தன்னம்பிக்கை -ரகு
முற்றிலுமாக விழுங்கப்பட்டபோது
சற்றே வியர்த்துப் போனது விதைக்கு
கழிசடையாய்த் தழுவிய மண்ணின் நெடி வியாபிக்க
வாய் பொத்திக்கொண்டது
வாந்திக்கு முன்னதான பாவனையில்
சற்றொப்பக் கடந்துபோகும் ஒரு
புன்னையின் வேரில் சீழ் வடிந்திருக்க
அதன் புண்களைக் கரையான்கள் அரிக்கக் கண்டு
வாழ்வா? சாவா? மயங்கிற்று விதை
குறுகிக்கிடந்த விதையை
குரூரமாய்ப் பார்த்துப் பல்லிளித்தது
பரவிக்கிடந்தப் பாலித்தீன்
காலப்போக்கில் வெக்கையின் பசிக்குத்
தன் சதைகளைக் கொடுத்த விதை
குருட்டுப் பார்வையில் மரண விளிம்பில்
மழை கேட்டு யாசித்தது
அகோரப் பசியும் அதீத நம்பிக்கையும்
கையகப்படுத்திய வாழ்நாளின் நட்சத்திரப் பொழுதொன்றில் தான்
பரிச்சயப்பட்டது அந்த பலத்த மழை
விதையின் கைகள் உயிர்த்து
இறுகப்பற்றிக் கொண்டன ஜனனத்தின் வேர்களை
பின்னிரவில் அணையாத பீடியொன்று
தன் அருகாமையில் வந்து விழுந்தும் சற்றும்
அதிர்ந்திராத விதை துளிரத் தொடங்கிற்று !

