சடங்கு

வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் நிலைகொள்ளாமல் உலாத்திகொண்டிருந்தார் இன்பசேகரன் வாத்தியார்.ஊரில் இருந்து எடுத்து வந்த அழுக்கு துணியை துவைக்க ஊற வைத்து கொண்டிருந்த அவர் மனைவி மீனா அவர் மேல ஒரு கண்ணாகவும் வேலையில் ஒரு கண்ணாகவும் இருந்தார்.
’மாரியம்மா! அம்மா மாரியம்மா’ கோவிலில் கட்டியிருந்த ஒலிபெருக்கியில் இருந்து மெலிதாக பாட்டு கேட்டது.
முடிவெடுக்க தெரியாமல் இன்பசேகரின் மனது அலை பாய்ந்தது. “இங்க நிலைகொள்ளாமல் நிக்கறத்துக்கு, போய் பார்க்கலாம்ல” மீனா கேட்டாள்.
”போகலாம்தான் பெரிய காரியத்துக்கு போய் வந்துட்டு, இப்ப கும்பாபிஷேகம் நடக்கிற இடத்துக்கு போறது சரியானு யோசிக்கிறேன்”.
மீனா “அதுதான் காரியம் எல்லாம் முடிஞ்ச்சியில்ல அப்புறம் என்ன, அதுமில்லாம, சிதைந்திருந்த கோயில சரி பண்ண நீங்க நிறைய உதவி பண்ணியிருக்கீங்க”.
”அதெல்லாம் சரிதான், அனா இந்த ஊர் பழக்கவழக்கத்த மதிக்கலைன்னு யாரும் சொல்லிர கூடாதில்ல, வேலை பார்க்க வந்த இடத்துல எதுக்கு பொல்லாப்பு”.
”சரி அப்ப போறவங்க யாரிடமாவது தகவல் சொல்லுங்க, முன்னாடி இருந்த வீடுன்னா கூட எல்லாருக்கும் தெரிந்திருக்கும், ஸ்கூலுக்கு பக்காமா இருக்குன்னு இங்க வந்துட்டு ஒரே கஷ்டம், அக்கம் பக்கத்துல வீடு கூட இல்ல” மீனா அலுத்து கொண்டாள்.
”சரி சரி அலுத்துக்காத, சரோஜா இன்னும் வேலைக்கு வரலையா?”.
”அவளுக்கு மட்டும் பண்டிகையில்லையா! நாம வந்திருக்கிறது வேற தெரியாது”
வாத்தியார் ரோட்டில் யாராவது போறாங்களானு பாத்திட்டுருந்தார். கோயிலில் கூட்டம் சேர தொடங்கியிருக்கும் என்று நினைத்தார்.
மீனா குடத்தை தூக்கிகொண்டு உள்ளேயிருந்து வெளியே வந்தாள்.
”எங்கே குடத்த எடுத்துக்கிட்டு கிளம்பிட்ட”.
”எங்க போவாங்க தண்ணி எடுக்கத்தான், பதினைந்து நாளுக்கு
முன்னாடி, ஊருக்கு போறதுக்கு முன்னாடி எடுத்த தண்ணி, அதையே எப்படி சமைக்கிறது, குடிக்கிறது, தண்ணி கலங்கியிருக்குது, போய் எடுத்திட்டு வாரேன்”.
”எப்படி தனியா எடுத்திட்டு வருவ, இரு யாரயாவது எடுத்துட்டு வர சொல்லுரேன்”.
”ஆமா காலையிலேருந்து தகவல் சொல்ல ஆள் கிடைக்கில, இதுக்கு மட்டும் கிடைச்சுருமா”.
”சரி இரு! நான் வேணா வண்டி எடுத்திட்டு வரேன், எப்படி ஒரு கிலோ மீட்டர் தூக்கிட்டு வருவ”.
” அதெல்லாம் ஒண்ணும் வேணாம், நான் பைப்புகிட்ட போனவுடனே நான் நீனு போட்டி போட்டுக்கிட்டு தூக்க வருவாங்க, வாத்தியாரம்மாவுக்கு அந்தளவுக்கு மவுசு” சொல்லிட்டு சிரித்தாள்.
இன்பசேகரன் சிரித்தார், இருவருக்குமே தெரியும் வாத்தியாருக்கு எவ்வளவு மதிப்புன்னு, அதுவும் கோவில் கும்பாபிஷேகத்துக்கு அவர் செய்த முயற்சிக்கு அப்புறம் அது இன்னும் கூடிருச்சு.
