என்னை விட்டு போகாதே பகுதி 17

முதல் முறையாய் அவள் சிந்தும் கண்ணீர் இது, அவனுக்காக. தன்னை அவன் நேசித்திராவிட்டால் எப்படி அதனை தாங்கிக்கொள்ள முடியும் தன்னால் என்று ஏங்கிய அவள் நெஞ்சத்தின் கண்ணீர் அது. அதனை அவன் கவனிக்காமல் இல்லை.
பெண்கள் தங்களது துயரத்தை கண்ணீராய் வெளிப்படுத்தி விடுகின்றனர். ஆண்கள் என்ன செய்வர். கண்ணீர் சிந்தவும் முடியாமல், சொல்லி விடவும் முடியாமல் அவர்கள் படும் வேதனை தான் எத்தகையதோ. அதன் விளைவு தான் பித்து பிடிக்கும் நிலை. அதனால் தான் இந்த உலகில் பித்து பிடித்து அலையும் ஆண்கள் அதிகம் பெண்களை விடவும்.
அவனது நிலையும் அதுவே தான். என்ன செய்வது என்று சிந்தித்தபடி வண்டியை செலுத்தியவன் எப்போது அவனது வீட்டை அடைந்தான் என்பதை அவனே அறிந்திருக்கவில்லை. வீட்டினுள் நுழைந்தவன் பார்வையில் பட்டது அவனது ஒரு பிறந்த நாளில் கவியரசி அவனுக்கு அளித்திட்ட பொம்மை.
அந்த பொம்மையின் முகத்தில் இருந்த சிரிப்பு இன்று அவன் வாழ்வில் இல்லை. எந்த துயரம் ஆன போதிலும் அந்த பொம்மையை கண்டால் அதை மறந்து அவன் புன்னகை உதிர்ப்பது வழக்கம். ஆனால் இன்று, அந்த பொம்மை அவனது மனதை மேலும் வாட்டியது.
அதன் காரணம் அதை அவனிடம் அளிக்கையில் அவள் அவனிடம் சொன்ன வார்த்தைகள் “கண்ணா.. இந்த பொம்மை உன்னுடன் இருக்கும் வரை எனது நினைவுகள் உன்னோடு இருக்கும். நான் உன்னருகில் இல்லாத நொடிகளில் எனக்கான அன்பை பகிர்ந்துகொள்ளும் உரிமை இந்த பொம்மைக்கு மட்டுமே உண்டு. வேறு எவருக்கும் இல்லை.”
அவளது இந்த வார்த்தைகள் நினைவில் வர எப்படி அவனால் நிம்மதியாய் இருக்க முடியும். இப்போது அவளின் வார்த்தைகளை, நம்பிக்கையை காப்பாற்ற வேண்டுமெனில் அவன் தேவியை விட்டு விலகிட வேண்டும். அவளை விட்டு விலகாமல் இவனால் எப்படி கவியரசியிடம் அவனது காதலை சொல்லிவிட முடியும்.
இப்படி பல குழப்பங்களில் அவன் சிக்கி தவிக்க அவனது கைபேசி ஒலித்தது. அவன் வாழ்வில் தேவியின் மறு வருகைக்கு முன்பு வரை அவன் நேசித்த ஒலி அவனது கைப்பேசியினுடையது தான். இன்றோ, அவன் அந்த ஒலியை கேட்டதும் கலங்கினான். காரணம், அழைப்பது தேவி.
அழைப்பை ஏற்ற மறு கணத்தில் தேவியின் குரல் “என்ன கண்ணா உடல் நலம் இல்லையா? ஏன் பதிலேதும் சொல்லாமல் சென்று விட்டாய்” என்றது. என்ன சொல்வது அவளிடம் என்று அவன் சிந்தித்த வேளை அவனது கைபேசி எழுப்பிய ஒலி உணர்த்தியது அவனிடம் பேசுவதற்காக கவியரசி காத்திருக்கிறாள் என்று.
சற்றே மனதில் தைரியத்தை வரவழைத்து கொண்டு “தேவி, என் மனம் முழுதும் குழப்பத்தால் நிரம்பியுள்ளது. இப்பொழுது என்னால் எந்த ஒரு முடிவையும் சொல்ல முடியாது .. எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடு” என்றான்.
“எனக்காக நீ நான்கு வருடங்கள் காத்திருந்தாயே … உனக்காக நான் சில நாட்கள் காத்திருக்க மாட்டேனா கண்ணா?” அவள் இதை சொன்ன போது அவன் மனதில் எவரோ ஓங்கி அறைந்தது போன்று உணர்ந்தான் அவன்.
“சரி கண்ணா. உன் மனம் தெளிவான பின் என்னிடம் பேசு .. உன் பதிலுக்காக காத்திருப்பேன் … நான் உன்னை அதிகமாய் நேசிக்கிறேன் கண்ணா” என்று சொல்லிவிட்டு அவன் பதிலுக்காக காத்திராமல் வேகமாய் அழைப்பை துண்டித்தாள் அவள்.
அவள் இறுதியாய் சொன்ன அந்த “உன்னை அதிகமாய் நேசிக்கிறேன்” என்ற வார்த்தைகள் மட்டும் அவன் காதில் ஒலித்து கொண்டே இருந்தன. சட்டென்று சுய நினைவிற்கு வந்தவனாய் கவியரசியை அழைத்தான் பேசுவதற்கு.
“என்ன கண்ணா. வேலையாக இருக்கிறாயா? வெகு நேரமாக உன் கைப்பேசிக்கு முயற்சித்தேன். யாருடனோ பேசி கொண்டிருந்தாய் போல?” அழைப்பை ஏற்றதும் கேட்டாள் அவள்.
“அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை தேவி … “ தன் உதட்டை கடித்து கொண்டான் அவன். மறு பக்கம் அமைதியாய் இருந்தாள் அவள். “இல்லை கவி.. தேவி தான் அழைத்தது .. அவளோடு பேசி கொண்டிருந்ததால் தவறுதலாக அவள் பெயரை சொல்லி அழைத்து விட்டேன். என்ன கவி? சொல்” சமாளித்து விட்ட உணர்வு அவனுக்கு.
வலியை வெளியில் காட்ட மறுத்து மௌனமாய் அழுது கொண்டிருந்தாள் அவள். தன்னை மட்டுமே அழைத்த அவன் உதடுகள் இன்று தேவி எனும் பெயரை உச்சரிப்பதை அவளால் எப்படி தாங்கி கொள்ள முடியும். அதிலும் பெண்களுக்கு அது எளிதான ஒன்று அல்லவே.

எழுதியவர் : தண்டபாணி @ கவிபாலன் (4-Apr-15, 10:24 pm)
பார்வை : 310

மேலே