ஈழம் வெல்லும்

ஈழம்வெல்லும்
பாவலர் கருலைத்தமிழாழன்
புறமுதுகு காட்டாத புறநா னூறு
புவிக்களித்த போர்க்களத்தை மீண்டும் கண்டோம்
புறத்தாயோ கணவனொடு பெற்றெ டுத்த
புதல்வனைத்தான் போர்க்கன்று அனுப்பி வைத்தாள்
மறத்தாயாம் ஈழத்தாய் அவர்க ளோடு
மாவீரம் காட்டுதற்குத் தானே சென்றாள்
அறம்வழுவி நடந்திட்ட அந்தப் போரில்
அறத்தோடு போர்புரிந்தார் ஈழ மக்கள் !
சொந்தநிலம் பறித்தபோதும் குடியி ருந்த
சொந்தவீட்டைப் பறித்தபோதும் வாழ்ந்து வந்த
சொந்தஊரை விட்டுவெளி யேற்றி உற்ற
சொந்தத்தை வேறுவேறாய்ப் பிரித்த போதும்
தந்தையின்முன் மகளையுமே தமயன் கண்முன்
தங்கையையும் கற்பழித்துச் சிதைத்த போதும்
வெந்துமனம் தளர்ந்திடாமல் உரிமை மீட்க
வீறுகொண்டு எழுந்ததுதான் வீர ஈழம் !
எந்தவொரு நாட்டுடைய துணையு மின்றி
எவரிடமும் கைநீட்டிப் பெற்றி டாமல்
சொந்தறிவில் தரைப்படையை கடல்வான் படையை
சொந்தமாக உருவாக்கிக் கொடுங்கோல் ஆட்சிச்
சிந்தனைக்கும் எட்டாத முறையில் போரில்
சிங்களரின் இராணுவந்தான் குலைந டுங்க
தந்திரங்கள் சூழ்ச்சிகளை முறிய டித்துத்
தனிச்சரிதம் படைத்ததுதான் பாரில் ஈழம் !
தொப்புள்கொடி உறவென்று வெற்றுப் பேச்சில்
தோள்தட்டும் தமிழகத்தை; இறையாண் மைக்கே
தப்பாகும் எனமழுப்பும் இந்தி யாவை
தடுமாறும் ஐநாவை எதிர்பார்க் காமல்
துப்பாக்கி செய்யாத மாற்றந் தன்னைத்
துணிவோடு வாக்காலே செய்து காட்டித்
தப்பாமல் தனிஉரிமை பெறுவோம் என்றே
தலைநிமிர்ந்து நிற்கின்ற ஈழம் வெல்க !
(உலக அளவில் இலங்கை தடாகம் கலை இலக்கிய வட்டம் ஈழம் தலைப்பில் 2015 மார்ச் மாதம் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை )