யுகம் தாண்டும் சிறகுகள்-18 - பொள்ளாச்சி அபி
"உன் பிடிவாதம்
எனக்கு பிடிக்கிறது
அதனால் தான்
இதயம் கிடந்து துடிக்கிறது.!" --என்பது மு.மேத்தாவின் வரிகள்.காதல் என்ற வார்த்தையே இன்றி நீளும் ஒரு காதல் கவிதை.
"நீ
நீயாகத்தான் இருக்கிறாய்.
நான்தான்
நானாக இல்லை.. " என்ற வரிகளும் காதல் குறித்த அவரது வரிகளே..!
"ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம் .! -- ---- நா.முத்துக்குமாரின் இந்த வரிகளும்,காதலின் வலியையும்,விருப்பத்தையும் அழகாகச் சொல்கிறது.
இதேபோல் “பூக்கள்” எனும் வரிசையில் தோழர் வெள்ளூர் ராஜா எழுதிய கவிதைகளைப் படித்தபோது காதலை, வரிகளில் சொல்லாமல் வாசிப்பவனை உணரச்செய்யும் அழகிய வரிகளாக இருந்தன.
"தலை சாய்த்து
அப்படியென்ன பார்வை...
தூண்டில் முள்ளாட்டம் என்கிறாய்...
கருப்பு நதியில்
மிதக்கும் பவளப் பாறையில்
வழுக்கி விளையாடும்
கயல்கள் இரண்டை வைத்துக் கொண்டு...!
-----------------
"அமுதென்பது...
உன்
ஐ விரல் கடைவது...!
-----------------
"நீ
தட்டில் சோறு வைத்து
காகத்தைக் கூவிஅழைக்கிறாய்...
எதிரில் உள்ள
குட்டிச் சுவற்றில்
வந்தமர்ந்தன கிளிகள்...!
--------------------
"பேப்பரும் பேனாவுமாக
ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறாய்...
என்ன செய்கிறாய் என்றேன்..
அழகுக் குறிப்பெடுக்கிறேன் என்கிறாய் ..
ஓ...
அழகு...
குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறது..!
--------------
"உன் அப்பாவைப் போல
நானும் ஒரு கவிதை எழுதிட வேண்டும்
அதற்கு உன் உதவி வேண்டுமே...!
---------
வெள்ளூர் ராஜாவின் இந்தக் காதல் கவிதைகள் தனக்குள் இருக்கும் காதலை நேரடியாக வெளிப்படுத்தவே இல்லை.ஆனால்,தான் மறைத்துக் கொண்டிருக்கும் காதலை வாசிப்பவரின் மனதிற்குள் மிக ரகசியமாகக் கடத்திவிடும்போது,அது இயல்பாய் கவித்துவம் மிக்கதாகிவிடுகிறது. மகிழ்வின் மயக்கத்தைத் தரும் காதலின் அழகிய உச்சமாக மனதுக்குள் திரிகின்றன இக்கவிதைகள்.
காதல் கவிதைகள் நன்றாக எழுதவரும் என்பதால்,காதலை மட்டுமே பாடிக் கொண்டிருக்கும் பட்டியலில் இவர் நிச்சயமாக இல்லை.சமூகத்தின் சகல பரிமாணங்களுக்குள்ளும் நுழைந்து அலசுகின்ற திறன் பெற்றவரே.! அவ்வாறான ஒன்றாக,"கற்றவர்கள்" எனும் தலைப்பிலான கவிதையொன்று மனதைக் கட்டிப்போட்டது.
பொதுவாக தனிமனித அளவில் தனது குணநலன்களை உயர்த்திக் கொள்ளவும், சமூகத்தோடு இணைந்து இணக்கமாக வாழக் கற்றுக் கொடுக்கவும்,தன்னைச் சார்ந்த உறவுகளோ, ஊரோ,அல்லது உலகமோ..தான் இயங்கும் வெளிகளிலெல்லாம் சகமனிதர்களை உயர்த்தி விடுவதற்கான கருவியாகவும் கல்வி இருக்கவேண்டும் என்பதுதான் ஒரு மதிப்பீடாக இருந்தது.
“தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்”..என்பது கல்வி குறித்த வள்ளுவனின் வாக்கு.
“நீதி உயர்ந்த மதி,கல்வி-அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்”.. உயர்ந்த மனிதர்களின் தகுதிகளில் ஒன்றாகக் கல்வியும் இருக்கும் என்று கணித்தவன் பாரதி.
மலைவாழை அல்லவோ கல்வி.?-நீ
வாயார உண்ணுவாய் போ என்புதல்வி..! கல்வி என்பது அறிவுப் பசியடக்கும் அமுதம் என்பது பாரதிதாசனின் கூற்று.
ஏட்டில் படித்ததோடு இருந்துவிடாதே.!-நீ
ஏன் படித்தோம் என்பதையும் மறந்துவிடாதே..” கற்ற கல்வி என்பது உனது சிந்தனை விரிவடைவதற்கான வாசல் என்பது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வழிகாட்டல்..!
ஆனால்,இன்றைய கல்வி என்பது மனிதர்களை உற்பத்தி செய்வதாகத் தெரியவில்லை. சிந்திக்கத் தெரிந்த ரோபோக்களையே உருவாக்கி வருகிறது.அந்தச் சிந்தனையிலும், வசதியான வாழ்க்கை அதற்குத் தேவையான பணம் என்றே பெரும்பாலும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறான ரோபோக்களை ஒரு உற்பத்திப் பண்டம் போல எதற்காக,யாருக்காக உருவாக்கிக் கொண்டிருக்கிறது இந்தச் சமூகம்.? என்ற கேள்வியை,நமக்குள் நாமே கேட்டுக் கொள்ள வேண்டியதிருக்கிறது.
இந்தக் கல்விமுறை, நம் முன்னோர் கண்ட கனவை ஒத்திருக்கிறதா.? இல்லையெனில் இப்போதைய கல்வியின் பங்கென்ன.? அது குணாம்சரீதியாக மனிதருக்குள் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.?
காலம் அவர்களை எப்படி மாற்றியிருக்கிறது என்று ஒரு யதார்த்தமான ஒப்பீட்டின் வழியாக கற்றவர்கள் என்ற கவிதையின் மூலம் நம்மை உண்மையின் சுடுநெருப்புக்குள் தள்ளிவிடுகிறார் கவிஞர் வெள்ளூர் ராஜா..
"அகத்திக் குலையொடித்து
அவளின் ஆடுகளை மேய விட்டு
வேம்பம் பூக்கள் உதிர்ந்த மர நிழலில்
அவளோடு
அளாவிக் கொண்டிருக்கிறான் இடையன்...
தன் முந்தானையால்
கடைவாயில் ஒழுகும் பால் துடைத்து
தான் பறித்த பாலாட்டங்குலைகளை
அவனின் செம்மறிக் குட்டிகளுக்கும்
சேர்த்தே புகட்டிக் கொண்டே
ஆசுவாசமாய்
அளாவிக் கொண்டிருக்கிறாள் இடைச்சியும்...
ஆளரவமற்ற
அந்த அத்துவானக் காட்டில்
காடைகளின் கதறலும்
ஓடை நரிகளின்
ஊளையும் தவிர ஒருவரில்லை...
இருந்தும்
அத்து மீறாமல் அந்திக் கருக்கலில்
அளாவிக் கொண்டே வீடு திரும்புகிறார்கள்
அவர்களும் ஆடுகளும்...
இந்த வழி வந்த
சிறுமி ஒருத்தியைத் தான்
பள்ளிக்குச் செல்லும் வழியில்
வன்புணர்ந்து
அவள் பாலுறுப்பை சிதைத்து
வீசி இருக்கிறது நீங்கள் கற்ற கல்வி...!
--- ஆளரவமற்ற அத்துவானக் காட்டுக்குள் கால்நடைகளின் மேய்ச்சலுக்காக செல்லும் இடையனையும்,இடைச்சியையும் கண்காணிக்கவோ,கேள்வி கேட்கவோ யாருமில்லை. அவர்கள் எதற்காக சென்றார்களோ அதனைத் தவிர்த்த வேறு சிந்தனையும் அவர்களுக்கில்லை.ஆனால்,கற்றவர்களுக்கு நிச்சயம் இருக்கவேண்டிய குணங்களாக எதுவெல்லாம் ஆண்டாண்டு காலமாக வரைமுறைப்படுத்தப் பட்டிருக்கிறதோ..அதுவெல்லாம்.. தனிமையிலும் நேர்மையாக இருக்கவேண்டும் என்ற சுயஒழுக்கமும், நாகரீகமும், தன்னைப் போல மற்றவரும் சகமனிதரே என்ற மிக உயர்வான புரிதலும் அவர்களுக்கு இருந்தது.
