புருவகாலம் - 10 மழைக் காலமோ வெயில் காலமோ

சோகத்தை கரைத்துப் போட்ட காலம் கொஞ்சம் கொஞ்சமாய் வாழ்வின் புத்தகத்தை படித்து புரியவைத்தப் பிறகு சொந்த பந்தங்களின் பார்வையில் என் தாயாரை பெண் பார்த்து என் தந்தைக்கு மனம் செய்வித்து என்னையும் சேர்த்து எங்களையெல்லாம் மகவாய் பெற்றெடுத்த ஒரு தருணத்தில்... முன்னொரு காலத்தில் என் கிராமத்தின் துணை தலைவராக பணியாற்றியதுதான் இதுவரை என் தந்தையை அடையாளபடுத்தி நிற்கிறது என்று நினைக்கிறேன்.

இவரின் வயதையொத்தவர்கள் இவரை vaice என்று அழைப்பதுதான் வழக்கம். பல மனிதர்களிடம் மரியாதையும் மதிப்பும் கிடைத்துவிடுகிறது என்பதற்காக வறுமை போய் விடவா போகிறது? என் தந்தை சிறு வயதில் தன் தாயை இழந்து அனுபவித்த வலிகளை விட நாங்களெல்லாம் இருந்தும் வறுமையால் அனுபவித்த வலிகள் அதிகம்.

விலா எலும்பெடுத்து பொம்மை செய்யும் கால சக்கரத்தில் ஏழ்மை சூறாவளி எங்களை விட்டு வைத்ததாக எனக்கு தெரிந்து எந்த கடவுளும் எழுதிவிட்டு போனதாய் நினைவில்லை.

என் தந்தை சிறு வயதில் அனுபவித்த கொடுமைகளை எல்லாம் நாங்கள் அனுபவித்துவிடக் கூடாது எனும் சிந்தனையோடு கால ஓட்டத்தில் பசியால் தவிக்கும் வயிற்றின் காட்டுகத்தலில் பிள்ளைகள் சுருண்டு விழுந்து விடுவார்களோ என்னும் அச்சம் அவரை உசுப்பிகொண்டே இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இரவு உணவு தொடங்கி... காலை தேர்வு எழுதுவதர்க்காய் வாங்க வேண்டிய பேணாவிலிருந்து, கால் குடைச்சலுக்கு மருந்தும் ஏற்கனவே வாங்கிய கடனுக்கு வட்டியும் கட்டுவதுவரை, எதிர் வீட்டு பிறந்த நாள், பக்கத்துவீட்டு காத்து குத்து, அடுத்த தெருவில் மஞ்சள் நீராட்டு சடங்கு, பக்கத்து ஊரில் திருமணம், நண்பருடைய மருமகளுக்கு வளையணி விழா இப்படி ஏதாவது ஒரு காரணத்துக்காகவேனும் நிச்சயம் என் தந்தை எங்கள் மருதநிலத்தின் வயல்களின் வரப்புகளில் அலைந்து திரியவேண்டி இருந்திருக்கிறது மண்வெட்டியை சுமந்துகொண்டு.

கருவமரத்தின் முட்களை பொருட்படுத்தாத அவர் பாதங்கள் மழைக் காலமோ வெயில் காலமோ ஓய்வின் வார்த்தைகளை பேசாமல் ஊமையாகவே பயணிக்கும்.

இன்னும் கூட அப்படித்தான் இருக்கிறது.

எழுதியவர் : வரலாறு சுரேஷ் (4-Apr-15, 9:53 pm)
சேர்த்தது : வரலாறு சுரேஷ்
பார்வை : 138

மேலே