்த எம் முன்னோரின் உருவங்களில் இருந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூருகளை ஆயுதமாக்கிக் கொடுத்திருக்கிறோம் யாம்...


ஆவி பிரிந்த எம் முன்னோர்களின் உருவங்களைப் புதைத்து வைத்திருந்த கல்லறைத் தோட்டத்தில் உருவான ஜென்ம நீரோடையிலிருந்து கரையொதுங்கிய மரணமில்லாக் குழந்தைகள் சில , யுகங்கள் கடந்து வாழ்வதுண்டு...


கருப்பு வெள்ளை யுகத்தோன்றலின் முன்னேழு வருடங்கள் தொடங்கி , ஒவ்வொரு நான்காம் பிறைநிலவின் ஏழாவது இருளில் எம் தீஜா இன மக்கள் மேகன வன தெய்வங்கள் முன்னிலையில் திருவிழாக்கள் வைப்பதுண்டு... எம் தேசத்துத் திருவிழா இருளில் மட்டும் எம் தேசத்து கருப்பு இலைகள் மணம் வீசுவதுண்டு...




இன்று


எம் தீஜா இன தேசத்துக் கருப்பு வெள்ளை யுகத்தின் கடைசி இருள்...


எம் கோட்டைத் தளங்களிலிருந்து யாம் எம் தேசத்தைக் கண்டிருப்பது , இதுவே கடைசி இருள்...


எம் கோட்டை மதிலில் தோன்றிய வெண்ணிற சர்பம் சொல்லிப்போனது , கருப்பு வெள்ளை யுகத்தில் சூரியோதயம் இல்லையென்று...


கருப்பு வெள்ளை யுகத்தில் சூரியோதயம் உண்டு என்றே நம்பியிருந்தோம் யாம்...



எம் கோட்டை கருடனுக்காகக் காத்திருக்கிறோம் யாம்...


எம் தேசம் ஆண்ட எந்தை ஆவி பிரிந்த இருளில் சிறகு கருகிப் புதைந்து போன எம் கோட்டை கருடனுக்காய்க் காத்திருக்கிறோம் யாம்...


எம் கோட்டை கருடன் இறப்புக் காலம் முடிந்து உயிர் பெற்று எழுந்து வரும் இருளதில் , யாமும் எம் தேசத்து மக்களும் நிரந்தரமாக இந்த யுகத்தை விட்டு நீங்கி விடுவோம் என்பது எந்தை கூற்று...


யாமும் எம் தேசத்து மக்களும் இந்த யுகத்தை விட்டு நிரந்தரமாக விலகும் முன் , எமது ஆவிகள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு இருக்கும்...


முழுநிலா வெப்பக் காலங்களில் , மலைநாடுகள் கடந்து இறங்கி வரும் கோடங்கி , நேற்றைய இருளில் வந்து குறி சொல்லிப்போனான் , இன்றே கருப்பு வெள்ளை யுகத்தின் கடைசி இருள் என்று...


மலையோரம் இருக்கும் கல்லறைக் காட்டுக்குள் காவலிருக்கும் நான்கு கால் பிராணிகள் சில , மலை மீது ஓலமிட்டுக் கொண்டே இருக்கின்றன...


மேகன வன தெய்வங்களுக்கு எம் தீஜா இன மக்களின் கடைசிப் படையலுக்காய் , சாம்பல் பூவனத்தின் புகைமூட்டத்திற்குள் பூக்கள் சேகரிக்கச் சென்ற என் சேவகியொருத்தி , வனத்தின் நிலப்பகுதியில் எம் கோட்டை கருடனின் நிழல் கண்டதாய் விரைந்து வந்து செய்தி சொன்னாள்...


வந்து விட்டான்...


எம் கோட்டை கருடன் வந்து விட்டான்....


எம் தீஜா இன மக்களை யுகம் மாற்றி கூட்டிச் செல்லப் போகும் எம் கோட்டை கருடன் வந்து விட்டான்... எம் தேசத்து மக்களின் ஆவிகளைப் புதுப்பிக்கப்போகும் எம் கோட்டை கருடன் வந்து விட்டான்...


ஆம்... யாமும் எம் தேசத்து மக்களும் கருப்பு வெள்ளை யுகத்தை விட்டு நிரந்தரமாய் நீங்கப் போகிறோம்...


பிளவுநீர்த் தடாகம் திறக்கத் தொடங்கி விட்டது கொஞ்சம் கொஞ்சமாய்...


எம் கோட்டை மதில்களோடு குகைப் பாறைகளும் சரியத் தொடங்கி விட்டன ஒவ்வொன்றாய்...


இனி , யாமும் எம் தேசத்து மக்களும் கொஞ்சம் கொஞ்சமாய் கருப்பு வெள்ளை யுகத்தை விட்டு நிரந்தரமாக நீங்கி விடுவோம்...


இனி எப்போதும் கருப்பு வெள்ளை யுகத்தில் சூரியோதயம் இல்லை... ஆம்...


இனி எப்போதும் விடியப்போவதில்லை....


`அந்த இரவு ,
`என்
`கடைசித் துளிக் கண்ணீரைப்
`புதைத்துக் கொண்டிருந்தது..
`மீதமிருந்த கல்லறையின்
`கடைசிக் கல்லாய்...


`இனி ,
`விடியப் போவதில்லை...




கருப்பு வெள்ளை யுகத்தில் சூரியோதயம் உண்டு என்றே நம்பியிருந்தோம் தாம் யாம்....






- கிருத்திகா தாஸ்...

எழுதியவர் : கிருத்திகா தாஸ் (10-Mar-15, 2:16 pm)
பார்வை : 281

மேலே