அக்கினி வானவில் அவள்
ஊமையாய் நகர்ந்த
வாழ்க்கையின்
விடிவெள்ளியாய்
அன்று அவள் ..!
அந்திக் கருக்கலின்
அமைதியினூடே எழும்பிய
அடைக்கலாங்குருவிகளின்
ஆர்ப்பரிக்கும் கலகலப்பாய்
அன்று அவள்..!
பனித்துகள்களின் ஊடே
பரவிய கதிரொளி
அதிசயமாய் தோற்றுவித்த
அக்கினி வானவில்லாய்
அன்று அவள் ..!
எங்களின் அந்திகளை
மகிழ வைத்து மௌனமாய்
ரகசியங்கள் காத்த
மகிழ மரத்தினடியில் என்னோடு
அன்று அவள்..!
நினைவுச் சிறகுகளை
வெட்ட ..வெட்ட
முளைக்கும் ஞாபக இறகுகளாய்
இன்றைய இரவுகளிலும்
அன்றைய அவள்..!
வயிற்றுப் பிழைப்புக்கா இல்லை
சோற்று வாழ்க்கைக்கா..
எனத் தெரியாத வட்டவாழ்க்கைக்கு
என்னை விரட்டிய விதியின் கைகளில்
அன்று அவள்..!
வாங்கும் சம்பள நோட்டுகளில்
கசங்கியும் நசுங்கியும்
கிழிந்தும் போன காதலின்
அக்கினி வானவில்லாய்
இன்று அவள்..!
என்னை..
இன்னமும் புறக்கணிக்காத
என் தோட்டத்து அணிலாய்
என்னுடைய நினைவுகளில் ..எனது
அன்றைய அவள்..!
...
..
எங்கிருந்தாலும் வாழ்க ..!