அப்பா
நான் உருவாக காரணமாகி, எனக்குள்ளும் ஒளி படைத்து, அவ்வொளியால் எனக்கு உயிர் அளித்தவர்.
எங்கள் பரம்பரையின் நகலை என்னுள் பாய்ச்சி,
எங்கள் தலைமுறையை தழைத்தெடுக்க எனக்கும் வாய்ப்பளித்தவர்.
நான் பிறந்ததை எண்ணியே பேராணந்தம் அடைந்து,
என் மழலை சிரிப்பு கண்டே தன் கவலை மறந்தவர்.
எவரேணும் சிறிது மரியாதை குறைப்பின், தலை எடுக்கும் சினம் கொண்டவர்.
ஆனால் என் மழலை காலால் பலமுறை அவர் நெஞ்சை உதைத்தாலும் , காலுக்கு முத்தமிட்டு மகிழ்ந்தவர்.
எனக்காகவே பலமுறை தூக்கத்தை துளைத்தவர்.
நான் தூங்குவதை காணவே தூங்காமல் இருந்தவர்.
நான் சிறிதும் கஷ்டப்படக் கூடாதென்று கஷ்டப்பட்டு உழைத்து, வறுமையை என்னிடமிருந்து மறைத்த கள்ளர்.
பள்ளி சென்ற முதல் நாளிலேயே எனை மருத்துவராக்கி பெருமிதம் அடைந்த ஞானி.
இவ்வுலகை நான் காண ஏணியாய் தன் தோளைத் தந்த தோழன்.
எனக்கு வேண்டியதை என்னுளிருந்தே யோசித்த யோகி.
கெட்டவை எனை நெருங்கும் போது எதிரியாய் மாறி, எனைத் தெளியச் செய்த உத்தமர்.
எனக்கு தேவையான அனைத்தும் அள்ளி அள்ளித் தந்த வள்ளல்.
ஆனால் என்னிடமிருந்து ஒரு இம்மி அளவு கூட பெற மறுத்த தியாகி.
நான் சினம் கொள்ளும் போதெல்லாம் சிந்தனையாய் வந்து,
தோல்வுற்று சோர்வுறும் போதெல்லாம் உற்சாகம் தத்து உசுப்பேற்றும் நண்பன்.
என் மேல் அன்பு செலுத்துவதில் என் 'அன்னைக்கே' நிகரானவர்,
ஒழுக்கம் சொல்லி நல்வழிப் படுத்துவதில் என் ஆசானையே மிஞ்சியவர்.
என்னோடே இருக்கும் நான் விரும்பிய தலைவன்.
என்னையே ரசித்த முதல் கலா -ரசிகன்.
இவர்தான் நான் பேசும் 'செந்தமிழே' பிணைக்கும் உயிரும், மெய்யும் சேர்ந்த உயிர்மெய்- "அப்பா".