காலங்கள் மாறிட கவலைகள் தீர்ந்திடும் -கயல்விழி

காலங்கள் மாறிட கவலைகள் தீர்ந்திடும் -கயல்விழி

கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது, கால்கள் தடுமாறியது, வாகனங்களின் இரைச்சல் மட்டுமே செவிகளில் ஒலித்துக் கொண்டிருந்தது கணேசனுக்கு.

"யோவ் வீட்ல சொல்லிட்டா வந்த?" யாரோ ஒரு புண்ணியவான் காதருகில் ஓலமிட்டு விலகிச் சென்றான். இதற்கு மேல் முடியவில்லை தள்ளாடி விழப் போனவரை தாங்கிப் பிடித்தது இரு கரங்கள் .

"அச்சோ தாத்தா என்னாச்சு உங்களுக்கு...? பார்த்து வரக் கூடாதா...?"
கணேசனின் மங்கிய விழிகளிலும் வெள்ளை உடையில் தேவதையாய் தெரிந்தாள் அவள் .

"முதல்ல வாங்க... இப்பிடி என் கார்ல கொஞ்சம் நேரம் இருந்து கொள்ளுங்க..." என்றாள்.
இதை தவிர கணேசனுக்கு எதுவும் நினைவில் இல்லை .
கண் விழித்துப் பார்த்த போது வைத்தியசாலை கட்டிலில் படுத்து இருந்தார் ..

**********************************************************

"இந்த கிழட்டு சனியன் எங்க போய் தொலைஞ்சிசோ தெரியல... இன்னும் காணோம் " கோபத்தின் உச்சத்தில் புலம்பிக் கொண்டிருந்தாள் நிர்மலா .
"எனக்கு என்று வந்து வாய்ச்சிருக்குது. எங்கயாச்சும் செத்துகித்து தொலைஞ்சிட்டா மோகனுக்கு என்ன சொல்றது...?" என நினைத்தவாறு

"நித்தின் இங்க கொஞ்சம் வாடா செல்லம்..." நிர்மலா கூப்பிடவும்

"வை மாம் ?" அறைகாற்சட்டையில் வெட்டி விட்ட கோழி போல் இழுத்துக் கொண்டுவந்தான் நித்தின் (இது ஹிப் போப் )

"பாருடா இந்த கிழவன டினெர் வாங்கிட்டு வர சொன்னேன் இன்னும் வரல. கொஞ்சம் போய் பார்த்திட்டு வா கண்ணு" என்றாள்

"அய் ஜாலி ஜாலி கிழவன் அவுட் மாம்." வானுக்கும் பூமிக்கும் குதித்தான் .

"அப்பிடி சொல்லாத... உங்க அப்பா வந்தா என்ன பதில் சொல்றது" நிர்மலா காரணத்தோடு புலம்பினாள்.

"மாம் ரிலாக்ஸ். கிழவன் எங்க சரி விழுந்து கிடக்கும். விடிஞ்சதும் வந்திடும்." நிர்மலாவும் அமைதியானாள் .

******************************************************************************

"இப்ப எப்படி தாத்தா இருக்கு?" கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தாள் வெள்ளை உடை அணிந்த தேவதை .

"இப்ப பரவாலைமா. ரொம்ப நன்றி" என்றார் கணேசன்.

"நன்றி எல்லாம் எதுக்கு தாத்தா. நான் ஒரு டாக்டர் இது என்கடமை" என்றாள் அவள் .

"உன் பேரு என்னமா...?" என்றவும் சிரித்தபடி லட்சுமி என்றாள் அவள் .

"என் மனைவி பேரும் லட்சுமி தான் மா" என்றார் கணேசன்.
"அப்பிடிங்களா...? என் பாட்டி பெயரை தான் எனக்கு அம்மா வைச்சாங்களாம். ஆனா அவங்க உயிரோட இல்ல தாத்தா"
லட்சுமியின் மலர்ந்த முகம் வாடவும் கணேசன் கதைய மாற்றினார் .

"தாத்தா உங்கட வீட்டு போன் நம்பர் குடுங்க .வீட்ல எல்லாரும் தேடுவாங்க தானே...?"
இவளின் கேள்வியில் பெரியவரின் கண்கள் கலங்கியதை அவதானித்த லட்சுமி
"என்னாச்சி தாத்தா என்றாள்...?"