பாமரர் என்று இந்தச் சமூகம் எக்காளமிடும் கல்லாதவர்கள்,உயர்ந்த மனிதர்களாக இருக்கும்போது,கற்றவர்கள் மேற்கொள்கின்ற குரூரம், அன்றாடமும் நாம் வாசிக்கின்ற கேள்விப்படுகின்ற பார்க்கின்ற செய்திகளாக,நிகழ்ந்து கொண்டே இருக்கின்ற அப்பட்டமான நிஜம் நெஞ்சைச் சுடுவது மட்டுமில்லை.நமது சமூகத்தின் மீதான சுயவிமர்சனமாகவும் நிற்கின்றது இந்தக் கவிதை.
இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது எனில்,உள்நாட்டில் அது தேசம் தழுவிய திருவிழாவாக மாறிப்போகிறது.அயல்நாடுகளுக்கோ தாங்கள் “பணம் கட்டிய குதிரை ஜெயிக்குமோ தோற்குமோ..” என்ற அளவில் பதட்டத்தை ஏற்படுத்துகிறது.தங்கள் அளப்பரிய முதலீடுகளுக்கான சந்தை வாய்ப்புகள் நிலைக்குமோ,நிலைக்காதோ என்ற கலக்கத்தை ஏற்படுத்துகிறது. “உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாட்டில் நடைபெறும் தேர்தல்”என்ற சிறப்பு அடைமொழியோடு நiடைபெறுகின்ற இத்தேர்தலின்போது உள்நாட்டில் நடைபெறும் கூத்துகள் சொல்லிமாளாது.
பதவி ஒன்றையே குறிவைத்து நகரும் அரசியல்கட்சிகளின் டாம்பீக வாக்குறுதிகள்.வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக செய்யப்படும் தகிடுதத்தங்கள்,சாதி மதரீதியான அணிதிரட்டல்கள்,செய்யப்படுகின்ற அல்லது மறைக்கப்படுகின்ற படுகொலைகள்..என்று பட்டியலைத் தொடர்ந்து எழுதினால்,அதைக் கொண்டு ஒரு நூலகமே அமைத்துவிடலாம்.
இவ்வளவு விஷயங்கள் நடைபெறும்போது,சமூகத்தின் மீது அக்கறை கொண்ட கவிஞனாக இருப்பவன்,கௌரவமான நல்ல மாற்றத்தை விரும்புகின்றவன் கண்ணுக்கு மட்டும் அது தப்ப முடியுமா..?
“நாடகத் தேர்தல்” என்ற தலைப்பிலான கவிதையொன்றில்,கவிஞர் வெள்ளூர் ராஜா தனது பார்வையை இப்படி எழுதுகிறார்.
“தெருவெங்கும்
தேசம் பற்றிய பேச்சு
நாடு நட்டாற்றில் என்றும்
அவரே ரட்சகர் என்றும்
அச்சரம் பிசகாமல்
ஒலித்தன குரல்கள்
பச்சை ரத்தம் பருகிய
வரலாற்றை மறைத்தபடி...
அடுத்த குரல்கள்
அவரைப் பாதகர் என்றும்
கொலைப் போதகர் என்றும்
பரப்புரை நிகழ்த்தினர்
தம் ரத்தக் கரங்களை
மறைத்தபடி...
மற்றுமொருவர்
வான் வழிப் பறந்து
வாய் மொழி சொன்னார்
அத்தனை கரங்களிலும்
ஊழல் கறை
அகற்றுக ஆட்சியை
அமர வையுங்கள் தம்மை என்று
தனது தீர்ப்பு நெருங்கும் கூச்சமின்றி
கேட்போர் காதில் இலை சொருகிய படி...
ஒதுக்கீட்டில் பேரெடுத்தவர்
ஒதுக்கீட்டுக்கு ஆள் இன்றி
ஒதுங்கியவர்களோடு
ஒரு அணியாய் உலா வந்தபடி...
நான்காம் தமிழைப் போல்
நாடகக் காதலைக் கண்டறிந்து
ஊருக்குச் சொன்னவர்
கொஞ்சமும் கூச்சமின்றி
மீண்டும் ஒரு புதிய வேடத்தில்
பத்திரிக்கைக்குப் பல் இளித்தபடி....
துண்டு பற்றி நன்கு அறிந்தவர்
தொண்டு பற்றி அறியாதவர்
தன் துண்டை கரங்களில்
சுற்றிக் கொண்டு
பேரத்தில் தீவிரம் காட்டினார்
தாழ்ப்பாள் போடும் வரை
உ. பா வில் இருந்தவர் போலும்
தெளிந்தும் தெளியாமலும்
வீதிக்கு வந்தார் இன்னுமொருவர்...
