என் ஜன்னல் வழியே....!

காற்று வரட்டுமென்று
ஜன்னல் கதவுகளைத்
திறந்து வைக்கிறேன் - பிறகு
சக மனிதர்களின்
எண்ண அலைகள்
உட்புகுவது கண்டு
அடைத்தும் வைக்கிறேன்.

இப்போது என்னுடைய
எண்ணங்கள் வெளியேற
தவிப்பதால் மீண்டும்
அனைத்து நிலைகளையும்
திறந்தே வைக்கிறேன்.

திறப்பதும் அடைப்பதுமான
இந்நிகழ்வில்...
பெரும்பான்மையான கவிதைகள்
ஜன்னல் கதவுகளின்
இடுக்குகளில் சிதைந்தும்
சிற்சில சமயங்களில்
முழுமையாகவும் பிரசவிக்கிறது.

எப்போதெல்லாம்
மூச்சு முட்டுகிறதோ
அப்போதெல்லாம்
வெளிவரத் தவிக்கிறேன்.

புயல் வீசும்போதுதான்
தூரத்தில் தெரியும் - அந்த
குன்றைப் பற்றி...
கதவுகள் கவி பாடுகின்றன.
ஒருவேளை அது
காதலுக்கான கரிசனமாகவும்
இருக்கலாம்...!

ஒரு
கனத்த மழையில்
ஜன்னல் திரைச்சீலைகள்
நீலிக்கண்ணீர் வடிக்கின்றன.
குளிர்ந்த காற்று
எனக்குள் வீசிக்கொண்டிருக்கிறது.

மனிதர்கள்
ஜன்னல் கைதிகள்.
சில பேர்
திறந்தே வைக்கிறார்கள்.
சில பேர்
அடைத்தே வைக்கிறார்கள்.
பகுத்தறிவுவாதிகள்
உடைத்து எறிகிறார்கள்.
ஞானிகள்
வெளியேறி விடுகிறார்கள்.

நான் வெறுமனே
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
என் ஜன்னல் வழியே....!


.



எழுதியவர் : iravivekha (28-Apr-11, 1:50 am)
சேர்த்தது : iravivekha
பார்வை : 656

மேலே