"ஒன்னும் இல்லமா தூக்கம் வருகிற போல இருக்கு" என்றதும்
"சரி தாத்தா நீங்க ரெஸ்ட் எடுங்க .காலைல பார்க்கலாம்" என்று விடைப்பெற்றாள் .

கட்டிலில் புரண்ட கணேசனுக்கு கடந்த கால வாழ்க்கை கண்முன் தோன்றி மறைந்தது .

***********************************************************************
கணேசன் ஒரு தொழிலதிபர். அன்பான மனைவி. ஆசைக்கு ஒரு மகன் மோகன்.

எவ்வளவு பணம் இருந்தாலும் ஏழ்மையை நேசிப்பவன் மோகன். ஆனால் தந்தை கணேசன் அப்படி இல்லை. தரம் பார்த்து பழகு என்று எப்போதும் மகனை கண்டிப்பதுண்டு ..

மோகன் படிப்பில் கெட்டிக்காரன் .கல்லூரியில் சிறந்த பெறுபேறு அவனுக்கு தான்.

என்றும் போல் கல்லூரி முடித்து வரும் வழியில் தான் கண்டான் அவளை. பேரழகி இல்லை இருந்தாலும் பிடித்து போனது இதயத்திற்கு. 'ஆம்' பேரம் பேசிக்கொண்டு இருந்தாள் பேசாத லவ் பேர்ட்ஸ்காக .
எப்படியோ வாங்கி பறக்கவிட்டாள் வானில். மோகனின் இதயமும் பறக்க தொடங்கியது வேணியின் பின்னால் .

பல நாள் பின்தொடர்தலின் பின் சில நாள் பார்வை பரிமாற்றங்கள் .இப்படியே தொடர்ந்து காதலாகி நின்றது .

"மோகன்.."

"ம்ம்ம்... சொல்லு வேணி"

"நீங்க என்னை ஏமாற்ற மாட்டிங்க தானே...?"

"ம்ம்ம்... ஏமாற்றுவேன் போடி" என்றான் மோகன் .

இடைவிடாது சிரித்தாள் வேணி
"உன்னால முடியாதுடா என்னை பிரிந்து வாழ" என்றதும்

"அப்ப எதுக்குடி கேட்கிற லூசு" என்றான் மோகன்

"சும்மா தான் டா..." என்றாள்.

நாட்கள் நகர்ந்தது .

அளவிற்கு அதிக காதலினால் அன்போடு சேர்த்து தன்னையும் கொடுத்தாள் வேணி .

காதலை மறைத்த அவர்களால் கர்ப்பத்தை மறைக்க முடியவில்லை. மோகன் ஒரு முடிவு எடுத்தான் .
வேணியை கூட்டிக்கொண்டு நேராக வீட்டுக்குச் சென்றான். நடந்த அனைத்தையும் சொன்னான். அவ்வளவு தான். வீட்டில் ருத்ர தாண்டவம் அரங்கேறியது .

கணேசன் கோபத்தின் உச்சத்தில் கத்தலானார்.
"கேவலம் இவளா என் வீட்டு மருமகள்...? கீழ்ஜாதி நாய். இவள நீ முடிச்ச... மறு நிமிசமே நெருப்பு வைச்சிக்கொண்டு செத்துருவன்."
என்று வெறும் வெருட்டலோடு நிறுத்தாமல் தன்மீது மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டார் .

அவரை தடுத்தி நிறுத்தி சமாளித்துக் கொண்டு இருந்தாள் லட்சுமி அம்மாள் .

வேணி நிலையறியாது திகைத்தாள். என்னால் ஒரு குடும்பம் அழிய கூடாது என்று முடிவெடுத்தாள்.

மோகனுக்கு பக்கங்கள் பல நிறைந்த மடல் ஒன்றை வரைந்து தோழியிடம் தூது செல்ல சொன்னாள். அவ்வளவு தான். ஊரை விட்டே போய் விட்டாள். கணேசன் ஆசைப் பட்டது போல பெரிய வீட்டு சம்மந்தம் கிடைத்தது .மோகன் அரைமனதோடு நிர்மலாவை திருமணம் முடித்தான் .

காலங்கள் கரைந்தோட மோகனுக்கு நித்தின் பிறந்தான். அவ்வளவு தான் லட்சுமி அம்மாள் வீட்டு வேலைகாரி ஆனார். கணேஷன் கடை, மார்க்கெட் என்று தொடங்கி லட்சுமி அம்மாவின் மரணத்தின் பின் வீட்டு வேலைக்காரனாகவும் மாறி விட்டார்.

