இளங்கிள்ளி என் தோழா

இளங்கிள்ளி என் தோழா
ஓடிவா இங்கே
இதோ
உனக்கான பாசறை
திறந்தே இருக்கிறது...

தாயின் கரம்விடுத்து
தைரியமாய் நடந்து வா

இந்த வையகம் உன்னை
வரவேற்குதடா வசீகரா

உன் பிஞ்சி பாதத்திலே
பூமிபந்து அகபட்டுவிட்டதே
பூமித்தாய் சிரிக்கிறாளடா; சிலீர்க்கிறாள்

ஆற்றல் மிக்கவனே அறிவேந்தி
அய்யன் வள்ளுவனை படி - அவன்
இரண்டடியில் உலகை அளந்தான் - நீ
ஒரே அடியில் அளந்துவிடு வா

மார்க்ஸின் எழுதுகோலை எடு
எழுது ஒரு உலக சரித்திரம்

பெரியார் அம்பேத்கர்
சிந்தனை அறிந்து
புரட்சிப் புயலாய்
பூமியை புரட்டு வா

ரீங்காரமிடும் சில்வண்டே
சிற்றோடையின் மெல்லிசையே
உன் உளறல்த் தமிழ்
ஏழு சுரங்களையும் மிஞ்சுதடா

வேங்கையின் மைந்தனே வாலறிவா
உன் வருகையால்
கிழக்கு சிவந்ததடா

சிற்றரசா வா
இந்த நாட்டிற்கு வந்த
சாபக்கேட்டை போக்கு

ஈழம் மீட்கவும்
தொல்த்தமிழ் காக்கவும்
தூயவனே வா நீ

உண்மையை போதித்து
ஒழுக்கத்தை துதித்து
ஒவ்வொரு மனதையும் உழுது
உயர்ந்த பண்பினை விதை

கம்பன் இருந்த இடம்
காலியாக கிடைக்கின்றதாம்
தீட்டடா ஒரு உன்னத காவியத்தை

என்ன இது
கன்னத்திலும்
கைகளிலும்
பொன்மலர் கால்களிலும் கருமையான பொட்டு?
ஹோ...!
கண்பட்டுவிடும் என்று உன்
தாய்தந்த வெகுமதியோ...?

கருணை சிந்தும் பூவிழியில்
கங்குகளும் உருவாக வேண்டும் தோழா
அநியாயத்தை காணும்பொழுது...

மூடநம்பிக்கைகளை முட்டித்தள்ளி
முன்னேற்ற பாதைகளை
உருவாக்க வேண்டும் உன்
மென்கரங்கள்

நிலவை காணாமல்
வானத்தில் எல்லோரும்
தேடிக்கொண்டு இருக்கிறார்களாம்

வா தோழா வா
தாய்மையின் கரம்விடுத்து ஓடிவந்து
தாய்மாமன் கரம்பற்றிக்கொள்

இதோ உனக்கான பாசறையின் கதவு
திறந்தே இருக்கிறது வா
மனிதம் அறி
உலகம் கல்
உனது நாளைய வெற்றிகளை
இன்றே தீர்மானிப்போம் வா...!


-------------------நிலாசூரியன்.

பிறந்து நான்கு மாதங்களே ஆனா எனது தங்கையின் மகன் ''இளங்கிள்ளி'' காக எழுதியது.

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர். (22-Mar-15, 11:19 am)
பார்வை : 142

மேலே