முள் - நாகூர் கவி

காலால் மிதித்தவனையும்
கையால் எடுக்க வைக்கும்
கூரிய ஆயுதம்...

தெரியாமல் நுழையும்
தேகத்தில் குழையும்
தெரிந்தே குடையும்...

தமிழெழுத்தின் நெடிலெழுத்தை
தவறாமல் உனை
உச்சரிக்க வைக்கும்...

உன்னுள் புகுந்த செய்தியை
ஊரறிய வைக்கும்
உன்னை ஒலிப்பெருக்கியாக்கும்...

ஓடி விளையாடு பாப்பா
பாரதியின் பாட்டுக்கு
முட்டுக்கட்டை போடும்...

ஒற்றைக் காலிலே
உனை நிறுத்தி
ஒப்பாரி ராகம் பாடும்...

அம்மா அப்பா அண்ணாவென
அன்பின் பெயர்களை
அழுதபடி சொல்ல வைக்கும்...

அன்பான உறவுகள்
அரவணைத்து எடுக்க வந்தால்
அவர்களோடும் கண்ணாம்பூச்சி ஆடும்...

காய்ந்த முள்தான்
அதற்கும் உண்டு
காயமாக்கும் பல்தான்...

முள்ளை முள்ளால் எடுக்கும்
பழமொழி புரிவாய்
முள்ளின் பலத்தினை அறிவாய்...

முள்ளின் காதலி
ஊக்கை நுழை
குறிப்பாய் அதன் நாக்கை நுழை...

ஊக்கு வந்ததும் எக்கிப்பிடிக்குமே
முள்ளுக்கு முத்த நிவாரணமிட்டு
பின்னே வெளியே தூக்கியெறியுமே...

ஊக்கை வரவழைத்ததும்
உனக்கு ஊக்கமாகும்
முள்ளின் மறுவடிவமே ஊக்குமாகும்...!

எழுதியவர் : நாகூர் கவி (5-Apr-15, 3:38 am)
பார்வை : 564

மேலே