புது வருடமும் சிறு மாற்றமும் குட்டிக் கதை

மதியத்தினை கடந்த சுட்டெரிக்கும் வெயிலில் தனது பேரனின் வருகைக்காக வாசலில் காத்துக் கொண்டிருந்தார் அம்மம்மா. எப்பவுமே பாடசாலை வாகன சேவையில் தான் வருவான் அவரின் செல்ல பேரன் ரிஷிநாத். இன்றும் வழமை போலவே வாகனத்தில் வந்து வாசலில் இறங்கியதும் வீட்டினு அதே மின்னல் வேக உற்சாகத்தில் நுழைந்தான்.

"ஆஹ்ஹ்ஹ் ரிஷி குட்டி வந்திட்டான்... ஓடி வாங்க... ஓடி வாங்க... உடுப்பை மாத்திட்டு கை, காலை கழுவிட்டு சாப்பிடுவம்..." அம்மம்மா கூப்பிடவும் சாப்பிடுவதற்கு தயாரானான்.

"அம்மம்மா... இந்த முறை வருசப் பிறப்புக்கு என்ன செய்ய போறீங்க...?"
"இந்த முறையும் ரிஷி குட்டிக்கு புது உடுப்பு எடுத்து, கோவிலுக்கு போயிட்டு வந்து, பொங்கல் பொங்கி சாப்பிடுவம். சரி தானே..." -அம்மம்மா சொன்னார்.
"அப்பா வரமாட்டாரா அம்மம்மா...?" பிள்ளை ஆவலுடன் கேட்க
"இல்லையப்பு... லீவு கிடைக்கலையாம். பிள்ளைண்ட பிறந்த நாளுக்கு கண்டிப்பாக வருவார் என்றவர்."
"போங்க அம்மம்மா... சரி... அம்மாவாச்சும் நிற்பாவா?"
"ஒ... அம்மா நிற்பா தானே குட்டி."

இரவு வேளை,
ரிஷியின் அம்மா வேலை முடித்து வீட்டுக்கு வந்ததும்,
"அம்மா... இந்த முறை வருசத்துக்கு அப்பா வரமாட்டாராமா?"
"இல்லைப்பு... ரிஷிகுட்டிக்கு உடுப்பு அனுப்பியிருக்காரு..." என்றவாறு கையிலிருந்த உடுப்பு பாக்கினை ரிஷியிடம் கொடுத்தார்.
ஆவலுடன் வாங்கி பிரித்து பார்த்துக்கொண்டே,
"அம்மா... இந்த முறை சித்தி வீட்டுக்கு போயிட்டு வருவோமா?"
"இல்லை குட்டி. எனக்கு வேலைடா. அம்மம்மாவுக்கு முடியாதுல. வேறு ஒரு நாளுக்கு போயிட்டு வருவோம். சரி தானே?"
"இந்த முறையும் வேலையாம்மா...? ஒவ்வொருமுறையும் இப்பிடித்தான். போங்க... நான் கோவம்..." என்றவாறு உடுப்பை அப்பிடியே போட்டுடு அறையினுள் சென்று படுத்துக்கொண்டான்.
"ஏண்டி... இந்த முறையாவது லீவை போட்டுடு வீட்டில நில்லேன். பாரு அவன்ட முகம் வாடி போயிட்டுது." தாய் கூற
"என்னமா நீயுமா...? எனக்கும் நிற்க தான் ஆசை. வேலையே… விடமுடியாதுமா... அதுவும் புதுவருசம் எண்டா வாழ்த்து நிகழ்ச்சி, அது, இது என்று ஓரே நிகழ்ச்சிகளாத்தான் இருக்கும். உனக்கு தெரியும் தானே..." ரிஷியின் அம்மா ரித்திகா கூறினாள்.

ரித்திகா.
இலங்கையின் பிரபல வானொலிகளில் ஒன்றான வண்ணம் பண்பலைகளில் இருக்கும் விரல் விட்டு எண்ணக்கூடிய பிரபல அறிவிப்பாளினிகளில் ஒருவர். இவரது தனித்துவமான பாணிக்கு மயங்கிய ரசிகர் கூட்டத்தை கொண்டவர். கணவர் வெளிநாட்டில் பணிபுரிகிறார். அதிகாலையில் வேலைக்கு போனால் வீடு திரும்ப இரவாகிவிடும். தனது வேலையில் அதிக நேரத்தினை செலவிடுவார். ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஏதோவொரு விதத்தில் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று இரவு பகலாக உழைப்பவர்.

