பெயரன் உலகம்
பெயரன் உலகம் பேருலகம் -மழலைச்
சாரல் நிறையும் தாழ்வாரம் -தமிழ்க்
கீறல்கள் வழியும் தாம்பாளம் -இல்லற
ஊறலில் ஊறிய சமுக்காளம்
மட்டில்லா குறும்புகளின் கூடாரம் -அவனுள்
கற்றிட கலைகள் நமக்கு ஏராளம் -அவன்
சுற்றி சுழலும் நிற்கா பம்பரம் -நாமோ
நிற்க மட்டும் இயலும் நங்கூரம்
உதைக்கிறான் தன்னிரு
பிஞ்சுப் பாதங்களால் -வலியில்லை
கதைக்கிறான் அகராதி
காணா சொற்களால் -பிழையில்லை
நடிப்பாய் நானழுகிறேன்
அது பொய்தான்
துடித்து அழுகிறான் அவன்
அது மெய்தான்
சிரிக்கிறான்
சிறுமுல்லைப் பற்கள்
மொட்டுகளாய்ய்தெரிக்கின்றன
விரிக்கிறான்
இருவிழிகளை
காட்சிகள் வானளவு தெரிகின்றன
உரிக்கிறான்
என் தாள்களின் எழுத்துக்களை
குவியல் குவியலாய்
தரிக்கிறான் வேடங்கள்
என் ஆடைகளால் அவியல் அவியலாய்
(இரண்டாம் நிலை மருத்துவ ஆய்வில் வென்று மருந்துகளால் உயிர் வாழமுடியும் என சான்றளித்த சுக சூழல் துய்க்க ஒரு வாரம் பெயரனுடன் கழித்தேன் ,,,,,அடடா .....அவன் வளரும் வரை வாழ வேண்டும் நான் ..... )
(தொடரும் ....தொடரலாமா ??)