என்ன செய்ய போகிறீர்கள்

பாலொழுகும் பாத்திரத்தைப்
பார்த்துக் கொண்டே படுத்திருக்கும்
வெண்ணை எடுக்கத் தெரியாத
விவரங்கெட்டவர்களே...
சதைமேனி கொப்புளங்களை
சகட்டு மேனிக்கு வர்ணித்து தள்ளி
காதல் கவிதை என்று கைதட்டிக் கொள்ளும்
காம கவிஞர்களே...
வெள்ளாமை விளையும் விளை நிலத்தில்
வெள்ளை ஆமை வருமென்று
மனைகளாகப் பிரித்து மகிழ்ந்து கொண்டிருக்கும்
மேல்தட்டு மங்குனி பெருமக்களே...
எவன் தலை கிடைத்தாலும்
எப்படி மொட்டை அடிக்கலாமென்று
சந்தர்ப்பம் தேடும்
சவரக்கத்தி சக்கரவர்த்திகளே...
வாக்களிப்பது ஜனநாயக கடமையென்று
வாய்க்கிழிய வசனம் பேசிவிட்டு
ஓட்டுக்குப் பணம் வாங்கி
ஊழல் பெருச்சாளியை தேர்ந்தெடுக்கும்
வெக்கங்கெட்ட வாக்காளர்களே...
ஐந்து வருடங்களில் ஒன்றும் கிழிக்காமல்
ஐந்து நாள் தேர்தல் பிரச்சாரத்தில்
எல்லாமும் கிழித்து விடுவதாக
சவால்களையே சவடால்களாய் விடும்
அடிமை தேசத்தின் அற்ப பதர்களே..
சாமிக்கும் சாமியாருக்கும்
வித்தியாசம் தெரியாமல்
வரங்களையே சாபங்களாகப் பெற்ற
போலிச்சாமியார்களின் பக்த கோடிகளே..
மாத பிதா குரு என
மூன்றாமிடத்தில் வைத்ததற்காக
மூன்று வயது சிறுமியை வன்புணர்ந்து
அத்து மீறும் சில ஆசான்களே...
குழந்தைகளைக் கொன்று
கும்மாளமிட்டு விட்டு
குழந்தை வரம் வேண்டி மீண்டும்
குலத் தெய்வத்திடம் நிற்கும்
குலத்தைக் கெடுத்த
கோடாரிக் காம்புகளே...
வரும்போது எதுவும் கொண்டுவருவதில்லை
போகும்போது எதுவும் கொண்டுபோவதில்லை
ஆனால்
உங்கள் பாவங்களை
என்ன செய்ய போகிறீர்கள்?
************ ஜின்னா *************