தவம்

தவம்....

உண்டி சுருக்கியும் உடல் சுருக்கியும்
எண்ணிலடங்கா நோய்கள் யாவும் சுருக்கியும்
ஆரோக்கிய வாழ்வே நாளும் காண - நாம்
இருந்திடுவோம் அருந்தவமாய் உண்ணாத் தவம்!!!

நம் துன்பம் யாவையுமே நாமே பொறுத்தும்
எவ்வுயிர்க்கும் இன்னல்கள் நேராமல் காத்தும்
அமைதியான வாழ்வே நாளும் காண - நாம்
இருந்திடுவோம் அருந்தவமாய் பொறுமைத் தவம்..!!!

அறமதனின் இடையூ ரனைத்தும் அழித்தும்
அறம் காப்போர் நல்லினமே நாளும் வளர்த்தும்
வீரம் செறிந்த வாழ்வே நாளும் காண - நாம்
இருந்திடுவோம் அருந்தவமாய் வலிமைத் தவம்..!!!

போர் பகையும், வன்முறையும் கொடுமைகளோடு
களவு கொலை தீச்செயல்கள் காணாதொழித்து
அமைதியோடு தர்மமுமே உலகினில் மேவ - நாம்
இருந்திடுவோம் அருந்தவமாய் நேர்மைத் தவம்..!!!

காடழித்து மாசு பெருக்கி ஓசோன் துளைக்கும்
நீசச்செயல் யாவும்தொலைத்து மரங்கள் வளர்த்து
கானகத்தோடு நாடும் பசுமை போர்க்க - நாம்
இருந்திடுவோம் அருந்தவமாய் மழைக்கெனவே தவம்..!!!

பொய் புரட்டு சுய நலன்கள் யாவும் தொலைத்து
நாட்டு மக்கள் நலனதுவே எண்ணங்களாக
புத்தனைப் போல்... காந்தியைப் போல் தேசம் காண - நாம்
இருந்திடுவோம் அருந்தவமாய் உத்தமர்க்காய் தவம்..!!!

அறம் பொருள் இன்பமென அனைத்தும் கொண்டு
வள்ளுவனார் ஆக்கி படைத்த குறள் வழி கண்டு
வாழ்ந்திடவே அனைவருமே அறநெறி நின்று - நாம்
இருந்திடுவோம் அருந்தவமாய் குறள் வழித் தவம்..!!!

(14-02-2015 அன்று பெங்களூர் தமிழ் சங்கத்தில் நடந்த திருக்குறள் மாநாட்டில் கலந்து கொண்டு வாசித்த கவிதை)

எழுதியவர் : சொ.சாந்தி (11-Mar-15, 10:39 pm)
Tanglish : thavam
பார்வை : 91

மேலே