மோகன் அதிக நாட்கள் வெளியூரில் இருப்பதால் இது பற்றி அறிந்துக் கொள்ள வாய்ப்புகள் இல்லை. கணேசன் எதுவும் மகனிடம் சொல்லுவதும் இல்லை .

******************************************************************

"தாத்தா எழும்புங்க..." கண் விழித்துப் பார்த்தவர்
'அட விடிஞ்சு போச்சா.' என்று நினைத்துக் கொண்டார். எப்போது தூங்கினார் என்பதும் அவருக்கே தெரியாது .

"ம்ம்ம்... தாத்தா இப்ப உங்க உடம்புக்கு ஓகே தானே. வாங்க உங்கள நானே கூட்டிட்டு போய் உங்க வீட்டில விடுறேன்" என்றாள் லட்சுமி.

மறுத்துப் பேச முடியாமல் தலையை ஆட்டினார் .

வாகனத்தின் கோரன் அடிக்கும் சத்தம் கேட்டு கதவை திறந்தாள் நிர்மலா. கணேசனை கண்டதும்
"எங்க போய்தொலைஞ்ச...? உன்னால எங்க நிம்மதியே போயிரிச்சி" என்றாள்.

"இல்ல மேடம் பெரியவர் ரோடுல விழப் பார்த்தார். நான் தான் ஹோச்பிட்டல் ல சேர்த்தேன்" என்றாள் லட்சுமி.
"சரி சரி... இப்ப போய் தோட்டத்துக்கு தண்ணீர் விடு..." என நிர்மலா கூற,
இடை மறித்து
"சாரி மேடம்... இவர் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்..." லட்சுமி முடிக்கும் முன்
"நீ வந்த வேலை முடிஞ்சா... கிளம்பு கிளம்பு" என்று விரட்டினாள்.

'சீ இப்படியும் மனிதர்களா... இவர்களெல்லாம் மனித பிறப்புக்களா... இல்லை....?' மனதினுள் எண்ணியவாறு கணேசனின் பக்கம் திரும்பினாள். அவரின் முகத்தில் வலி நிறைந்த ஏக்கம் .

மனதில் கணத்தோடு வீடு திரும்பினாள். எல்லாவற்றையும் தாயோடு பகிர்ந்து கொள்ளும் லட்சுமி அம்மாவிற்கு போன் செய்தாள்.
மறு முனையில் "ஹலோ" என்றதும் .

"அய் அப்பா...!! எப்படி இருகிறீங்க...?" என்றாள்

"நல்லா இருக்கேன்மா... நீ எப்படி இருக்க...? எப்ப வருவ...?"

"அப்பா... இங்க இப்ப வேலை அதிகம். நிச்சயம் சீக்கிரம் வரேன்.
நீங்க எப்ப அப்பா வந்தீங்க.?"

"நான் இப்ப தான் மா வந்தேன்..."

"அம்மா எங்கப்பா .?"

" இதோ குடுகிறேன் இருமா"

"ஹலோ அம்மா..."

"செல்லம் எப்படி இருக்க...?" மறுமுனையில் தாய் வேணியின் குரல்.

"நல்லா இருக்கேன். அப்பா எப்ப போறாராம்...?" கடுப்போடு கேட்டாள்.

"நாளைக்கு செல்லம்..."

"அது தானே பார்த்தன். அவர் எப்ப தான் எங்க கூட இருந்தார்" என்றாள் .

"அப்பாக்கு வெளியூர் வேலைல கண்ணா... அது தானே. ம்ம்ம் என் செல்லம் கோவிக்காதே என்னாச்சு இன்னிக்கு" என்றாள் வேணி.

"அம்மா மறந்தே போயிடன். இனிக்கு பெரியவர் ஒருத்தர் ரோடு ல விழப் பார்த்தார்..." என்று தொடங்கி அனைத்தையும் சொல்லி முடித்தாள்.

"ம்ம்ம்ம்.... இப்ப இப்படி தான் செல்லம்... மாமா மாமிய எங்க கவனிக்கிறாங்க. பெத்த தாய் தகப்பனையே பார்க்கிறாங்க இல்லை மா." என்றாள் வேணி.

