என் கதை

ஒரு வனாந்தரத்தின் வாசலில்
உதித்த சிறுசிறு
சப்த ஸ்வரங்களின்
கூடல்பொழுதில் ஜனித்தேன்!

அந்த சிற்றோடை சிந்திய
மஞ்சள் நீரில்
மாராப்பு நனைத்து
பூப்பெய்தி பூரித்துப்போனேன்!

புதுக்காற்றின் விரல் ரேகையுடன்
என் நட்பும்
புயல்காற்றின் புணர்ச்சியுடன்
கற்புமாய் கரைந்து போனேன்!

எது இதுவென்று அறியும்
முன்னே உணர்ச்சிக்
கூம்பின் உச்சியில்
மொட்டுவிட்டது என்சூலகம்!

என் சிற்றிடை சிறுமேனி
சுற்றி வரும்
சின்னஞ்சிறுசுகளின் சிரிப்பினில்
சிலிர்த்துப் போனேன்!

தூக்கனாங் குருவியின்
கூட்டுக் கொரு
கீதம் இசைப்பேன்
குஞ்சுகளின் கீச்கீச்சுக்காக!

பஞ்சவர்ணக் கிளிகளின்
பாட்டுக்காக பரப்பி
வைத்து காத்திருந்தேன்
பசுங் கிளைகளை!

மாக்களின் மருக்களுக்கும்
மஞ்சம் விரித்து
பந்தி போட்டேன்
மலர் மெத்தையில்!

மலட்டு மனம்
சிறகுகளை சிதைத்தபோது
சிரித்தநான் உயிர்
உருவும்போது அழுகின்றேன்!

வேறு என்ன
செய்வேன் மரமாகிப்
போன நான்!!

எழுதியவர் : எஸ் கே மகேஸ்வரன் (1-Apr-15, 11:35 am)
சேர்த்தது : எஸ்.கே .மகேஸ்வரன்
Tanglish : en kathai
பார்வை : 79

மேலே