முன்னும் பின்னும் அணிவகுத்த
வாகனங்களை வாய் பிளந்த படி
வேடிக்கை பார்த்துக் கொண்டும்...
அவரவர்
கொள்கைக் கோவணங்கள்
கழற்றிக் கொடிகளாய்
தலைக்கு மேலே
பறப்பதை வேடிக்கை பார்த்தபடியும்
இலவசமாய் இன்னும் என்னவெல்லாம்
கிடைக்கும் என்றெண்ணி
சுவரொட்டிகளை மேய்ந்து கிடந்தன
தேர்தல் காலக் கழுதைகள்...—என்று முடிகிறபோது, அதுநேரம் வரை வாசித்தவனின் மனதிற்குள், எத்தனை எத்தனை காட்சிகளை மனதிற்குள் விதைத்து விடுவதுடன்,இன்னொருமுறை நடைபெற்ற தேர்தலில் பங்கேற்ற ஆயாசமும்,அங்கலாய்ப்பும் நமக்குள் ஏற்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை. இதுவே அந்தக் கவிதைக்கு கிடைத்த வெற்றி.!
சுதந்திரத்திற்குப் பிறகு,இப்படிப்பட்ட தேர்தல்களின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள்,அதற்குப்பின் இதுவரை செய்தது என்ன.? இந்தியர்களில்,நாளொன்றிற்கு இருவேளை பட்டினி கிடப்போர் இத்தனைகோடி,ஒருவேளை பட்டினி கிடப்போர் இத்தனை கோடி,வறுமைக்கோட்டுக்கு கீழ் இத்தனை கோடி.., மத்தியமாநில அரசுகளுக்கு கடன் தொகை இத்தனை லட்சம்கோடி..எனப் புள்ளிவிபரங்களை வருடம்தோறும் வெளியிடும் நிலையில்தான் இன்னும் நமது அரசுகள் இருக்கின்றன.
வெறும் 700 ஆண்டுகள் மட்டுமே வரலாறு பெற்றுள்ள அமெரிக்காவும், அணுகுண்டுகளால் சிதைந்து புனர்ஜென்மம் பெற்ற ஜப்பானும்,இரண்டாம் உலகப்போரில் இரண்டுகோடிப்பேரை பலிகொடுத்த ரஷ்யாவும் இன்றைக்கு வல்லரசுகளாக இருக்கின்றன.ஆனால்,பல்லாயிரம் ஆண்டு..கிருதயுகம்,திரேதா யுகம் என்றஅளவில் பழமை மிக்க,வரலாறும் கலையும், பண்பாடும்,நாகரீகமும், அரசாட்சிமுறையின் மாட்சியும் நிறைந்தது நம்நாடு..என்ற பெருமையை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சொல்லிக் கொள்கிற நம்நாட்டில்தான் இன்னும் வறுமைக் கோட்டிற்கான பட்டியல்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம்.முதியோர் இல்லங்களைப் பெருக்கிக் கொண்டிருக்கிறோம். பிச்சைக்காரர்களின் எண்ணிக்கைப் பெருகிக் கொண்டிருக்கிறது.அப்படியானால் எங்கே தவறு நடந்து கொண்டிருக்கிறது..? படைப்பாளர்கள் யோசிக்க வேண்டாமா..?
இந்தக் கேள்விகளின் நீட்சியாக, “ஒரு கிழவி தோண்டும் அரசாங்கம்”என்ற தலைப்பில் கவிஞர் எழுதுவது..
சுதந்திரத்தின் வயதையொத்த
ஜனநாயகத்தைப் போல
உடல் மெலிந்த
கிழவி ஒருத்தி
கோணிப்பை வாழ்க்கையை
முதுகில் சுமந்தபடி
நடுங்கும் விரல்களால்
தெருவோரத்திலிருக்கும்
குப்பைக் கிடங்கிலிருந்து
தனக்கான உணவைத் தோண்டுகிறாள்..” நமது நாட்டின் நிலை குறித்த பிரதிபலிப்பாக இந்த வரிகளைச் சொல்லிவிட்டு,அங்கு கிடைப்பதெல்லாம் என்னவென்று அடுத்த பத்தியில் இவ்வாறு துவங்குகிறார்.