"அம்மா இன்னொன்று கேளு... அவர் மனைவியின் பெயரும் லட்சுமியாம்" என்றாள்.

"என்ன...! அவர் பெயர் என்னமா...?" கேட்டாள் வேணி .

"கணேசன்..."

'அம்மாடி' பொறி தட்டியது வேணிக்கு... ஆனால் காட்டிக்கொள்ள வில்லை. மகளோடு பேசி தொலைபேசியை துண்டித்த பின் கணவனிடம் சென்றாள்.

"மோகன்..."

"ம்ம்ம்..."

"இப்ப அப்பா, மனைவி எல்லாம் எங்க இருக்காங்க...?"

"மனைவியின் ஊர்ல தான்... நிர்மலா வீட்ல... சீதனம் குடுத்த அப்பாக்கு பிடித்த .அந்த மாளிகையில்..."

"ஐயோ...!!!" வேணி தலையில் கை வைத்து நிலத்தில் அமர்ந்தாள்.

"என்னாச்சுமா..." மோகன் அன்போடு தலையை தடவிக்கொண்டே கேட்டான்.
லட்சுமிக்கு மாற்றம் கிடைத்து வைத்தியசாலை மாறி சென்றது முதல் அங்கு நடந்ததையும் சொல்லி முடித்தாள்.

மோகன் சற்றும் கவலை இல்லாமல் சொன்னான்
"நல்லா அனுபவிக்கட்டும். பணம் தானே பெருசு என்று நினைத்தார். இப்ப அவருக்கும் அதே போல மருமகள். நல்லா அனுபவிக்கட்டும்."

"என்ன மோகன் இப்படி பேசுறிங்க .அவர் உங்கட அப்பா .வேற வழி இல்ல .நடந்தது எல்லாத்தையும் லட்சுமி கிட்ட சொல்லப் போறேன்" என்றாள் வேணி .

மோகனும் மறுப்பு சொல்லவில்லை .

அன்று லட்சுமியை விடுமுறையில் வர சொன்னாள் வேணி .
"அம்மா ...." அன்னையை இறுக்கி அணைத்துக் கொண்டாள் .
"என்னம்மா...?"
சுக பரிமாறலின் பின் வேணி ஆரம்பித்தாள்.

"நான் ஒன்று சொல்லுவேன் புரிஞ்சி கொள்ளுவ தானே குட்டிமா..."

"என் அம்மா எது சொன்னாலும் சரியா தான் இருக்கும் சொல்லுங்க அம்மா." அன்னையின் மடியில் படுத்துக் கொண்டாள்.

வேணி தன் வாழ்க்கை முழுவதையும் சொல்லி முடித்தாள் .

"மாமா வேணாம் என்றதும் நான் உன்னை வயிற்றில சுமந்து கொண்டு இங்க வந்திட்டன். நண்பி ஒருத்தியின் வீட்ல தான் இருந்தேன்... மோகனுக்கும் நிர்மலாக்கும் திருமணம் முடிந்த பின்னும் மோகன் என்னை தேடுறத நிறுத்தல... எப்படியோ தோழி ஒருத்தியின் மூலம் எங்களை தேடி இங்க வந்திட்டார்... நான் இல்லாட்டி நிர்மலா கூட வாழ மாட்டன் என்று பிடிவாதமா சொன்னார். வேற வழி இல்லாம நண்பர்களோட கோயில்ல வைச்சி தாலி மட்டும் கட்டி 25 வருசத்துக்கு மேல வாழ்ந்திட்டன்" என்றாள்.

வேணியின் மடியினை லட்சுமியின் விழி நீர் நனைத்தது .
வேணி துடித்துப் போனாள்.

"மன்னிச்சிருமா..." மகளை மார்போடு அனைத்துக் கொண்டாள்.

"இதனால தான் அப்பா எங்க கூட இருக்கிறது இல்லை செல்லம்..."
அம்மாவின் வார்த்தையில் ஏக்கம் இருந்தது .
அப்பா வேணியின் முன் ஹீரோ ஆனார்.

'வேற ஒரு ஆம்பிளை என்றால் நிச்சயம் கலட்டி விட்டிருந்திருப்பான்' .அப்பாவில் மரியாதை கூடியது .

