கதாநாயகனும் ரசிகனும்
கதாநாயகன்
திரையில் தரையில் நடக்கிறான்
ரசிகனுக்கோ கால்கள் தரையில் இல்லை குதிக்கிறான் ரசிக்கிறான்!
கதாநாயகன்
அண்ணனுக்காக சண்டையிடுகிறான்!
தங்கைக்காக
அடி உதை பெறுகிறான்!
தந்தைக்காக
வாழ்கிறான்!
அன்னைக்காக
சாகிறான்!
ரசிகன்
விசிலடித்து ரசித்துவிட்டுத்
திரும்புகிறான் வீட்டிற்கு
குடும்பம் தெருவில் நிற்கிறது
வீட்டு வாடகை பாக்கியாம்!
மொத்தத்தில்
அவன் திரையில் சாவதுபோல் நடிக்கிறான்!
இவன் தரையில் வாழ்வதுபோல்
நடிக்கிறான்!!!