உனை நோக்கியே நீண்டிடும் என் பாதங்கள்-வித்யா

உனை நோக்கியே நீண்டிடும் என் பாதங்கள்-வித்யா


அந்த நீளுகின்ற பாதையிலே நீண்ட நேரம் நீ காத்திருந்தும், நகர்ந்துவரும் நாழிகையில் நகாராமல் நானிருந்தும் அந்த சாலையின் வளைவுகளில் நான் தொலைந்திருக்கவாய்ப்பில்லைதான். புது வண்ணங்கள் பூண்ட வானவில்லாய் அந்த விண்மீன் காட்டில் உலாவியது புது அனுபவம்தான்.

ஏதோ ஒரு மின்மினி தேசத்தில் நுண்ணிய ஒளிச்சிதறலாய் நானிருந்தேன். ஏதோ தூர தேசத்தில் அகதியாய் நீயிருந்தாய். அதோ அந்த போதி மரத்தின் சுவாசக்காற்று எனைத் தீண்ட...உனைத் தீண்ட...நமைத் தீண்ட.........பேரொளியின் பெரும்புயலின் நடுவே ஆழ்ந்த தியானத்தில் நாம்.

போர்முரசுகளின் பேரதிர்வும்...வெண் புரவிகளின் காலடிச் சந்தங்களும்...கூச்சல்களும் குழப்பங்களும் அந்த ராஜாவின் பின்னணி இசையில் ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க....மறுபுறம்,நீ,நான்,நாம் என எண்ணங்கள் வாகைகள் சூடிக் கொண்டிருந்தன.

கலவர தேசத்தில் நுழைந்த தென்றலாய் ஏக்கங்களும்..அதற்கு ஒத்தூதிய நம் பார்வைகளும் மூடா வானத்தில் தூவா மேகம் பொழிந்த நனையா மழையில் உலர்ந்துக் கொண்டே இருந்தது காதல் மட்டுமே.

நான் வெண்ணிலவின் வரவு பார்த்திருந்த நாட்களிலெல்லாம் எனக்கொரு சூர்யோதயத்தைப் பரிசளித்திருப்பாய். நீ விண்மீன்களை எண்ணிக்கொண்டிருந்த நாட்களிலெல்லாம் நான் மின்மினிகளைப் பரிசளித்திருப்பேன்.

பிரிவின் நிமித்தங்களில் நிலவோ, வானமோ, மேகமோ பரிமாறிக்கொள்ளப்பட்ட இரவுகளெல்லாம் நம் பெயர் சொல்லியே விடிந்திருக்கும். புது மூங்கிலொன்று பழைய பாடலிசைத்து உன் இரவின் தாகம் தீர்த்திருக்கும்.

ஒலிக்கற்றைகள் உன் குரலெடுத்து என் செவி சேர்க்க, பேரிரைச்சலோடு என் கண்ணீர்த்துளிகள் கதறி அழுத நாட்களிலெல்லாம் மறுமுனையில் இணைப்பு துண்டிக்கப் படாததை நீ அறிந்திருக்க வாய்ப்பில்லைதான்.

ஒற்றையடிப்பாதைகள் வலிவிட்டும் வழிமாறிய பயணங்களில் உனையடையா என் பாதங்களுக்காக மலர்விரித்துக் காத்திருந்தாய். உனை நோக்கியே நீண்டுவிட்ட பாதைகளின் திருப்பங்களில் எனையே உனக்கு அற்பணித்திருந்தேன் .

ஊரறிய விழித்திருந்த நம் காதல் உள்ளூர உறங்கிக் கொண்டுதான் இருந்திருக்கிறது. இல்லையெனில் உனக்கு நான் தரா முத்தங்களும், எனக்கு நீ தரா முத்தங்களும் இன்னாட்களிலெல்லாம் மோட்சம் அடைந்திருக்கும்.

கோடைக்காலப் பிரிவுகளே கடந்துவிட்ட போது, தாலிக்கு சேதிசொல்லி விட்ட இந்த வசந்தகாலப் பிரிவு நமை என் செயுமென நீ கூறியபோது இதுவும் கடந்து போகுமென இருந்துவிட்டேன்.

விடைபெறுதல் நிமித்தத்தில் என் வாசல் மழையில் உன் கண்ணீர் நனைய, பெற்றோர் முன் பேச கூசி சிறு தலையசைத்தலில் போய் வா என்றேன். மெளனமாக எனை நீ பார்ப்பதை எதிர்கொள்ள திராணியில்லாமல் ஓடிஒளிந்து கொண்ட நொடிதனை விவரிக்க வார்த்தைகள் இல்லை.

நாட்குறிப்பில் நானெழுதிய உயில் சாசனமும், அதை வருடும் மயிலிறகும், அவகாச நொடிகளில் உன் சட்டைப்பையில் நானிட்டசெண்பகப்பூவின் வாசமும், முருகன் சிலையும்,துண்டுக் காதத்தில் உன் பெயரில் அர்ச்சனை செய்த ஆஞ்சநேயர் கோவில் குங்குமமுமென வழியனுப்புதல் முடிந்து எனை நீங்கிச் சென்ற ஒவ்வொரு அடியும் காதலின் நீளம் வளர்ந்திருந்தது.

எனை நினைக்கும் நொடிகளிலும், அழைக்கும் நாட்களிலும் உப்பு நீரில் நீ மிதந்துக் கொண்டும், நான் மூழ்கிக் கொண்டும் இருந்திருக்கக் கூடும். ஊருக்கெல்லாம் சேதி சொல்லி உனக்காகக்காத்திருப்பேன். முடிச்சுகளுக்கு ஒத்திகைப்பார்த்துகொள்...கால விரயங்களில் நான் கரைந்துவிடுவேன்.

உன் மன நாட்டின் அரசியாக பதவிப் பிரமாணம் செய்துவிடு. உன் பாதம் நனைக்கும் அலையெங்கும் மயிலிறகெனமாறி வருடிக்கொண்டிருப்பேன்.செண்பகப்பூதரும் சுகந்தமென உனையிழுப்பேன்.

இந்நேரம் என் விரல் வரைந்த காதல் ஓவியங்களுக்கு உன்னிதழ்கள் முத்தங்களும், உன் கண்கள் காதலும் கொடுத்து உயிரூட்டிக் கொண்டிருக்கும்.அன்றொருநாள் தெரிந்தே தவறாக சொல்லிய வார்த்தைக்காக உதடு கடித்து வெட்கப்பட்ட நொடிகள் நினைத்தே விடியட்டும் இன்றைய உனதிரவும்.... பிழையைத் திருத்த மனமில்லாமல் மீண்டும் பிழையாக்கிய உன் சாமர்த்தியம் நினைத்து இனிவரும் எனதிரவுகளும்....!!







-இப்படிக்கு

மனம் கவர்ந்த மாலுமியின்
வரவை எண்ணிக் காத்திருக்கும்
"உன் காதலால் ஆனவள்"

எழுதியவர் : வித்யா (8-Apr-15, 11:36 pm)
பார்வை : 305

மேலே