“வெளிப்படுகிறது
முடை நாற்றமெடுக்கும்
பன்னாட்டு உணவுக் கழிவுகளும்
பிராந்திப் பாட்டில்களும்
நெகிழிப் பைகளும்
இன்ன பிற
அரசாங்கம் தோண்டிய புதையல்களும்..!” இந்த வரிகளில் அரசாங்கம் தோண்டிய புதையல்கள் எனும் வரியைத்தவிர,மற்ற வரிகள் எல்லாம்,அரசியல், பொருளாதாரம்,பண்பாடு,நாகரீகம் என்பவையெல்லாம் எவ்வாறு சீரழிந்தன என்பதற்கான காரணிகளாகவே இங்கு காட்டப்படுவதோடு,இந்தியாவின் சிதைவுகளையும் வெளிச்சம் போடுகிறது.
“அரசாங்கம் தோண்டிய புதையல்களும்..” என்ற வரி,தனித்த சிறப்புடையது.கடந்த சில வருடங்களுக்குமுன்பு கேரளத்தின் பத்மநாப சாமி கோவிலில் புதையல் இருப்பதாகவும்,அது மத்திய அரசுக்கா,? மாநில அரசுக்கா.?
அந்தக் கோவிலை நிர்வகித்த அரண்மனை வாரிசுகளுக்கா..? என்று சொந்தம் கொண்டாடுவதற்கான சர்ச்சை, இறக்கை கட்டிப்பறந்து கொண்டிருந்தது. அப்புறம் அது “ஒண்ணுமே இல்லாமப் போச்சு..” என்பது தனி விவகாரம்.!
கவிஞனின் சிறப்பே இதுதான்.காலத்தோடு ஒட்டி அவன் இயங்கிக் கொண்டே இருக்கவேண்டும்.அவனது பதிவுகள் ஒவ்வொன்றும் அந்நாட்டின் வரலாறுகளை சுட்டுவதோடு, யதார்த்தத்தையும்,சுட்டிக் காண்பித்துக் கொண்டே இருக்கவேண்டும்.எழுத்து மூலமாக கருத்துரீதியான மாற்றங்களை ஏற்படுத்துவது என்பது இலக்கியவாதிகளின் மாபெரும் ஆயுதம்.அதனை வெட்டியாக,வேறு எதனையோ நோக்கி,வெட்டியாக,வெட்டிக் கொண்டிருப்பவனின் எழுத்துக்கள் காலவெள்ளத்தில் கரைக்கப்பட்டுவிடும் என்பதே வரலாறு.
அந்த வகையில் தோழர் வெள்ளூர் ராஜாவின் இந்தக்கவிதைகள் யுகங்களைக் கடக்கும் இறக்கைகளைப் பெற்றுக் கொண்டது.வாழ்த்துக்கள் தோழரே..!
விடைபெறும் முன் உங்கள் ரசனைக்காக ஒரு கவிதை.
"இந்த நகரம்
நரகம் தான்
இல்லை என்பதற்கில்லை
ஆலமரக் கிளிகளும்
ஒற்றையடிப் பாதை
பாப்பாத்தி வண்டுகளும் இல்லை தான்
பார்த்து ரசிக்க
ஆடுகளும் மாடுகளும்
விட்டு வந்த பொட்டல் நிலங்களுமென
தளும்பிக் கிடக்கும் உங்கள்
ஏகாந்த எழுத்துக் கிராமத்தில்
ஏமாந்த புழுக்களாய்
ஊர்ந்து கிடந்த வாழ்வு எங்களுடையது
ஆடுகளாகவும் மாடுகளாகவும்
பிடுங்கி கொண்ட பஞ்சமி நிலங்களும்
தூர்ந்து கிடக்கிறது
எங்கள் எண்ணங்களில்
நீங்கள் பேய்களுக்கும்
உச்சி முனிகளுக்கும்
பயந்து கிடந்த ஊரில்
நாங்கள்
உங்களுக்குப் பயந்து கிடந்தோம்
மறுக்கப்பட்ட கோவில்களும்
தடுக்கப்பட்ட கிணறுகளும்
ஒடுக்கப்பட்ட குரலுமாய்
நடுங்கிக் கிடந்த வாழ்வை விட்டு
இப்படிக் கை வீசி
கால்ச் செருப்போடு
சுதந்திர உலா சாத்தியமாவதால்
இந்த நரகம்
எங்களுக்குப் போதுமானதாகவே இருக்கிறது...! ----கவிஞர்.வெள்ளூர் ராஜா
இனி.. வாசிக்கச் சென்ற வழியெங்கும் வசந்தகாலம் கவிதைகளாகவே பூத்து நின்ற அனுபவத்தை,நம்பிக்கையை ஆழமாக விதைத்துச் செல்கிற ஒரு கவிஞரைப் பற்றி நாளை சொல்கிறேன்.
அன்புடன்
பொள்ளாச்சி அபி.
-------------