ஒரு வெள்ளையுடைக்காரி

இப்போது
சுற்றி முற்றிப்
பார்த்துவிட்டு
ஒரு முத்தமிடுகிறாள்.

சற்று முன்...

அலறல் சத்தம்.
உடையும் வலிகள்
ஒவ்வொன்றும்
நான்குச் சுவர்களில்
மோதி மோதியே
சுற்றுகின்றன.

பாதை மாறும்
கண்ணீர் ஆறு
காது நோக்கியே
வழிகிறது.

நரம்புகள் தெறிக்கும்
இரு கைகளுக்கு
கட்டில் கம்பிகள்
துணையாய்.

ஒரு
வெள்ளையுடைக்காரி
சற்றும் சற்றும்
இரக்கமில்லாதவள் போல
அந்த உயிரைப்
பிரித்தெடுக்கிறாள்.

நீங்கள் அப்பாவாகப்
போகிறீர்கள் என்று
தன் கணவனிடம்
சொல்லிவிட்டு
பணிக்கு வந்த
இந்த மருத்துவச்சி.

புது உயிரின்மேல்
புனிதக் கசடுகள்
துடைத்தெடுத்த பின்
பிஞ்சுப் பாதங்கள் மீது..

இப்போது
சுற்றி முற்றிப்
பார்த்துவிட்டு
ஒரு முத்தமிடுகிறாள்.
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (24-Mar-15, 12:47 am)
பார்வை : 73

மேலே