அவர் அந்த ஊருக்கு மாறுதலில் வந்து ஆறு வருஷமாச்சு,
பெயர்தான் தலைமையாசிரியர், எல்லா வேலையையும் இழுத்து போட்டிருந்தார். பள்ளியில் சத்துணவு மதியத்துக்கு மட்டும் என்பதால் சில குழந்தைகளுக்கு தன் வீட்டில் ஏற்பாடு செய்தார்.
ஆரம்பத்தில் ஊர் மக்கள் அவ்வளவு ஓட்டுதால் காட்டல, கொஞ்சம் கொஞ்சமாக இவரின் குணத்தை பார்த்து ஏற்றுகொண்டார்கள். படித்தவர் என்பதால் தலைவர் பள்ளிக்கு மட்டுமில்லாமல் ஊர் விசயத்துக்கும் இவரின் உதவியை நாடினார்.
ஒருமுற மாமனார் ஊருக்கு வந்திருந்த போது, இருவரும் ஒரே கோவிலில் சாமி கும்பிடுகிறவர்கள் என்பதை அறிந்து இன்னும் நெருக்கம் ஆகிவிட்டார்.
முதியவர் பென்ஷன், பெண்கள் திருமணத்துக்கு அரசு உதவி பெற்று தருவது என்று அவரும் தன்னால் முடிந்ததை செய்தார். தன் வீட்டில் வேலை செய்யும் சரோஜாவுக்கும் அவர் தான் கல்யாணத்துக்கு அரசு பணம் வாங்கி தந்தார். பற்றாக்குறைக்கு தன் பணத்தையும் குடுத்து உதவினார். அவளும் தன் கடமையாக எண்ணி காசு வாங்க மறுத்து வீட்டு வேலை செய்தாள். நிறை மாதமாக வேலைக்கு வந்தவளை அவரும் மீனாவும் தான் சண்டை போட்டு அனுப்பினார்கள். பிரசவம் முடிந்த அடுத்த மாதமே வேளைக்கு வந்தாள். இப்பொழுது அடுத்த குழந்தை உண்டாகியிருப்பதாக ஊரில் இருக்கும் போது சொன்னாள்.
இந்த கும்பாபிஷேகத்துக்கு முழு முயற்சி செய்தது வாத்தியார்தான். ஊரில் எல்லாரும் தயங்கியபோது இவர் தான் அறநிலைதுறையில் பேசி அனுமதி வாங்கியது, நன்கொடை வாங்க ஒரு குழுவை அமைத்தது, கோவில் வேளை செய்ய வெளியூரில் இருந்து ஆளை வரவளைத்தது எல்லாமெ அருடைய ஏற்பாடு தான். கோவில் கமிட்டி குழுவில் எப்படி வெளியூர் ஆளை போடுவதென்று முணுமுணுப்பு எழுந்த்ப்ப ஊர் தலைவர் “ நானும் வாத்தியார் மாமனாரும் ஒரே கோயில் கும்பிடுறவங்க, எனக்கு பங்காளி முறை, அவர் மருமகன், என் மருமகன் மாதிரி” சொல்லவும் ஊரே ஒத்து கொண்டது.
அதன் பிறகு ஸ்கூல் வேலையை விட இந்த வேலை அதிகமாயிடுச்சு. பிரபலமான வித்வான்களை கோவில் விழாவிற்க்கு புக் பண்ணிணார். கடைசியாக விழா பத்திரிக்கைக்கு புரூஃப் பாத்துகிட்டுருக்கும் போது தான் அந்த செய்தி கிடைத்தது.
ஊரில் பெரியப்பா தவறிவிட்டதாக மாமாதான் போன் செய்து சொன்னார். அவ்விஷயம் வாத்தியாருக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, ஏனெனில் பெரியப்பா குடும்பத்தோடு எப்பொழுதுமே உறவு இருந்ததில்லை, அம்மா-அப்பா கல்யாணத்தில் ஏற்பட்ட பிரச்சனையிலிருந்து பெரியப்பாவிடம் பேச்சு வார்த்தையில்லை. அப்பிரச்சனைக்கு பின் அப்பாவும் ஊருக்கு செல்லவில்லை.அப்பா அம்மா வேறு அண்ணணோடு அமெரிக்காவில் இருந்த்தால் வேறு வழியில்லாமல் வாத்தியாரிடம் சொன்னார். வாத்தியார் அமைதியாயிருக்க, மாமா “இன்பா !!நல்லதுக்கில்லைனாலும் கெட்டதுக்கு கண்டிப்பாயிருக்கனும், அதுவும் பெரியப்பாவுக்கு வாரிசும் கிடையாது, நீ தான் எல்லா காரியத்தையும் செய்யனும்”.
அப்பாவும் அங்கிருந்து கூப்பிட்டு சொல்ல அரை மனதாக சம்மதித்தார்.