நாட்களும் நகர்ந்தன. சித்திரை வருசமும் நெருங்கிக்கொண்டிருந்தது. தான் நினைத்தது நடக்காது என்பதை புரிந்து கொண்ட ரிஷியின் முகம் எப்பவுமே வாடிய நிலையில் இருந்தது. அவனிடம் பழைய உற்சாகம் இல்லை.
*********************
ஒருநாள் ,
வண்ணம் பண்பலை வானொலிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டான்... 'வண்ணத்தின் வண்ணக்கோலங்கள்' நிகழ்ச்சியில் அறிவிப்பாளினி பிரியங்காவுடன் தொடர்பு கிடைத்தது.
"வணக்கம்... யாரு பேசுறீங்கள்?" - பிரியங்கா
"அக்கா... நான் ரிஷி பேசுறன்..." -ரிஷி
"அட குட்டி தம்பி... எப்பிடி இருக்குறீங்க ரிஷி...?" - பிரியங்கா
"நான் நல்ல சுகம் அக்கா..." - ரிஷி
"சித்திரை வருசத்துக்கு உடுப்பெல்லாம் எடுத்திடீங்களா...?" - பிரியங்கா
"ஓ...! எப்பவோ எடுத்திட்டேன்" - ரிஷி
"சரி... இந்த நிகழ்ச்சியில யார் யாருக்கெல்லாம் வாழ்த்துக்கள் சொல்லபோறீங்க?" - பிரியங்கா
"வாழ்த்து சொல்லல. உங்க சேர் கூட கதைக்கலாமா?" - ரிஷி
"அவர் கூட என்ன கதைக்க போறீங்கள். அவர் இங்க நிற்க மாட்டார். என்கிட்ட என்னவென்று சொல்லுங்க. நான் அவர் கிட்ட சொல்லுறன். சரியா...?" - பிரியங்கா
"ம்... எங்க அம்மாவுக்கு வருசத்துக்கு லீவு வேணும். கொடுக்க சொல்லுங்க அவர்கிட்ட...." - ரிஷி
"உங்க அம்மாவா... யாரு... நீங்க தவறுதலாக அலைப்பெடுத்துடீங்கள் என்று நினைக்கிறான் தம்பி..." – பிரியங்கா
"எங்க அம்மா பெயரு ரித்திகா. உங்க கூடத்தான் வேலை செய்யிறா என்று தெரியும்..." - ரிஷி
"அட... நீங்க ரித்திகாவோட மகன்னா...? முதல்லே சொல்லிருக்கலாம்ல... அப்பவே யோசித்தான்... இந்த குரலை எங்கயோ கேட்டிருக்கேனே என்று... "
"ப்ளீஸ் அக்கா... இந்தமுறையாவது அம்மாவுக்கு லீவு கொடுக்க சொல்லுங்க... ஒவ்வொரு முறையும் அம்மா வாறன் வாறன் என்றுட்டு வரமாட்டா... நானும் அம்மம்மாவும் மட்டும் தான் பொங்கல் பொங்கி கோவிலுக்கு போயிட்டு வாறது. இந்த முறையாச்சும் அம்மா என்கூடவே இருக்கணும்னு ஆசையா இருக்கு அக்கா. நீங்க தான் உங்க சேர் கிட்ட சொல்லணும்... "
"சரி ரிஷி குட்டி. நானும் சொல்லி பார்க்கிறன். ஆனா, அவங்களுக்கு நிறைய வேலை இருக்கும் என்றா என்ன பண்ணுறது குட்டி. வேலையும் முக்கியம் தானே குட்டி..." - பிரியங்கா
"இந்த முறை பொங்கல் பொங்கி 'சிறுவர் இல்ல' த்தில இருக்கிறவங்களுக்கு சாப்பாடு கொடுக்கணும்னு ஆசை. அதுக்கு அம்மாவும் என்கூட இருக்கணும். அதான் அக்கா..." -ரிஷி
"இந்த வயதில இப்பிடி ஒரு ஆசையா...? நீங்க நல்லா வரணும் ரிஷிகுட்டி..."- பிரியங்கா
"அரை நாள் லீவு சரி கொடுக்க சொல்லுங்க அக்கா. சிறுவர் இல்லத்துக்கு போயிட்டு என்னை அங்கயே விட்டுடு வந்தா போதும். பிறகு எப்பவுமே நான் அம்மாவை கரைச்சல் பண்ண மாட்டன் என்று சொல்லுங்க அக்கா. ப்ராமிஸ் அக்கா... " - ரிஷி அழுதே விட்டான்.
"என்ன ரிஷிகுட்டி இது. அழக்கூடாது... அக்கா சொல்றன்ல... உங்க அம்மா உங்க கூட இருப்பாங்க... அவங்க கூடத்தான் நீங்க பொங்கல் எல்லாம் பொங்கி வருசத்தை கொண்டாட போறீங்கள்... ரிஷி குட்டி சொன்னா கேட்பீங்கள்ள... " - பிரியங்காவின் குரல் தழுதழுத்தது.
தொலைபேசி அழைப்பினை துண்டிக்கவும் வெளியே கடைக்கு சென்றிருந்த அம்மம்மா ஓடோடி வரவும் சரியாக இருந்தது...
"என்ன காரியம் பண்ணின ரிஷி... அவங்க அம்மாகிட்ட சொன்னாங்க என்டா என்ன நடக்கும் என்று தெரியும் தானே... அம்மாட கோபம் தெரிஞ்சும் ஏனப்பு இப்பிடி... "
"அடிச்சா அடிக்கட்டும். பரவாயில்லை. இந்த தடவை அம்மா நிற்கணும்..." - ரிஷி தெனாவெட்டாக கூறினான்.
"அதில்லைடா... ரேடியோல இதை எல்லோரும் கேட்டிருப்பாங்கள... எல்லோரும் உன்ட அம்மாவைப் பற்றி என்ன நினைப்பாங்க... அம்மாவுக்கு எவ்வளவு அவமானமாக இருக்கும் சொல்லு. அவள் வந்து என்ன பண்ண போறாளோ தெரியலையே என்று எனக்கு பயமா இருக்கு..." அம்மம்மா கூறத் தான் தன்னுடைய தவறு புரிந்தது.

