என்னை விட்டு போகாதே பகுதி 18

தன்னை கட்டுப்படுத்தி கொண்டு கேட்டாள் “இல்லை கண்ணா. தேவியை காண போவதாய் சொல்லி விட்டு சென்றாய். அவள் என்ன சொன்னாள் என்று தெரிந்து கொள்ள தான் அழைத்தேன்”.
“அதை எப்படி உன்னிடம் சொல்வது கவி” தன் மனதில் இருந்த தயக்கத்தை வார்த்தைகளாக்கினான் அவன். “உனக்கு சொல்ல பிடிக்கவில்லை என்றால் வேண்டாம்”அவள் உதடுகள் மட்டும் தான் இதை சொன்னது.
“அவள் என்னை காதலிப்பதாய் சொன்னாள்.. என்னுடன் இந்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்று சொன்னாள்” அவன் சொல்லி முடிக்க அவளது கட்டுப்பாட்டையும் மீறி அவளது அழுகுரல் வெளியில் கேட்டது.
அவள் அழுகுரல் கேட்ட நொடியில் அவன் மனம் சுக்கு நூறானது. இந்த உலகில் அவனை வீழ்த்தும் ஆயுதமாய் அவன் நினைந்தது அவளது அழுகையை தான். அவளின் விழிகளில் தோன்றும் ஒரு துளி கண்ணீர் அவன் மனதில் ஆயிரம் ரணங்களை உண்டாக்கிய உணர்வை தரும் அவனுக்கு.
“என்ன ஆனது கவி? ஏன் இப்படி அழுகிறாய்?” பதறியபடி கேட்டான் அவன். அதற்குள் அவள் தன் அழுகையை கட்டுப்படுத்தி கொண்டு இரும்புவது போல் பாவனை செய்தாள்.
“ஒன்றும் இல்லை கண்ணா.. நான் அழவில்லை.. உடல் நலம் இல்லாததால் என் குரல் உனக்கு வித்தியாசமாய் தெரிகிறது போலும்” சமாளித்தாள் அவள்.
இந்த நான்கு வருடங்களில் அவர்கள் நெருங்கி பழக தொடங்கிய பின் அவள் குரலில் ஏற்படும் சிறு மாற்றத்தை கூட அவன் நன்கு அறிவான். அவளது மகிழ்ச்சி, அவளது அழுகை, அவளது கோபம் அனைத்தும் அவன் அறிந்ததே. இது தெரிந்தும் அவனிடமே பொய் உரைக்கிறாள் அவள். சிரித்து கொண்டான் அவன்.
“நீ தேவியிடம் என்ன பதில் சொன்னாய் கண்ணா?” மனம் நிறைந்த தவிப்புடன் கேட்டாள் அவள்.
என்ன சொல்வது. என் மனம் என்றோ உன் வசமாகிவிட்டதே. என்னை நன்கு அறிந்தவள் என்கிறாயே. என் காதலை மட்டும் உன் மனம் அறியவில்லையா. தன்னுள் சொல்லி கொண்டான் அவன். மனித மனம் பல நேரங்களில் சொல்ல வேண்டியதை மௌனமாகவே சொல்லி கொள்கின்றன தங்களுக்குள்.
“என்ன கண்ணா. மௌனமாகி விட்டாய். நான் ஏதேனும் தவறாக கேட்டு விட்டேனா?” அவனது பதிலை அறிந்து கொள்ளும் தவிப்பில் மீண்டும் கேட்டாள் அவள்.
“இல்லை கவி. எதுவும் சொல்லவில்லை. என் மனதில் குழப்பங்கள் நிறைந்திருக்கிறது. யோசிக்க சில நாட்கள் வேண்டும் என்று சொல்லிவிட்டேன் அவளிடம்” சொல்லி முடித்தான் அவன்.
“இதற்காக தானே டெல்லிக்கு செல்லாமல் இருந்தாய். பின் என்ன தயக்கம் உனக்கு?” அவள் இதனை கேட்க அவன் மனம் மேலும் வேதனை அடைந்தது. கோபத்தில் இருக்கும் பொழுது நம் மூளை பெரும்பாலும் தவறாகவே கணக்கிட்டு விடுகிறது. அவளும் அப்படி தான், அவளது கோபம் அவர்களின் இடையில் வந்திருக்கும் தேவியின் மீது.
அவளது இந்த வார்த்தைகள் அவனை தாக்கின. ஏனோ அவனது இதயம் வலிகளை மட்டுமே சந்திக்கும் ஒன்றாகி விட்டது சமீப காலமாய். தான் டெல்லிக்கு செல்ல மறுத்ததன் காரணமாய் இருப்பவளே அதை புரிந்து கொள்ளவில்லை எனில் அவனால் என்ன செய்ய முடியும்.
“இல்லை கவி.. நான் டெல்லிக்கு செல்லாததற்கு அவள் காரணம் அல்ல..” சொன்னான் அவன்.
“நான் தான் காரணம் என்று சொல். உன்னை விட்டு பிரிய முடியாமலே நான் டெல்லிக்கு செல்லாமல் இருந்தேன் என்று சொல்” என தன் ஆசைகளை எல்லாம் சத்தமின்றி வேண்டுதலாய் அவன் முன் வைத்தது அவளது இதயம்.

எழுதியவர் : தண்டபாணி @ கவிபாலன் (4-Apr-15, 10:26 pm)
பார்வை : 323

மேலே