விஷயம் தெரிந்து வந்த ஊர் தலைவர், “நீங்க நம்ம கார் எடுத்துகிட்டு கிளம்புங்க, டிரைவர்கிட்ட சொல்லியிருக்கேன், எந்த ஊர்னு சொன்னீங்க”.
”தெரியல மாமாகிட்ட கேட்கனும்”.
தலைவர் வியப்புடன் பார்த்தார், வாத்தியாருக்கும் கூச்சமாக இருந்தது, தன் தந்தையின் பிறந்த ஊர் தெரியாததால். அப்பிரச்சனைக்கு பின் அப்பாவும் ஊருக்கு செல்லவில்லை. வாத்தியாரும், அண்ணணும் பிறந்ததுகூட அப்பா வேலை பார்த்த ஊரில்தான், அப்பா வேலை பார்த்த ஊரையே சொந்த ஊராக சொல்லி பழகியவர்கள்.அதனால் சட்டென்று ஞாபகத்தில் வரவில்லை
ஊர்தலைவர் ”பரவாயில்லை இப்ப கிளம்புங்க போறப்ப வழியில கேட்டுக்குங்க”.
”சரிங்க இத பிரிண்டிங்குக்கு கொடுத்திடுங்க, மேளகாரங்கள ரெண்டு நாளைக்கு முன்னாடியே வர சொல்லிருங்க, கும்பாபிஷேகம் அன்னிக்கு சாயங்காலம் குழந்தைங்களுக்கு விளையாட்டு போட்டி நடத்தனும், பரிசுகள் பக்கத்து டவுனில் வாங்கிட்டு வரனும்”.
”வாத்தியாரே! முதல நீங்க கிளம்புங்க, பெரியகாரியத்தை பாருங்க, இங்கயிருக்க எல்லா வேளையையும் நாங்க பார்த்துக்கிறோம். எல்லா வேலையையும் முடித்துவிட்டு கும்பாபிஷேகத்துக்கு முன்னாடியே வந்திருங்க”.
“இல்ல, நான் தான் கொள்ளி போடனுமாம், அத முடிச்சிட்டு எப்படி உடனே கோவில் விசேசத்தில் கலந்துகறாது?”
“எல்லாம் மனசுதான் காரணம், நீங்க குழப்பிகாம ஊருக்கு போய்ட்டு சீக்கரம் வந்துருங்க”
அவசர அவசரமாக ஊருக்கு போய், முதல் முறையாக பல சொந்தங்கள பார்த்து, வேறு வழியில்லாம பெரியப்பாவிற்க்கு கொள்ளி வைத்து, ஒரு மாசம் கழிச்சு காரியம் வைத்துக்கலாம்னு சொன்னவங்ககிட்ட மறுத்து காரியத்த பதினொறுனாளில் முடித்து நேற்று நள்ளிரவில் வந்து சேர்ந்தார்.
வாத்தியார் யோசனை கலைந்து நிமிர்ந்து பார்த்தார். ஊர்த்தலைவரின் டிரைவர் சைக்கிளில் செல்வது தெரிந்தது. வெளியில் வந்து கைதட்டி கூப்பிட்டு பார்த்தார். அவன் வேகவேகமாக செல்வது தெரிந்தது. பண்டிகைக்கு போகும் அவசரம் என்று நினைத்துக் கொண்டார்.
தூரத்தில் மீனா வருவது தெரிந்த்து, தலையில் ஒண்ணும் இடுப்பில் ஒண்ணும்மாக குடத்தை தூக்க முடியாமல் தூக்கி கொண்டு வருவது தெரிந்தது, வெடுவெடுவென நடந்து ஒரு குடத்தை வாங்கினார்.
”நீ ஏன் தூக்கிட்டு வர, அங்க யாருமில்லையா?
”இல்ல நான் போனப்ப இரண்டு பேர் தண்ணி பிடித்துகிட்டு இருந்தாங்க, பண்டிகைக்கு போற சந்தோஷத்துல சொல்லாம கொள்ளாம கிள்ம்பிட்டாங்க, அதான் நானே தூக்கிட்டு வந்தேன்”.
”பைப் பக்கத்துலதானே சரோஜா வீடு அவள கூப்பிடலாமில்ல”.
”கூப்பிடாம இருப்பேனா! வைத்துபிள்ளகாரி ஒடம்புக்கு முடியல போலிருக்கு, அவ புருஷன் வெளியே வந்து சொன்னான். இனிமே அவ வேலைக்கு வர மாட்டாளாம்”.
பேசிக்கொண்டே வீட்டை நெருங்கினார்கள், குடத்தை வைத்துவிட்டு நிமிர்ந்த் போது, டிரைவர் சைக்கிளை நிறுத்துவது தெரிந்தது.
”வாப்பா! என்ன தலைவர் பார்த்துவிட்டு வர சொன்னாரா?”
