நட்பு=காதல்=அன்பு தொடர் -பகுதி 3

3
----------------------------------------------------------------------------
நட்பு

ஒரு சிலந்திவலை

நண்பர்கள்-

அதில் சிக்கிக்கொண்ட

பூச்சிகள்

-நன்றி: அகல் (04.09.2012)
----------------------------------------------------------------------------



நட்பு அருவெறுப்பு நோக்காது, குலப் பிறப்பு சிந்திக்காது, உறவு முறை காணாமலும் உருவாகும் நுட்பமான உறவு நட்பு.

குசேலரின் அக்குள் வியர்வை கலந்த அவல் , நண்பன் கிருஷ்ணனுக்கு ருசிக்கவில்லையா?

• தேரோட்டி மகன் கர்ணன் ,துர்யோதனின் நண்பன் இல்லையா?

குகனோடும் இராமன், ஐவராகவில்லையா…?

• இருப்பினும் சிக்கல்கள் உள்ள சீர்மிகு நட்பில் சீராய் தொடர்ந்து தலைமுறை வெற்றி கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் ­ நம்மைப் போல உள்ளோர் மத்தியில்..!

மூலம்
விளங்காத உறவின்
பாலம் உடைத்துப்
பாதை மாற்றி
நீ
பயணம் மாற்றினால்­
நிறுத்தினால்.
திசைகளிலெல்லாம்
அச்சுறுத்தும்
உனது
இன்னொரு
முக தரிசனம்..!!

உன்
விரல் இடுக்கின் விரிசல்களில்
நட்புக் காயங்கள் ­
மருந்தாய் எப்போதும்
பழகிய நாட்களின் ஸ்பரிசங்கள் ­
என்னுடையவை!
விரல்கள் தனியே கிடக்கின்றன
வீணையின் மீது.
இராகங்கள் காணவில்லை!

ரணமாய்க் கீதம் என்
நெஞ்சத்து ஓரங்களில் ­
எதிரொலி அலைகளிலும் கூட
எப்படி பதித்தாய் உன் பெயரை?
நான் எங்கே?

என் கபால விரிசல்களில்
வழிவது உன் துரோக நினைவுகள்!
போலி நட்புக் கிண்ணங்களில்
நிரப்பிவை அவற்றை ­
என்னைப் போல் இன்னும்
பலருக்கும் அளித்திட ­
உனக்கு வேண்டியிருக்கும்!

உனது பெயரின் எழுத்துக்கள்
ஒடிந்து வீழ்ந்து
என் வீடெங்கும் எழுத்துப் பிழைகள்!
நீ சட்டம் போட்டளித்த
புகைப்படத்தில் புகைப்படலம்
- சடலமாய் நினைவுகள்
கிடக்கின்றன!

உற்றாரின் வினாக்கள்
உன் விலா ஒடிக்கும் ஓசை
என் காதுகளுக்குள்!
உனது எந்த நண்ப(பியின்)னின்
வீட்டிலும் இப்படித்தானே
விழாக்கள்!


வாக்கியங்கள்
அர்த்தங்களைப் பெற்றால்தானே
ஆசீர்வதிக்கப் படுகின்றன.
நட்பு சூழ்ந்தால்தானே
வாழ்க்கை அழகாகின்றது.
உன் வாழ்க்கை
திறன் பட விதவிதமாய்த்
தினம் தினம் அமைந்திட
உலா நாம் போன
இடங்கள் எத்தனை?

எவருடனும்
உன் உறவு
காற்புள்ளி இல்லாச்
சிறுகதைதானே!
முற்றுப்புள்ளிகளையே
வாழ்க்கையாக்குவதும்
சுயநலவிரலால்
காற்புள்ளிகளைக் கர்ப்பமாக்கி
மீண்டும் முற்றுப்புள்ளியாக்குவதும்
உனது ஆற்றலா? அவலமா?

சுழலும் பூமியின்
சுழலும் கண்களுக்கும்
பலமுறை நாம் வியங்கோள் வினைமுற்று ­
வியப்புக்குறிகள்!
இன்றும் சுழலும் கண்களுக்குள்
நீ சுழற்சி சுற்றுக்குள் ­
வளமையாய் ­ செழுமையாய்

நான் எங்கே?

உன்னுடன் எவரும்
சேர்ந்தே இருக்க முடியாது
என்பது அதிசயம் இல்லை, எனும்போது
பிரிந்தாலும் வியப்பில்லை
என்கிறது உலகம்

சேர்ந்த கணம் கனமாகியது;
சேர்ந்திருந்த காலம் பொய்யாகியது!
நட்பில் காயங்களை
உண்டாக்குவதும்
காயங்களைப் பாயாக்கி உறங்குவதும்
உன் வாழ்(டி)க்கை!
ஆனால்,
வாழ்க்கையில் ஒரு நாளில்
வயதுரேகைகள் தைத்துக் கொடுக்கும்
பாய் அல்லது நோய் ­
இது காலத்தின் கட்டாயம்.
அன்று
உனது காயவடுக்களில் வழியும்
வலிக்கு என்ன செய்வாய்?
யோசி!

எப்படி ஏன் இருந்தாய்
என்னுடன் நட்பில்..?
அது நட்பா...காதலா..
எனும் புதிர் விளையாட்டின் முடிவு
தெரியும் முன்
முனகலோடு ஏன் பிரிந்தாய்...

நீயே
தொடு எனும் போதும் கூட
தென்றல் மட்டுந்தானே
தொடவிட்டேன்...
நட்பு என்றுதானே
உனது உயர் நாகரிகம்
எனது கிராமத்து மணத்தில்
ஒன்றாகி இருந்தது....
பின் பிரிவு ஏன் தந்தாய்....

பிரிந்து கண்ணீர் சொரிந்து
திரிய நாம் காதலர்களா....??
மீண்டும் சேர நண்பர்களா...

சொல்....

இன்னும் கண்டு பிடிப்போம்...

எழுதியவர் : அகன் (11-Mar-15, 7:04 pm)
பார்வை : 470

மேலே