களப்பலி
ஆண்டுகள் ஐந்து ஆனால் போதும்
ஆண்டிட அனைவரும் அண்டி வருவர்
குடியரசு சமைத்திட வேண்டுமென்பர்
குடியர் அரசாய் குலைத்திடுவர்
மக்களாட்சி மலர்ந்தது என்பரவர்தம்
மக்கள் ஆட்சி மகுடமேற்பர்
வாக்குக்கேட்டு வணங்கி வருவர்
வகைவகையாய் வாக்குறுதி அளிப்பர்
மாவரைக்கும் எந்திரமுண்டு
மடிக்கணினி தானுமுண்டு
தலைக்கொரு தொகையுமுண்டு
தவறாது வாக்கு வேண்டும்
அவரவர் அட்டைக்கு அரிசி உண்டு
அஞ்சாரப் பெட்டிக்கு மளிகை உண்டு
இளைப்பார மின் விசிறி உண்டு
இனிய பொழுதிற்கு வண்ணத்தொலைக்காட்சி
இவையனைத்தும் இலவசமே
இன்னுமுண்டு வாக்களித்தால்
ஐய உந்தன் வாக்குதான் அதிவிலைக்கு விற்பீரோ
பைய பைய வாங்கிடுவீர் மீதமுள்ள தேவைக்கு
வைய வைய தந்திடுவோம் தானமாக இன்னுமே
ஈய ஈய ஏற்பீரோ இளிச்சவாயர் ஆவீரோ
அப்பாவி கையில் வாக்கு
தப்பாது விலையாகும் போக்கு
எப்போது புரியும் இவர்க்கு
அப்போது அவர்க்கு சுருக்கு
குடி வாழக் கோன் வாழ்ந்தான் அன்று
குடி கொடுத்து குடி கெடுப்பார் இன்று
சொல்வதெல்லாம் இவர் செய்வதுண்டு
செய்வதெல்லாம் நமக்குச் சொல்வதுண்டோ
வறியவர் வாழ்ந்திட வேண்டுமெனில்
வளம் தரும் வேலை தந்திடனும்
பொருளது ஈட்டிட வேணுமாயின்
பொருள் தரும் பிச்சை தவிர்த்திடனும்
நன்மை செய்வோர் திறனறிந்து
தேர்தல் செய்து தருவீரே
நாட்டை ஆளச் செய்வீரே
சேட்டை செய்யத் தொடங்கினால்
கோட்டையில் இருந்து குடிசைக்கு
பாட்டை போட்டுக் கொடுப்பீரே
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் களத்தில் பலியாவது வாக்காளரே