சாய்வு நாற்காலியின் சோகம்
நாங்க
வேறு வீடு போறோம்
நல்லா படி
எல்லோரையும் நேசி என
முதியோர் இல்லம்
போகப் போகும்
முத்துசாமியும், தெய்வானையும்
பேரனின் தலை கோதி
முத்தத்தோடு அறிவுரை...
பிரியா வா
நீயின்றி
விரியாது - என்
வாழ்க்கை சிறகுகள்
பொய் மூட்டை அவிழ்த்திடும்
பிரேம் குமார்...
ரெண்டு மாசம்
மக வீடு தான்
போனா என்ன
சொத்தில் மட்டும் உரிமை
சோறு போட நம்பளா
மூணு மருமகள்கள்
முணு முணுத்தாலும்
நாதியில்லாததால்
நாலு மாசத்துக்கு
ஒருமுறை
வீட்டில் தேதித்தாள்
கிழித்து
வீசப்படும் முன்னே -என்
வீடு மாற்றபடும்...
சர்க்கரை, ரத்த அழுத்தம்
முதுகு வலி, மூட்டு வலி
மாத்திரைகளாய் -என்
கணவரின் நினைவுகள்...
இறைவா
எடுத்துக் கொள்ளேன்
என்னையும் தான்
இறைஞ்சிடும்
மூதாட்டி கல்யாணி....
அகா சுகா
தம்பிக்கு
வடக்கு வாசல் வீடு
அப்பிராணி
அண்ணனுக்கு
முட்டுச் சந்தில்
பழைய வீடா?
மாமாவை விடாதீங்க
கணவனுக்கு
மைதிலியின்
ஓயாத மந்திரம்...
உன் பிள்ளையையும்
ஏற்பேன் - நம்
இரண்டாம் திருமணத்துக்கு
இசைவு கொடு எனும்
கேசவனின் வார்த்தைகளை
நம்புவதா வேண்டாமா
இருதலைக் கொள்ளியாய்
கைம்பெண் கல்பனா...
இனி நாம் இருந்தென்ன
மூவரும் முடித்துக் கொள்ளலாமா
வேற்று மத ஆண்டவனையும்
விடாது வேண்டி
வீட்டில் பிறந்த ஒத்த பிள்ளைக்கு
பத்து வருடம் கழித்து
சொத்து பத்து
அத்தனையும் வித்தென்ன
புள்ளையை
புற்றுநோய்
விட்டு விட மறுக்குதே...
புலம்பும்
பிரபாகரன், மீனாட்சி தம்பதி...
.
இப்படி
எத்தனை எத்தனையோ
வார்த்தைகள்...
அன்பு, நட்பு, காதல்
பரிவு, பாசம், பிரிவு, ஏக்கம்
இன்று எதையுமே
கேட்க முடியவில்லையே....
பூங்கா
சாய்வு நாற்காலி
தனிமை
தாங்காமல்
சோகமானது....