”ஆமா”
“நடு சாமத்தில தான் வந்தோம், நானே வரலாம்னுதான் கிளம்பிட்டு இருக்கேன்”.
”அது விஷயமாகத்தான் வந்தேன், கொள்ளி வச்சதால தீட்டாம், முப்பது நாளைக்கு கோயிலுக்குள்ள வர கூடாதாம், அதனால வர வேணாமுன்னு சொல்லிட்டு வர சொன்னார்”.
மீனா,”இல்லப்பா! அன்னிக்கு அய்யா தான் சொன்னார், காரியத்த முடித்துவிட்டு சீக்கிரம் வர சொன்னார்”.
”அதெல்லாம் எனக்கு தெரியாதும்மா, சொல்லச்சொன்னார் சொல்லிட்டேன் என்றான் வெடுக்கென”.
வாத்தியார் ஜீரணித்துக்கொண்டு ”விடு மீனா! ஊர் வழக்கம் என்னவோ அதத்தான் அவன் சொல்றான்”.
டிரைவரிடம் திரும்பி “சரிப்பா! நா வரலை அய்யாக்கிட்டே சொல்லிரு, களைப்பாயிருக்க கொஞ்சம் காபி குடிக்கிறியா?”
””அதெல்லாம் ஒண்ணும் வேணாமுங்க, நா கிளம்புறேன்”.
”ஏன் அவசரபடுர அன்னிக்கு கூட அப்படிதான் இறக்கிவிட்டுட்டு நீ பாட்டுக்கு வந்துட்ட, சாப்பிட சொன்னதுக்கு கூட சாப்பிடுல”
”பரவாயில்ல நிறைய வேலையிருக்கு நான் வரேன்” சொல்லிட்டு வேகமாக கிளம்பினான்.
வாத்தியாருக்கு ஏனோ நெஞ்சையடைத்தது. பத்னொறுனாளுக்கு முன்னாள் செத்து போன பெரியப்பாவை மனதுக்குள் வைத்தார்.
வீட்டிற்குள் எதுவும் பேசாமல் மீனா அமைதியாக அரிசி களைந்து கொண்டிருந்தாள், ஆனால் கண்களில் இருந்து வந்த தண்ணீர் காய்ந்து போன சுவடு தெரிந்தது.
”ஏய் மீனா! இதுக்கு போய் அழுவர, இப்ப என்ன இன்னும் ஒரு பதினைந்து நாளு, அதுக்கு அப்பறம் போய் சாமி கும்பிட வேண்டியதுதான்”.
”இல்லைங்க, இனிமே எப்பவுமே போக முடியாதுங்க” என்று வெடித்து அழுதாள், அகங்காரத்துடன் சட்டியை எரிந்தாள், அரிசி எங்கும் சிதரியது. வேகவேகமாக வெளியே சென்றவள், பத்து நிமிசத்தில் நோட்டிஷோடு வந்தாள்.
”இத பாருங்க! கும்பாபிஷேக பத்திரிக்கை, உங்க பேர் இதிலில்லை. நாம ஊருக்கு போனதுக்கப்புறம் மாத்தியிருக்காங்க, தீட்டுங்கறதனால உங்கள வரவேணாமுன்னு சொல்லல, நம்மள ஒதுக்கிவைக்கானும் அதனால் வரவேணாமுன்னு சொல்றாங்க”.
வாத்தியாருக்கு ஊருக்கு போகும் வழியில தலைவருக்கு தான் போகும் ஊரின் பெயரை சொன்னது, டிரைவர் சாப்பிடாமல் போனது, தண்ணீர் தூக்க ஊர் பெண்கள் மறுத்தது, சரோஜா வேலைவிட்டு நின்னது எல்லாம் மனதிரையில் வந்து போனது.
பல வருஷத்துக்கு முன்னாள் பெற்றோர் செய்த கலப்பு திருமணத்தை, பதினைந்து நாளைக்கு முன்னாடி செத்து போன பெரியப்பா,திருமணத்தில் மட்டுமில்லாமல், சவகிடங்கிலும் சாதியை கண்டுபிடிக்கும் வெறியையும், மீனாவை சமாதான படுத்த முடியாமலும், அடிக்கும் போனை எடுக்க தைரியமில்லாமலும், சோர்ந்து அழுதார்.
போனின் அந்த பக்கத்தில் தந்தையை ஒரு இனவெறி பிடித்த வெள்ளை காவலன் கீழதள்ளி முதுகை உடைத்ததை தம்பியிடம் சொல்ல முடியாமல் வாத்தியாரின் அண்ணன் அழுதார்.

எழுதியவர் : Raajesh (16-Apr-15, 10:28 am)
பார்வை : 378

மேலே