'அட அப்போ அண்டைக்கு நான் காப்பாற்றியது என் தாத்தா .
என் அம்மா, யார் சந்தோசமாக இருக்க வேணும் என்று நினைத்து இங்கு வந்தாரோ அவர் இன்று கஷ்டப்படுறார். இப்படியே விட கூடாது' என முடிவெடுத்தாள்.
அடிக்கடி மார்கெட் செல்லும் வழியில் தாத்தாவை சந்தித்தாள். முடிந்த அளவு அவரை சந்தோஷமாக வைத்துக்கொண்டாள்.

கணேசனை லட்சுமி அடிக்கடி வீட்டில் விடுவதை பார்த்த நிர்மலா கத்தத் தொடங்கினாள்.
"அவளோடையே போயிட்டு இரு. ஏன் இங்க வந்து தொலையிற. போறதுனா உன் மகனுகிட்ட சொல்லிட்டு போயிரு" என்றாள்.

கணேசனால் தினமும் இதை தாங்க முடியவில்லை. ஒரு நாள் மோகன் வந்ததும் நிர்மலா குதித்தாள்.
"உங்க அப்பாவ இனி நான் பார்க்க மாட்டேன். எங்கசரி முதியோர் இல்லத்துல விட்டுருங்க" என்று

நித்தினும் அதையே சொன்னான்
"டாட் உங்க அப்பா இங்க இருகிறதால எனக்கு வெக்கமா இருக்கு. என் பிரண்ட்ஸ் எல்லாம் கிண்டல் பண்றாங்க. இவர இங்க வைக்க வேணாம்..."

கேட்டுக் கொண்டு இருந்த கணேசனுக்கு உயிர் போனது போல இருந்தது. 'முதியோர் இல்லத்திலா...? இதற்கு மோகனும் தலை ஆட்டுகின்றானே. எல்லாம் என் தவறு தான்.பேசாம அந்த ஏழைப் பெண்ணையே கட்டி வைச்சி இருந்திருக்கலாம்.'

காலம் கடந்த பின் யோசிச்சி என்ன பயன்.

முதியோர் இல்லம் செல்லும் நாள் வந்தது
"அப்பா போகலாம் வாங்க" மறுத்து எதுவும் பேசாமல் கையில் பையை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.
வீட்டு வாசலை தாண்டும் போது ஒரு பெருமூச்சி விட்டார்.

நிர்மலாவும் நித்தினும் சந்தோசத்தில் குதித்தார்கள்.
'அப்பாட சனியன் தொலைஞ்சிருச்சு'.

பயணம் தொடர்ந்துகொண்டே இருந்தது. கணேஷன் எதுவும் பேசவில்லை. இப்போது அவர் முகத்தில் எந்த உணர்வும் இல்லை. நடைப் பிணம் போல் இருந்தார்.

சுமார் 8,9 மணி நேர பயணத்தின் பின் ஒரு வீட்டின் முன் வாகனம் நிறுத்தப்பட்டது. "இறங்குங்க அப்பா..." எந்த எதிர்பார்ப்பும் இன்றி இறங்கினார்.
ஆனால் இன்ப அதிர்ச்சியில் மூழ்கினார் .

ஆம் அவளே அவளே தான் .
அதே வெள்ளை உடை தேவதை மீண்டும் தோன்றினாள்.

"தாத்தா ...." இறுக்கி அணைத்துக்கொண்டாள் ...

வாசலின் ஓரத்தில் அதே அமைதியோடு விழிநீர் மல்க தலைகுனிந்து நின்றுகொண்டிருந்தாள் வேணி .

இப்போது எல்லாம் புரிந்தது கணேசனுக்கு. வார்த்தைகள் வரவில்லை...

"என்னை... என்னை... மன்னிசிருமா வேணி... "
முழுவதும் முடிக்கும் முன் கணேசனின் காலடியில் கிடந்தாள் வேணி.
"மாமா நீங்க தான் என்னை மன்னிக்கணும்..."

தவறுகள் மன்னிக்கப்படும் போது மனிதனும் கடவுள் ஆகின்றான்.

மாமன் மருமகள் பிள்ளை என மகிழ்ச்சியில் திளைத்திருக்க.

மோகன் மட்டும் மீண்டும் பயணிக்க தொடங்குகின்றான் மனைவியை பார்க்க .
இந்த முறை மன நிம்மதியோடு....

---முற்றும் --

எழுதியவர் : கயல்விழி (4-Apr-15, 10:28 pm)
பார்வை : 476

மேலே