முட்டாள்கள் தினம்

இது சுமார் 20 வருடங்களின் முன்னர் இதே போன்ற ஒரு நாளில் நடந்த இன்றும் மறக்க முடியாத உண்மை நிகழ்வு.


கிளிநொச்சியில் எங்கள் அம்மப்பாவும், அம்மம்மாவும் இருந்ததினால் நாமும் அங்கு செல்லவேண்டிய நிர்ப்பந்தம். அப்பா, அம்மா, அண்ணா, நான், தங்கச்சி ஆகியோருடன் ஒரு ஆசிரியை ஒருவரும் எங்களுடன் இருந்தார்கள். எங்கள் வீடு வாசல்படலையில் இருந்து 200 மீட்டர் தூரம் இருக்கும்.
காலை வேளை. நேரம் 8 - 9 இருக்கும். எங்களது வீட்டிலிருந்து 5 ஆவது வீட்டில் இருக்கும் நபர் ஒருவர் அவசர அவசரமாக ஓடிவந்தார். வந்ததும் வராததுமாக ஒரு குண்டை தூக்கி போட்டார்.

”டீச்சரும் தங்கச்சியும் பள்ளிகூடத்துக்கு சைக்கிள்ள போகும் போது அக்சிடன் ஆகி ஆஸ்பத்திரியில சேர்த்திருக்கிறோம். நான் தான் சேர்த்தனான். அதான் உங்ககிட்ட சொல்லிட்டு போவோம்னு வந்தனான்” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

எங்கள் அனைவருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. மீண்டும் அவரது வீட்டுக்கு சென்று எந்த ஆஸ்பத்திரி என்பதை விசாரித்துக்கொண்டு அங்கு நானும் அண்ணாவும் விரைந்தோம். போக்குவரத்து வசதியோ, தொலைதொடர்பு வசதியோ இல்லாத காலம். நடந்தே தான் போகவேண்டும். அன்றைய தினம் அண்ணா ஏதோ ஒரு காரணத்திட்காக பள்ளிக்கூடம் போகவில்லை. நானும் மை அடிப்பார்கள் என்ற பயத்தில போகவில்லை. கிட்டத்தட்ட 3 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஆஸ்பத்திரியை நடந்தும் ஓடியுமாக சென்றடைந்தோம். அங்கு எங்களுக்கு தெரிந்த அண்ணா ஒருவர் வேலை செய்வதால் அவரை போய் பார்த்தோம்.

“அப்பிடி எங்க யாரையும் கொண்டுவரல“ என்று சொன்னதும் எமக்கு தலையெல்லாம் சுற்றத்தொடங்கியது. இங்கு இல்லை என்றால் பெரியாஸ்பத்திரிதான். இனி பெரியாஸ்பத்திரிக்கு செல்லவேண்டுமானால் 10 கிலோமீட்டர் செல்லவேண்டும். யோசித்துக்கொண்டிருக்கும் போது அந்த அண்ணா சொன்னார்
“சின்ன காயம இருந்திருந்தால் இடையில எங்கயாச்சும் மருந்து கட்டிக்கொண்டு பள்ளிக்கூடத்துக்கு போயிருப்பார்கள். அங்க போய் பார்க்கிறது நல்லது“ என்றார்.

சரி என்று விட்டு பள்ளிக்கூடம் நோக்கி விரைந்தோம். பள்ளிக்கூடத்துக்கு கிட்டத்தட்ட 5 கிலோமீட்டர் போகவேண்டும். இடையில் வந்த லாண்ட்மாச்டெர், மாட்டுவண்டி போன்றவற்றை மறித்தும் - போக நடந்தும் ஓடியுமாக போய்சேர்ந்தோம்.
அங்கு போனதும் டீச்சர் எங்களை கண்டது ஓடிவந்தார். நாங்கள் விசயத்தை சொன்னதும் "எங்களுக்கு ஒன்றுமில்லை. நல்லாதான் இருக்கிறோம். உங்களை அவங்கள் ஏமாற்றி இருக்கிறார்கள். இண்டைக்கு முட்டாள்கள் தினம். அதான்." என்றார். அப்போதுதான் எமக்கு அந்த தினமே ஞாபகத்திற்கு வந்தது. நான் பள்ளிக்கூடம் போகாததும் அந்த காரணத்தினால் தான். ஆனாலும் அந்த நேரத்தில ஞாபகம் வரவில்லை. மீண்டும் அதே 5 கிலோமீட்டர் நடந்து வீடு வந்து சேர்ந்தோம்.



அவர் சொல்லும் போது அவரது முகத்தில் ஒரு உண்மைத்தன்மை தான் இருந்ததே தவிர கொஞ்சம் கூட சிரிப்போ அல்லது ஒரு பொய்யை சொல்லுறோமே என்ற எந்த மாற்றமும் இருக்கவில்லை. கடைசி நாங்கள் அவர்கள் வீட்டிற்கு சென்று விசாரிக்கும் போதாவது உண்மைய சொல்லிருக்கலாம்.

இப்போது அவர்கள் எங்கு இருக்கிறார்களோ தெரியாது. ஆனாலும் அவர்கள் மீதான ஆத்திரமும் கோபமும் இப்போதும் எனக்குள் உள்ளது.

எழுதியவர் : விக்கிரமவாசன் வாசன் (31-Mar-15, 8:47 pm)
Tanglish : MUTTALKAL thinam
பார்வை : 386

மேலே