மாலை மயங்கி இரவை தொடும் பொழுது ரிஷியினுள் பயம் குடிகொள்ள தொடங்கியது. அம்மாவின் கோபம் கண் முன்னே வந்து செல்ல மருள தொடங்கினான்.

ரித்திகா வீட்டினுள் நுழையும் பொழுதே...
"அம்மா... ரிஷி எங்க...?" கேட்டாள்
"அறைக்குள்ள தான் இருந்தவன் புள்ளை. பாருமா" என்ன நடக்க போகுது என்ற பயத்தில சமையல் அறையினுள் இருந்து வெளியே வந்தார் அம்மம்மா.
"இண்டைக்கு எங்க வீட்டு பெரிய மனுசர் என்ன பண்ணிருக்கார்னு தெரியுமா உனக்கு... " என கேட்டவாறு அறையினுள் சென்றாள்
"அவன் ஏதோ தெரியாமல் செய்துட்டான் புள்ளை. விட்டுடுமா..." அம்மம்மா கூறினார்.
போன வேகத்தில திரும்பி வந்து
"அறைக்குள்ள இல்லையே... விளையாட போயிட்டானா வெளில...?" ரித்திகா கேட்க
"இல்லை புள்ளை. இங்க தான் நின்றவன்..."
"ரிஷி... ரிஷி..."
"ரிஷி கண்ணு... ரிஷி..."
வீடு முழுவது தேடியும் காணவில்லை.

ரிஷியின் அறையினுள் சத்தம் கேட்கவே உள்ளே சென்று பார்த்தால் யாருமே இல்லை.
'இங்க இருந்து தானே சத்தம் வந்தது...' என நினைத்தவாறு...
"ரிஷி... எங்க இருக்குறாய்...?" என கேட்டவாறு எதேச்சையாக கட்டிலின் கீழே பார்த்தாள் ரித்திகா.
"அம்மா... சாரி மா... என்னை மன்னிச்சுடுங்க மா... அடிக்காதிங்க மா... இனிமே இப்பிடி பண்ணமாட்டன்மா... சாரி மா..." என்றவாறு இன்னமும் தனது உடலை மேலும் கூனிக்குறுகிக் கொண்டான்.
"நான் அடிக்கல ரிஷிகுட்டி. வெளில வாங்கோ..." அன்போடு அழைத்தாள் ரித்திகா.
பலமுறை அழைத்த பின்னர் அன்புக்கு கட்டுப்பாடு மெல்ல மெல்ல வெளியே வந்தாலும் உள்ளுக்குள்ளே பயம் குடிகொண்டிருந்தது அவனது கண்களில் தெரிந்தது.

வெளியில் வந்த ரிஷியை கட்டி அணைத்துக்கொண்ட ரித்திகா,
"இண்டைக்கு பெரிய மனுசர் என்ன பண்ணினீங்க..."
ரிஷி பயத்துடன் மௌனமாக நின்றான்..
"ஏன் அப்பு ... என்னை கண்டால் உனக்கு பயமா...?"
"இல்லை... ஆனா நான் பண்ணினது தப்பு தானேமா..."
"உன்மேல எனக்கு கொஞ்சமும் கோபம் இல்லைடா தங்கம்... ஆனா அதுக்காக இப்பிடிலாம் போன் பண்ணி பேசக்கூடாது.... சரி தானே.... எனோட வேலை அப்பிடி. என்ன பண்ணுறது. எனக்கும் உன்கூட இருக்கணும் என்று ஆசை தான்...? அதனால இந்த முறை மூன்று நாள் எண்ட ரிஷி குட்டி கூடவே இருக்க போறான். சந்தோசமா...? "
ரித்திகா சொல்லிமுடிக்கமுன் அவளது தாயின் கழுத்தை கட்டி முத்தமாரி பொழிந்தான் ரிஷி .!!!!!!!

எழுதியவர் : கயல் (9-Apr-15, 7:41 am)
பார்வை : 398

மேலே