நற்றிருச்சி ராப்பள்ளி ஊரெங்கள் ஊரே

மலைகோட்டை கணபதியும் மகிழ்ந்துரைந்து நன்றாய்
---மாபெரும்நற் கோயிலுடன் வீற்றிருக்கக், கீழே
அலைஅலையாய்க் காவேரி அழகெனவே ஓடி
---அரும்புகளை விரும்பிநிதம் மலர்த்திவிடச், சோழன்
தலைநகராய்க் கொண்டநகர் தஞ்சையதற் கருகில்
---தலைமுறைகள் பலகண்டு தரணியிது போற்றக்
கலைவளர்த்துக் கட்டிடமும் மிகவளர்த்து நிற்கும்
---நற்றிருச்சி ராப்பள்ளி ஊரெங்கள் ஊரே !

தாயுமான சாமியவன் அருளதைனைச் சாற்ற
---தண்ணீருக் கணைகண்ட கல்லணையைப் போற்ற
நேயமுடன் ஆனைக்கா ஈசன்புகழ் ஓங்க
---நேரிழையார் குடத்தினிலே காவிரிநீர் தாங்க
மாயனவன் மஞ்சத்தில் நற்றுயிலும் கொள்ள
---மாபெரிய சீவிராமன் உருவெடுத்து வந்தே
தூயபெரும் அறிவியலின் சாரத்தைக் கற்ற
---நற்றிருச்சி ராப்பள்ளி ஊரெங்கள் ஊரே !

வித்தக இளங்கவி
விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (13-Mar-15, 5:17 pm)
பார்வை : 115

மேலே