எதிர்மறை

பல முகமூடிகளை கிழிப்பதற்கு,
எடுக்கப்பட்ட முயற்சிகளில்,
உயர்ந்த கைகள் உந்தித்தள்ளப்பட்டன !
சில கைப்பற்றப்பட்ட முகமூடிகளை,
கிழித்து காயப்படுத்திப் பார்த்தபோது,
அவைகள் முகங்களென அறியப்பட்டன !
நிஜமும் பொய்யும் இரண்டறக்கலந்த வாழ்வில்,
வானவில் என அறியப்படுவது,
வண்ணமிழந்தே அழிந்துபோகிறது !
வானமழையாய் பெய்து காப்பற்றும்,
என உருவாக்கப்படும் உறவுகள்,
சூறையில் சிக்கிய காகிதமாய் கிழிந்துபோகிறது !
ஒரு விதையில் உருவாகிவிடுகிறது மரம்,
சாடல் வார்த்தையில் உறுவெடுத்துவிடுகிறது கலகம்,
அது முடிவதற்குள் மடிந்துவிடுகிறது பல நிம்மதிகள் !
பொறுமை எப்போதும் கைகொடுக்கும்தான்,
எனினும் ஒரு தன்மானம் தடவப்படுகையில்,
உள்ளூர உலவும் வேங்கை உறுமவே செய்யும் !
வன்முறை இருபக்கம் கூர் கொண்ட வாள்தான்,
அதையுணர்ந்து ஒருபக்கம் பயணித்தாலும்,
எதிராளி முடிவுசெய்கிறான் உன் சாதகபாதகங்களை !
எச்சில் காரியங்கள் செய்து ஏக்காளமிடுகிறது ஒரு கூட்டம்,
எட்டிமிதித்து ஏளனம் செய்து மேலேறுகிறது ஒரு வர்க்கம்,
மௌனியாய்த்திரிந்து மானுடம் அளக்கிறது ஒரு வட்டம்,
காரிய நிமித்தமாய் காய்கள் நகர்த்துகிறது சில பிறவிகள்,
பேசிமுடிப்பதாய் யாசகம் பெறுகிறது சில நுட்பமனங்கள்,
கூடருந்தே கருவறுக்க குவிந்து தகிக்கிறது சில ஈனநிஜங்கள்,
வந்ததை எதிர்கொண்டு வல்லமை உணர்த்துகிறது முறையாய்,
வானளவு பறக்காமல் பூமியின் நிலை நிஜமுனர்ந்த சில மனிதங்கள் !!

எழுதியவர் : பாரத்கண்ணன் (18-Mar-15, 9:35 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 198

மேலே